About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 22 September 2023

லீலை கண்ணன் கதைகள் - 43

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

அறிஷ்தா வதம்|

பல்வேறு அசுரர்கள் கிருஷ்ணனை கொள்ள நினைத்தன, ஆனால் அவை அனைத்தும் கிருஷ்ணன் கைகளில் மடிந்தன. இதில் அறிஷ்தா என்ற காளை மாட்டினை எப்படி வதம் செய்தார் என்று பார்ப்போம். அறிஷ்தாவின் முதுகில் பெரிய கூனல் இருந்தது, உடல் மிக பெரியது, ஓடினால் பூமி அதிரும். அது மிகவும் கோபமுற்று இருந்தது, கால்களால் பூமியை தோண்டியது, வாலினை மேலே தூக்கியது, அனைவரையும் அழிக்க பிருந்தாவனத்தை நோக்கி ஓட ஆரம்பித்தது, அதன் கொம்புகளால் அனைத்து மரங்களையும் வேரோடு சாய்த்தது. எல்லோரும் அதை பார்த்து நடுங்கி கிருஷ்ணன் காலடியில் சரணடைந்தனர்.


புதிய ஆபத்தை அறிந்த கிருஷ்ணன், "அனைவரும் பயப்படாதீர்கள். நான் உங்களை காப்பாற்றுகிறேன்" என்றான். அந்த காளையை கண்டதுமே இது கம்சனால் ஏவப்பட்டது என்று உணர்ந்தான். அதனை நோக்கி, "ஏ முட்டாளே, இந்த அப்பாவி மக்களை ஏன் பயமுறுத்துகிறாய், உன்னை போன்ற அசுரர்களை அழிக்கவே நான் இங்கு உள்ளேன்".


கிருஷ்ணன் அதன் முன்னே இருக்கைகளை தட்டினான். அதற்கு கோபம் அதிகமானதும் கிருஷ்ணனை நோக்கி ஓடி வந்தது. ஆனால் கிருஷ்ணன் அங்கு இருந்து ஒரு அடி கூட நகரவில்லை. அதன் கொம்புகளை பிடித்து பதினெட்டு அடி தூரம் தூக்கி அடித்தான். அது திரும்பவும் எழுந்து வந்து கிருஷ்ணன் முன் நின்று மூச்சினை இழுத்து இழுத்து விட்டது. அடுத்து அதன் கொம்புகளை பிடித்து தூக்கி தரையில் அடித்தான், அதன் மீது ஏறி அமர்ந்து அதன் கொம்பினை தலையிலிருந்து பிடுங்கினான். பிறகு ரத்தம் தெறித்து அது அந்த இடத்திலயே இறந்தது. கோபியர்கள் அவர்கள் உயிரை காப்பாற்றியதற்காக கிருஷ்ணனுக்கு நன்றியை கூறினார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 011 - திரு ஆதனூர் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||011. திரு ஆதனூர்||
||கும்பகோணம்|| 
||பதினொன்றாவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ ரங்கநாயகி தாயார் ஸமேத ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் பெருமாள்|| 
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர் - ஆண்டளக்கும் ஐயன்
  • பெருமாள் உற்சவர் - ஸ்ரீ ரங்கநாதர் 
  • தாயார் மூலவர் - ரங்கநாயகி
  • தாயார் உற்சவர் - பார்க்கவி
  • திருமுக மண்டலம் திசை - கிழக்கு 
  • திருக்கோலம் - புஜங்க ஸயனம்
  • புஷ்கரிணி/தீர்த்தம் - சூர்ய, சந்திர  
  • விமானம் - ப்ரணவ
  • ஸ்தல விருக்ஷம் - புன்னை, பாடலி
  • ப்ரத்யக்ஷம் - காமதேனு, திருமங்கையாழ்வார்
  • ஆகமம் - பாஞ்சராத்ரம்
  • ஸம்ப்ரதாயம் - வட கலை
  • மங்களாஸாஸநம் - 1 ஆழ்வார்
  • பாசுரங்கள் - 1

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

திருமங்கை ஆழ்வார் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலை திருப்பணி செய்த போது அவர் வைத்திருந்த பணம் அனைத்தும் செலவாகி விட்டது. பணியாளர்களுக்கு கூலி கொடுக்கக் கூட அவரிடம் பணமில்லை. எனவே, தனக்கு பண உதவி செய்யும்படி பெருமாளை வேண்டினார். அவருக்கு அசரீரியாக ஒலித்த பெருமாள், கொள்ளிடம் ஆற்றின் கரையில் ஒரு இடத்தை சுட்டிக் காட்டி அங்கு வந்தால் பணம் தருவதாக சொன்னார். திருமங்கை ஆழ்வாரும் அங்கு சென்றார். அப்போது வணிகர் ஒருவர் தலைப் பாகை அணிந்து கொண்டு, கையில் மரக்கால், ஏடு மற்றும் எழுத்தாணியுடன் அங்கு வந்தார். அவர் திருமங்கை ஆழ்வாரிடம், "உங்களுக்கு உதவி செய்ய ரங்கநாதன் என்னை அனுப்பி வைத்தான். என்ன வேண்டுமென கேளுங்கள்' என்றார். திருமங்கை அவரிடம் பணம் கேட்டார். தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லிய வணிகர் தான் வைத்திருந்த மரக்காலைக் காட்டி "இம்மரக்கால் கேட்டதைத் கொடுக்கக் கூடியது. ரங்கநாதனை வேண்டி உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைக் கேட்டால் இம்மரக்கால் கொடுக்கும்'' என்றார். திருமங்கை ஆழ்வார் பணியாளர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும் என்றார். அப்போது வணிகர், "மரக்காலில் தான் பணியாளர்களுக்கு மணலை அளந்து தருவதாகவும், உண்மையாக உழைத்தவர்களுக்கு மட்டும் அம்மணல் பொன்னாகவும், ஏமாற்றியவர்களுக்கு அது மணலாகவுமே இருக்கும்' என்றார். திருமங்கை ஆழ்வாரும் சரியென ஒப்புக் கொள்ள நிறைய பேருக்கு மணலாகவே இருந்தது. கோபம் கொண்ட பணியாளர்கள் வந்திருப்பவன் தந்திரக்காரன் என எண்ணி அவரை அடிக்க பாய்ந்தனர். வணிகர் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடினார். திருமங்கை ஆழ்வார் அவரை பின் தொடர்ந்து ஓடினார். நீண்ட தூரம் ஓடி வந்த வணிகர் இத்தலத்தில் நின்றார். அவரிடம் திருமங்கை ஆழ்வார் "நீங்கள் யார்? எதற்காக எனக்கு உதவி செய்வதாக சொல்லி ஏமாற்றினீர்கள்?' என்றார். மகாவிஷ்ணு, வணிகனாக வந்து அருளியது தானே என உணர்த்தி அவருக்கு காட்சியளித்தார். ஏட்டில், எழுத்தாணியால் எழுதி அவருக்கு உபதேசமும் செய்தார்.

கருவறையில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நாபிக் கமலத்தில் பிரம்மாவுடன் பள்ளி கொண்ட கோலத்தில் இருக்கிறார். இவர் மரக்காலை தலைக்கு வைத்து, இடது கையில் எழுத்தாணி, ஏடுடன் காட்சி தருகிறார். இதனை உலகுக்கு படியளந்த பெருமாள் ஓய்வாக பள்ளி கொண்டிருக்கும் கோலம் எனவும் சொல்கிறார்கள். காமதேனு ஸ்வாமியின் பாதத்திற்கு அருகில் அவரை வணங்கியபடி இருக்கிறாள். சிவன், பிரம்மாவின் ஒரு தலையை எடுக்க அந்த தலை அவரது கையுடனே ஒட்டிக் கொண்டது. சிவனால் தலையை தனியே எடுக்க முடியவில்லை. எனவே அந்த தலையை எரிக்கும்படி அக்னி பகவானிடம் கேட்டுக் கொண்டார் சிவன். அக்னி எவ்வளவோ முயன்றும் அவராலும் தலையை எரிக்க முடியாமல் போனதோடு பிரம்மஹத்தி தோஷமும் பிடித்துக் கொண்டது. அவர் இங்கு பெருமாளை வணங்கி சாபம் நீங்கப் பெற்றார். இவர் கருவறையில் ஸ்வாமியின் பாதத்திற்கு அருகில் இருக்கிறார். அருகில் பிருகு மகரிஷி, திருமங்கை ஆழ்வார் ஆகியோரும் இருக்கின்றனர்.

பரமபதத்தில் இருக்கும் மகாவிஷ்ணுவிற்கு முன்புறம் இரண்டு தூண்கள் இருக்கும். ஜீவன்கள் மேலே செல்லும் போது, இந்த தூண்களைத் தழுவிக் கொண்டால் பாவங்களில் இருந்து விடுபட்டு மோட்சம் கிடைக்கும். அதே போல் இத்தலத்தில் கருவறைக்கு முன்புறம் அர்த்த மண்டபத்தில் ஸ்வாமியின் பாதம், தலைக்கு நேரே இரண்டு தூண்கள் இருக்கிறது. இரட்டைப் படை எண்ணிக்கையில் வலம் வந்து இந்த தூண்களை பிடித்துக் கொண்டு ஸ்வாமியின் திருமுகம் மற்றும் திருப்பாதத்தை தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பதும், திருமணமாகாதவர்கள் தூண்களை தழுவி வணங் கினால் அப்பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. 108 திவ்ய தேசங்களில் இங்கும், ஸ்ரீரங்கத்திலும் இந்த தூண்கள் இருக்கிறது.

பிருகு மகரிஷி பாற்கடலில் மகாவிஷ்ணுவை தரிசனம் செய்த போது, மகாலட்சுமி அவருக்கு ஒரு மாலையை பரிசாக கொடுத்தாள். அம்மாலையை பிருகு இந்திரனிடம் கொடுத்தார். இந்திரனோ மாலையை தன் யானையின் மீது வைக்க அது காலில் போட்டு மிதித்தது. இதைக் கண்ட பிருகு கோபம் கொண்டு, இந்திரனை பூலோகில் சாதாரண மனிதனாக பிறக்கும்படி சபித்தார். தான் செய்த தவறை மன்னிக்கும்படி மகாவிஷ்ணுவிடம் வேண்டினான் இந்திரன். அப்போது மகாலட்சுமி "தான் பூலோகத்தில் பிருகு மகரிஷியின் மகளாக பிறந்து பெருமாளை திருமணம் செய்யும் போது சாபம் நீங்கப் பெறும்' என்றார். அதன்படி மகாலட்சுமி பிருகுவின் மகளாக பிறந்தாள். பெருமாள் இத்தலத்தில் அவளை திருமணம் செய்து கொண்டார். இங்கு வந்த இந்திரன் பெருமாளையும், மகாலட்சுமியையும் வணங்கினான். மகாவிஷ்ணு அவனுக்கு பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தந்து சாப விமோசனம் கொடுத்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 36 - பெரியாழ்வார் திருமொழி - 1.2.14

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 36 - ஆய்ச்சியர் விரும்பும் அழகிய சிவந்த வாய்
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - பதிநான்காம் பாசுரம்

எந்தொண்டை வாய்ச் சிங்கம்* வா என்றெடுத்துக் கொண்டு* 
அந்தொண்டை வாய்* அமுதாதரித்து* 
ஆய்ச்சியர் தம் தொண்டை வாயால்* தருக்கிப் பருகும்* 
இச் செந் தொண்டை வாய் வந்து காணீரே!* 
சேயிழையீர்! வந்து காணீரே|

  • எம் - எமது
  • தொண்டை - கோவைப்பழம் போன்ற
  • வாய் - அதரத்தை உடைய 
  • சிங்கம் - சிங்கக்குட்டியே
  • வா என்று - எம் பக்கம் வா என்று
  • எடுத்துக் கொண்டு - இடுப்பில் எடுத்துக் கொண்டு 
  • அம் தொண்டை - அழகிய சிவந்த 
  • வாய் - கண்ணனுடைய அதரத்தில் 
  • அமுது - ஊறுகிற அம்ருதத்தை 
  • ஆதரித்து - மிகுந்த அன்பினால் விரும்பி
  • ஆய்ச்சியர் - இடைப்பெண்கள் 
  • தம் - தங்களுடைய 
  • தொண்டை வாயால் - கோவை வாயால் 
  • தருக்கி பருகும் - கண்ணன் வாயோடு நெருக்கி விரும்பி சுவைக்கும்  
  • இச் செம் தொண்டை வாய் வந்து காணீரே - இந்தச் சிவந்த கோவை வாயழகை வந்து பாருங்கள்!
  • சேயிழையீர்! - சிவந்த ஆபரணம்  பூண்ட, புன்னகை மிளிரும் சிங்காரப் பெண்களே!
  • வந்து காணீர்! - வந்து பாருங்கள் 

இடைப்பெண்கள், கண்ணனின் வாயழகில் மயங்கி, கோவைப்பழம் போல் சிவந்த நிறமுடைய என் சிங்கமே'', என்னிடம் வாடா என்று கொஞ்சி அவனை அழைத்து, கையிலெடுத்து அள்ளி இடுப்பில் எடுத்து அணைத்துக் கொண்டு, மிகுந்த அன்போடு தங்கள் இதழ்களால் முத்தமிட்டு, கிடைக்காத அரிய செல்வம் கிடைத்துவிட்ட செருக்குடன் அவன் வாயோடு முத்தம் வைத்து, அவன் செவ்விதழில் ததும்புகின்ற திருவாய் அமுதினை, விரும்பி சுவைப்பர். அத்தகைய தித்திக்கும் மதுரமான கண்ணனின் தேனமுது தத்தளிக்கும், கோவைப்பழம் போல் சிவந்த வாயினை வந்து பாருங்கள் செவ்விய அணிகலன் பூண்ட, புன்னகை மிளிரும் சிங்காரப் பெண்களை அழைக்கிறாள் யசோதை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.37

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.37

தஸ்மாந் நார்ஹா வயம் ஹந்தும் 
தா⁴ர்தராஷ்ட்ராந் ஸ்வபா³ந் த⁴வாந்|
ஸ்வஜநம் ஹி கத²ம் ஹத்வா 
ஸுகி²ந: ஸ்யாம மாத⁴வ||

  • தஸ்மாத் - அதனால் (இதிலிருந்து)
  • ந - என்றுமில்லை 
  • அர்ஹா - தகுதியுடைய 
  • வயம் - நாம் 
  • ஹந்தும் - கொல்ல 
  • தா⁴ர்தராஷ்ட்ராந் - திருதராஷ்டிரரின் மகன்கள் 
  • ஸ்வபா³ந்த⁴வாந் - நண்பர்களுடன் 
  • ஸ்வஜநம் - உறவினர்கள் 
  • ஹி - நிச்சயமாக 
  • கத²ம் - எவ்வாறு 
  • ஹத்வா - கொல்வதால் 
  • ஸுகி²நஸ் - மகிழ்ச்சி 
  • ஸ்யாம - நாம் அடைவோம் 
  • மாத⁴வ - செல்வத் திருமகளின் நாயகரே கிருஷ்ணரே 

மாதவா! கெளரவரோ நம் உறவினர்கள் அவர்களைக் கொல்வது தகாது, பந்துக்களைக் கொன்ற பின் எங்ஙனம் இன்பம் பெற முடியும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்