About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 16 September 2023

லீலை கண்ணன் கதைகள் - 38

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

வருணன் நந்தகோபரை பிடித்துச் செல்லுதல்|

ஒரு நாள் நந்தகோபர் யமுனையில் குளிக்க சென்றிருந்தார். அப்பொழுது அதிகாலை நேரம். அதனால் இருட்டாகவே இருந்தது. அந்த நேரம் வருணனின் தூதர்களில் ஒருவன் நந்தகோபர் குளிப்பதை பார்த்தான் அவன் நந்தகோபரை இழுத்துக் கொண்டு, வருணனிடம் கொண்டு சென்று விட்டான். நதிக்கு சென்ற நந்தகோபர் திரும்பி வராததை கண்டு எல்லோரும் அழ ஆரம்பித்தார்கள். அனைவரும் கிருஷ்ணனிடம் சென்று முறையிட்டார்கள். கிருஷ்ணன் கண்களை மூடிக் கொண்டு தன் யோக சக்தியை பயன்படுத்தி இது வருணனின் குறும்புத்தனம் என்று தெரிந்துக் கொண்டான். உடனே கிருஷ்ணன் அந்த நதி கரைக்கு சென்று அதில் குதித்து வருணன் இருக்கும் இடம் சென்றடைந்தான். வருணன் கிருஷ்ணனின் காலில் விழுந்து வணங்கி தன் இரண்டு கைகளையும் கூப்பி கிருஷ்ணனை பார்த்து, "பகவானே இன்று நான் ஆசிர்வதிக்க பட்டேன். உங்களுடைய பாதம் எங்கெல்லாம் படுகிறதோ அதை தொடுகிறவர்கள் பிறவிக் கடலிலிருந்து காப்பாற்ற படுகிறார்கள். என்னையும் எனது தூதரையும் மன்னித்து அருளுங்கள். உங்களுடைய தந்தையை நீங்கள் அழைத்து செல்லலாம்".


கிருஷ்ணன் அதை ஏற்றுக் கொண்டு மனதில் சந்தோஷந்துடன் அவன் தந்தையுடன் வீடு திரும்பினான். இதை பார்த்த கோபியர்கள் மனதில் அவன் தெய்வமாகவே தோன்றினான். பல நாட்களாக அவர்கள் மனதில் கிருஷ்ணனை பற்றி முழுவதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், அவன் வசிக்கும் வைகுண்டத்தை பார்க்க வேண்டும் என்றும் ஆசை வைத்திருந்தார்கள். அவர்கள் மனதில் உள்ள ஆசையை அறிந்து கொண்ட கிருஷ்ணன் அதை பூர்த்தி செய்தான். அதன் விளைவாக கோபியர்கள் வைகுண்டத்தை பார்த்தனர், அவர்கள் நாராயணனை கிருஷ்ணனாக பார்த்தார்கள், எல்லா தேவர்களாலும் போற்ற பட்டார். இன்னொரு புறம் திரும்பி அவர்கள் பக்கம் பார்த்தால் அங்கும் கிருஷ்ணன் இருந்தான். அதன் பிறகு அவர்கள் மறுபடியும் பிருந்தாவனம் வந்தடைந்தனர். கோபியர்கள் வைகுண்டத்தை பார்த்ததை அவர்களாலே நம்ப முடியவில்லை. பகவான் கிருஷ்ணனின் லீலைகளே ஆச்சரியம் தான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 009 - திருக்கவித்தலம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||009. திருக்கவித்தலம்|| 
||க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் - கபிஸ்தலம் - கும்பகோணம்||
||ஒண்பதாவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ கஜேந்திர வரதன் பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ ரமாமணிவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ கஜேந்திர வரதன் பெருமாள்||
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர் - கஜேந்திர வரதன்
  • பெருமாள் உற்சவர் - ஆதிமூலப் பெருமாள், கண்ணன்
  • தாயார் மூலவர் - ரமாமணிவல்லி
  • தாயார் உற்சவர் - பொற்றாமரையாள்
  • திருமுக மண்டலம் திசை - கிழக்கு 
  • திருக்கோலம் - புஜங்க ஸயனம்
  • புஷ்கரிணி/தீர்த்தம் - கஜேந்திர, கபில
  • விமானம் - ககனாக்ருதி
  • ஸ்தல விருக்ஷம் - மகிழம்பூ
  • ப்ரத்யக்ஷம் - கஜேந்திரன், ஆஞ்சநேயர்
  • ஆகமம் - வைகாநஸம்
  • ஸம்ப்ரதாயம் - தென் கலை
  • மங்களாஸாஸநம் - 1 ஆழ்வார்
  • பாசுரங்கள் - 1

------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

இத்தலபெருமாளை ஆழ்வார் "ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன்' என பாடினார். அன்றிலிருந்து கண்ணன் என்ற பெயரே பெருமாளுக்கு வழங்கி வருகிறது. திருக்கண்ண மங்கை, திருக்கண்ணபுரம், கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி ஆகிய பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று. 108 திருப்பதிகளில் இத்தலத்தில் மட்டும் தான் பெருமாள் இரண்டு விலங்கினங்களுக்கு காட்சி கொடுத்துள்ளார். ஆதிமூலமே! என்று அழைத்தால் போதும். உடனே வந்து காத்திடுவார் இத்தல பெருமாள்.

கஜேந்திர மோக்ஷத்தை சேவிக்க வேண்டும் என்று ஆஞ்சநேயர் பிரார்த்திக்க இந்த க்ஷேத்திரத்தில் தவம் இருக்கும் படி பெருமாள் கூற அதன் படி அவரும் தவம் இருந்தார். கபியான ஆஞ்சநேயரின் கோரிக்கைக்கு இணங்க இங்கு கஜேந்திர வரதனாக சேவை சாதித்துள்ளார். இதனால் கபிதலம் என்று பெயர் பெற்றது.

இந்திராஜும்னன் எனும் மன்னன் மிகச் சிறந்த விஷ்ணு பக்தனாக இருந்தான். சதா சர்வ காலமும் விஷ்ணு சிந்தனையிலேயே இருப்பான். விஷ்ணுவை கும்பிடாமல் எந்த ஒரு செயலையும் செய்ய மாட்டான். ஒரு நாள் அவன் இவ்வுலகத்தையே மறந்த நிலையில் விஷ்ணு பூஜை செய்து கொண்டிருந்தான். இது போன்ற நேரங்களில் யாரும் அவனை காண வருவதும் இல்லை. இவனும் யாரையும் காண்பதும் இல்லை. இப்படி அவன் பூஜை செய்து கொண்டிருந்த வேளையில் கோபக்கார துர்வாச முனிவர் அவனைக் காண வந்தார். இவர் வந்து வெகு நேரம் ஆனது. ஆனாலும் மன்னன் தன் பக்திக் குடிலை விட்டு வெளியே வரவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த துர்வாசர் மன்னன் இருந்த குடிலுக்குள் சென்று அவன் முன்னால் நின்றார். அப்போதும் கூட மன்னன் வந்திருப்பதை அறியாமல் ஆழ்ந்த பக்தியில் மூழ்கி இருந்தான். இதனால் முனிவர் கடும் கோபத்துடன் உரத்த குரலில் ’மன்னா! நீ மிகவும் கர்வம் உள்ளவனாகவும் பக்தியில் சிறந்தவன் என்ற மமதை கொண்டவனாகவும் இருப்பதாலும் நீ விலங்குகளில் மதம் பிடித்த யானையாக போவாய்''என சபித்தார். முனிவர் போட்ட கடும் சத்தத்தினால் கண் விழித்த மன்னன் அதிர்ந்து போனான். அவரிடம் மன்னிப்பும் பாப விமோசனமும் கேட்டான். இவனது நிலை உணர்ந்த முனிவர் அவன் மீது இரக்கம் கொண்டு ‘நீ யானையாக இருந்தாலும் அப்போதும் திருமால் மீது பக்தி கொண்ட கஜேந்திரனாக திகழ்வாய்'' என்று கூறினார். அத்துடன் ’ஒரு குளத்தில் உள்ள முதலை உனது காலை பிடிக்கும். அப்போது நீ "ஆதிமூலமே!' என மகாவிஷ்ணுவை அழைக்க அவர் ஓடி வந்து உன்னை காப்பாற்றி உனக்கு மோட்சமும் சாப விமோசனமும் கிடைக்கும் ''என்றார். ஒரு முறை கூஹு என்னும் அரக்கன் குளத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தண்ணீரில் இருந்து கொண்டு அங்கு வந்து குளிப்போரின் காலைப் பிடித்து இழுத்து கொடுமை படுத்துவதையே  தொழிலாக கொண்டிருந்தான். ஒரு முறை அகத்திய மாமுனிவர் சிவனின் கட்டளைப்படி தென் திசை நோக்கி வந்து கொண்டு இருந்தார். அப்போது சிவ பூஜை செய்யும் நேரம் வந்தது. அருகிலிருந்த குளத்தில் நீராடினார். அங்கு இருந்த அரக்கன் அகத்தியரின் காலைப் பிடித்தான். இதனால் அகத்தியர் கடும் கோபம் கொண்டார். அவர், "நீ வருபவர்களை எல்லாம் காலைப் பிடித்து இழுப்பதால் முதலையாக மாறுவாய்'' என சபித்தார். அவன் அகத்தியரிடம் சாப விமோசனம் கேட்டான். 

அகத்தியர் ’கஜேந்திரன் என்ற யானை இந்த குளத்திற்கு வரும் போது நீ அதன் காலைப் பிடிப்பாய் அப்போது அதைக் காப்பாற்ற திருமால் வருவார். அவரது சக்ராயுதம் பட்டு உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்''என்றார். இந்த கபிஸ்தத்தின் கோயில் முன்பு கிழக்கு திசையில் உள்ள கபில தீர்த்தத்தில் ஒரு நாள் கஜேந்திரன் நீர் அருந்த இறங்கியது. இதைக் கண்ட முதலை யானையின் காலைக் கவ்வியது."ஆதிமூலமே! காப்பாற்று' என யானை கத்தியவுடன் கருட வாகனத்தில் லட்சுமி சமேதராக விஷ்ணு வந்து சக்ராயுதத்தால் முதலையை அழித்து கஜேந்திரனுக்கு மோட்சமளித்ததாக வரலாறு.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 31 - பெரியாழ்வார் திருமொழி - 1.2.9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 31 - தாம்பினால் கட்டப்பட்ட திருவயிறு
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்

அதிரும்* கடல் நிற வண்ணனை* 
ஆய்ச்சி மதுர முலை ஊட்டி* வஞ்சித்து வைத்துப்* 
பதறப் படாமே* பழந்தாம்பால் ஆர்த்த* 
உதரம் இருந்தவா காணீரே* 
ஒளி வளையீர்! வந்து காணீரே|

  • அதிரும் - கோஷிக்கின்ற
  • கடல்நிறம் - கடலினது நிறம் போன்ற
  • வண்ணனை – நிறத்தை உடைய கண்ணனுக்கு
  • ஆய்ச்சி - யசோதையானவள்
  • மதுரம் முலை ஊட்டி - இனிய முலைப் பாலை ஊட்டி
  • வஞ்சித்து வைத்து - தான் இவனைக் கட்டப் போகிறதை இவன் அறியா வண்ணம் ஏமாத்தி
  • பதறப் படாமே - தன் எண்ணம் தப்பாதபடி
  • பழ தாம்பால் - பழைய கயிற்றாலே
  • ஆர்த்த – கட்டி வைத்த
  • உதரம் இருந்தவா காணீரே - திருவயிற்றின் அழகை வந்து பாருங்கள்
  • ஒளிவளையீர் வந்து காணீரே – ஒளி மிக்க வளையை உடைய பெண்களே! வந்து பாருங்கள்

பெருத்த அலைகளின் சப்தங்களோடு கூடிய பெருங்கடலின் நீலவண்ண தேகம் கொண்ட கண்ணனை யசோதை இனிமையான தாய்ப்பால் கொடுப்பதாக கூறி, அவனை தன்னருகே வரவழைத்த யசோதை அன்னை, அப்படியே அவனை மிகவும் கவனமாய் அவனறியாதபடி ஏமாற்றி அருகில் கிடந்த ஆநிரைக் கட்டுவதற்குப் பயன்படுத்திய பழைய கயிற்றை எடுத்து, இடுப்பில் கட்டி அவன் ஓடாதபடி உரலோடு கட்டி வைத்து விடுவாளாம். கட்டி வைத்ததும் சும்மா நில்லாது, உரலையும் சேர்த்து இழுத்துக் கொண்டே நடப்பானாம். அதனால், அவன் வயிற்றில் தாம்புக் கயிற்றின் தழும்பும் தப்பாமல் ஒட்டிக் கொண்டது. தாம்பு கயிற்றினால் ஏற்பட்ட தழும்புடன் கூடிய கண்ணனின் திருவயிற்றை காண வருமாறு ஒளிமிக்க வளைகளை கையில் அணிந்திருக்கும் பெண்களை அழைக்கிறாள் யசோதை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.32

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.32

ந காங்க்ஷே விஜயம் க்ருஷ்ண 
ந ச ராஜ்யம் ஸுகா²நி ச।
கிம் நோ ராஜ்யேந கோ³விந்த³ 
கிம் போ⁴கை³ர் ஜீவிதேந வா॥

  • ந - இல்லை 
  • காங்க்ஷே - விரும்பிகிறேன் 
  • விஜயம் - வெற்றி 
  • க்ருஷ்ண - கிருஷ்ணரே 
  • ந - இல்லை 
  • ச - மேலும் 
  • ராஜ்யம் - ராஜ்ஜியம் 
  • ஸுகா²நி - அதன் இன்பம் 
  • ச – மற்றும்
  • கிம் - என்ன பலன் 
  • ந - நமக்கு 
  • ராஜ்யேந - ஆட்சியினால் 
  • கோ³விந்த³ - ஹே கோ³விந்தா
  • கிம் - என்ன 
  • போ⁴கை³ர் - இன்பம் 
  • ஜீவிதேந - வாழ்வதால் 
  • வா - அல்லது 

கோவிந்தா! இவற்றால் வாழ்க்கையில் ஆவது என்ன? ராஜ்யம், போகம், இன்பம் யாருக்காக? இதனால் பெறக்கூடிய வெற்றியையோ ராஜியத்தையோ அதன் இன்பத்தையோ நான் விரும்பவில்லை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்