About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 26 August 2023

லீலை கண்ணன் கதைகள் - 28

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கிருஷ்ணனும் தன் நண்பர்களும்|

தம் நண்பர்களைக் காப்பாற்றி விட்டு கிருஷ்ணன் அவர்களை யமுனை நதிக் கரைக்கு அழைத்து வந்தான். அவனுக்கு மிகவும் பசியாக இருந்தது. ஆதலால் அவன் நண்பர்களை பார்த்து, "இதோ பாருங்கள், உச்சிப் பொழுது ஆகி விட்டது. நாம் எல்லோரும் பசியாக இருக்கிறோம். இங்கேயே உட்கார்ந்து நாம் கொண்டு வந்திருக்கும் உணவைச் சாப்பிடுவோம்" என்று சொன்னான். கிருஷ்ணன் சொல்லுக்கு ஏது மறுப்பு! எல்லாச் சிறுவர்களும் அவன் சொன்னதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்கள். கன்றுகளைத் தண்ணீர் குடிக்க விட்டு பிறகு நல்ல புல் இருந்த இடத்தில் மேய விட்டார்கள். பிறகு கிருஷ்ணன் நடுவில் உட்கார அவனைச் சுற்றி அவனுடைய நண்பர்கள் உட்கார்ந்து கொண்டு, எல்லோரும் தங்கள் உணவுப் பொட்டலங்களைப் பிரித்தார்கள்.


பிறகு ஒருவரை ஒருவர் வேடிக்கையாகப் பரிகசித்து கொண்டு உற்சாகமாகச் சாப்பிட்டார்கள். பார்ப்பதற்கு எவ்வளவு எழிலான காட்சி! நாம் கிருஷ்ணனை படங்களாகவும், விக்கிரங்களாகவும் வடித்து நிவேதனம் செய்கிறோம். ஆனால் இந்தச் சிறுவர்கள் என்ன பாக்கியம் செய்திருக்க வேண்டும்! உயிருள்ள கிருஷ்ணனைத் தங்களுடன் உட்கார வைத்துக் கொள்வதற்கு! கிருஷ்ணன் பார்க்க எப்படி இருந்தான்? அவன் தன் இடையில் ஆடைக்கும், வயிற்ருக்கும் நடுவே புல்லாங்குழலை செருகி வைத்திருந்தான். அவன் மஞ்சள் பட்டாடை உடுத்திருந்தான். அவனுடைய இடது கக்கத்தில் கொம்பினாலான ஊதலையும், இடக் கையில் ஒரு சிறு கழியையும் வைத்திருந்தான். வலக் கையில் வெள்ளை வெளேரென்று தயிர் சாத உருண்டைகள் இருந்தன. அவன் தன் பரிகாச வார்த்தைகளால் அங்கிருந்த சிறுவர்களைச் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தான். கிருஷ்ணனின் பரிகாச வார்த்தைகளைக் கேட்டுச் சிரித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவர்களுக்குத் தங்கள் கன்றுகளைப் பற்றிய நியாபகம் இருக்கவில்லை.


பக்கத்தில் மேய்ந்துக் கொண்டிருந்த கன்றுகள் மெல்ல வெகு தூரம் சென்று விட்டன; அடர்ந்த காட்டை அடைந்து விட்டன. திடீரென்று ஒரு சிறுவன் கன்றுகள் காணவில்லை என்பதைக் கண்டான். "கன்றுகள் எங்கே? அவை அடர்ந்த காட்டுக்குள் சென்று விட்டன என்று தோன்றுகிறது. காட்டு மிருங்கங்கள் அவற்றை விழுங்கி விடுமே!" என்று கத்தினான். இதை கேட்டு எல்லாச் சிறுவர்களும் கவலைப்படத் தொடங்கினார்கள். ஆனால் கிருஷ்ணன் அவர்களைச் சமாதானப் படுத்தினான். "கவலைப்படாதீர்கள் இந்த சிறிய விஷயத்திற்காக, சாப்பிடுவதை நிறுத்தாதீர்கள். நான் போய் நொடியில் கன்றுகளைத் தேடி வருகிறேன்" என்று சொன்னான். கையில் தயிர்ச் சாதத்தை வைத்துக் கொண்டே கிருஷ்ணன் கன்றுகளைத் தேடப் புறப்பட்டான். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 006 - திருப்பேர் நகர் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||006. திருப்பேர் நகர்|| 
||பஞ்ச ரங்க க்ஷேத்திரம் - கோவிலடி – திருச்சி||
||ஆறாவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ அப்பக்குடத்தான் பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ இந்திராதேவி தாயார் ஸமேத ஸ்ரீ அப்பக்குடத்தான் பெருமாள்| 
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர் - அப்பக்குடத்தான்
  • பெருமாள் உற்சவர் - அப்பால ரங்கநாதர்
  • தாயார் மூலவர் - இந்திராதேவி
  • தாயார் உற்சவர் - கமலவல்லி
  • திருமுக மண்டலம் திசை - மேற்கு
  • திருக்கோலம் - புஜங்க ஸயனம்
  • புஷ்கரிணி/தீர்த்தம் - இந்திர, திருக்காவேரி, கொள்ளிடம்
  • விமானம் - இந்திர
  • ஸ்தல விருக்ஷம் - புரஷ
  • ப்ரத்யக்ஷம் - உபமன்யு, பராசரர்
  • ஆகமம் - பாஞ்சராத்ரம்
  • ஸம்ப்ரதாயம் - தென் கலை
  • மங்களாஸாஸநம் - 4 ஆழ்வார்கள்
  • பாசுரங்கள் - 33

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

உபமன்யுவிடமிருந்து பெருமாள் அப்பக்குடத்தை பெற்றதால் இவருக்கு "அப்பக்குடத்தான்' என்ற திருநாமம் ஏற்பட்டது. இப்பெருமாளின் வலது கை ஒரு அப்பக்குடத்தை அணைத்த வண்ணம் உள்ளது. இந்திரனுக்கு கர்வம் போக்கியும், மார்க்கண்டேயருக்கு எம பயம் போக்கியும், உபரிசிரவசு மன்னனுக்கு சாபம், பாவம் போக்கியும் அருளிய தலம். மிகவும் பழமையான இத்தலம் ஸ்ரீரங்கத்திற்கும் முன்னதாக ஏற்பட்டது என்றும், அதனால் தான் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஆதியாக அடியெடுத்து வைத்த தலம் என்பதால் "கோவிலடி' எனப்பட்டது என்றும் கூறுவர். நம்மாழ்வார் கடைசியாக மங்களாசாசனம் செய்த தலம் இது. அவர் இப்பெருமாளை பாடி விட்டுத் தான் மோட்சத்திற்கு சென்றார். எனவே இத்தலம் வந்து வழிபடுவோருக்கு வைகுண்ட வாசம் நிச்சயம் என்பது ஐதீகம். பெருமாள் மேற்கு பார்த்தும், தாயார் கிழக்கு பார்த்தும் "தம்பதி ஸமேத பெருமாளாக' அருள் பாலிக்கிறார். 

திருமங்கையாழ்வார் இவரை மங்களாசாசனம் செய்து விட்டு திருவெள்ளறை செல்கிறார். அப்பக்குடத்தான் தொடர்ந்து அங்கும் செல்கிறார். இதைக் கண்ட திருமங்கையாழ்வார், திருவெள்ளறையில் வைத்து மீண்டும் இவரை மங்களாசாசனம் செய்கிறார்.

பெருமாளின் "பஞ்சரங்க தலம்' என்று சொல்லக் கூடிய ஐந்து அரங்களில் இதுவும் ஒன்று.

  • 1. ஆதி ரங்கம் – ஸ்ரீரங்கப்பட்டினம் (மைசூர்)
  • 2. அப்பால ரங்கம் - திருப்பேர்நகர் (கோவிலடி)
  • 3. மத்திய ரங்கம் - ஸ்ரீரங்கம்
  • 4. சதுர்த்த ரங்கம் - கும்பகோணம்
  • 5. பஞ்ச ரங்கம் - இந்தளூர் (மயிலாடுதுறை)

இந்த பஞ்ச ரங்க வரிசையில் பார்த்தால் கோவிலடி ஸ்ரீரங்கத்திற்கும் முற்பட்டது என விளங்கும்.

உபமன்யு என்ற மன்னன் கோபக்கார துர்வாசரின் சாபத்திற்கு ஆளாகி, தன் பலமிழந்தான். தன்னை மன்னித்து சாப விமோசனம் தர வேண்டி துர்வாசரிடம் மன்றாடினான். அதற்கு துர்வாச முனிவர், 'மன்னா! பலசவனம் எனப்படும் இத்தலத்தில் லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தால் உனது சாபம் தீரும்', என்றார். இதன்படி மன்னன் கோயிலின் அருகிலேயே ஒரு அரண்மனை கட்டி அன்னதானம் செய்து வந்தான். இந்த அன்னதானம் நீண்ட நாள் நடந்தது. ஒரு நாள் வைகுண்ட நாதனான ஸ்ரீமன் நாராயணன், வயதான அந்தணர் வேடத்தில் இங்கு வந்து அன்னம் கேட்க, அவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. மன்னனை சோதனை செய்ய நினைத்தார் பெருமாள். அன்றைய பொழுது தயாரிக்கப்பட்ட உணவு அனைத்தையும் உண்டு தீர்த்தார். இதனால் ஆச்சரியப்பட்ட மன்னன், 'ஐயா! தங்களுக்கு இன்னும் என்ன வேண்டும்,' என கேட்டான். அதற்கு அவர், 'எனக்கு ஒரு குடம் அப்பம் வேண்டும்,'என்றார். அதன்படி அப்பம் செய்து கொண்டு வரப்பட்டது. அந்த அப்பக்குடத்தை பெருமாள் வாங்கியவுடன் உபமன்யுவின் சாபம் தீர்ந்தது என தல வரலாறு கூறுகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 22 - பெரியாழ்வார் திருமொழி - 1.1.10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 22 - பாவம் பறந்து விடும்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - முதலாம் திருமொழி - பத்தாம் பாசுரம்

செந்நெலார் வயல் சூழ்* திருக்கோட்டியூர்* 
மன்னு நாரணன்* நம்பி பிறந்தமை*
மின்னு நூல்* விட்டு சித்தன் விரித்த* 
இப்பன்னு பாடல் வல்லார்க்கு* இல்லை பாவமே! (2)

  • செம் நெல் - செந்நெல் தாந்யங்களால்
  • ஆர் - நிறையப் பெற்ற
  • வயல் - கழனிகளாலே
  • சூழ் - சூழப்பட்ட
  • திருக்கோட்டியூர் - திருக்கோட்டியூரிலே
  • மன்னு - நித்யவாஸம் பண்ணுகிற
  • நாரணன் - நாராயணன்
  • நம்பி - ஸர்வகுண பூர்ணனான ஸர்வேச்வரன்
  • பிறந்தமை - திரு அவதரித்த பிரகாரத்தை
  • மின்னு - விளங்கா நின்ற 
  • நூல் - பூணூலை உடைய
  • விட்டுசித்தன் - பெரியாழ்வார்
  • விரித்த - விஸ்தரித்து அருளிச் செய்த
  • பன்னு - ஜ்ஞாநிகள் எப்போதும் அநுஸந்திக்கக் கடவதான
  • இப் பாடல் - இப்பரசுரங்களை
  • வல்லார்க்கு - கற்றவர்களுக்கு
  • பாவமில்லை - பாபமில்லை

திருவாய்ப்பாடியில் திருவவதரித்த கண்ணன்தான், செந்நெல் தானியங்கள் நிரம்பியும், வயல்களால் சூழப்பட்டதுமான, திருக்கோட்டியூரில் ஸ்ரீமந்நாராயணனாக பரிபூர்ணனாய் எழுந்தருளியிருக்கிறான். பூணூலை அணிந்த விஷ்ணுசித்தன் (பெரியாழ்வார்) அருளியதும், ஞானிகள் எப்பொழுதும் அநுஸந்திக்க வல்லதும், நாரணன் கண்ணனாக அவதரித்த விஷயத்தை விஸ்தரிப்பதுமான, இப்பத்து பாசுரங்களை ஓதுபவர்களுக்கு பாவங்கள் அழிந்துபோகும் என்பதில் ஐய்யமில்லை.

அடிவரவு: வண்ணம் ஓடுவார் பேணி* உறி கொண்ட கை* வாய் பத்து கிடக்கில்* செந்நெல் - சீதக் கடலுள்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.22

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.22 

யாவதே³ தாந்நி ரீக்ஷேஹம்
யோத்³து⁴ காமா நவஸ்தி²தாந்|
கைர்மயா ஸஹ யோத்³ த⁴வ்யம்
அஸ்மிந் ரண ஸமுத்³யமே||

  • யாவத்³ - எவ்வளவு நேரம்
  • ஏதாந் - இவர்களையெல்லாம் 
  • நிரீக்ஷே - பார்க்கும்படி 
  • அஹம் - நான் 
  • யோத்³து⁴ காமாந் - சண்டையிட விருப்பம் கொண்டுள்ள 
  • அவஸ்தி²தாந் - போர்க்களத்தில் அணிவகுத்துள்ள 
  • கைர் - யாருடன் 
  • மயா - என்னால் 
  • ஸஹ - இணைந்து 
  • யோத்³ த⁴வ்யம் - சண்டையிட வேண்டும் 
  • அஸ்மிந் - இந்த 
  • ரண - போர் 
  • ஸமுத்³யமே – தொடக்கத்தில்

சண்டையிட விருப்பம் கொண்டு போர்க் களத்தில் அணி வகுத்துள்ள, இந்தப் போர் முயற்சியில் நான் யாருடன் இணைந்து சண்டையிட வேண்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்