About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 14 August 2023

லீலை கண்ணன் கதைகள் - 19

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கிருஷ்ணனின் குறும்புகள்| 2

கிருஷ்ணனின் குறும்பு தனத்தை புகார் செய்வவே தினம் தினம் ஒவ்வொரு கோபிகைகள் யசோதையிடம் வருவார்கள். 


ஒரு கோபி சொல்லுவாள்: "நான் மிகவும் எச்சரிக்கையாக இருந்ததனால், என் வீட்டில் சாப்பிட, கிருஷ்ணனால்  ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவன் தூங்கிக் கொண்டிருந்த என் குழந்தையைக் கிள்ளி அழ வைத்துவிட்டுக் குறும்புச் சிரிப்பு சிரித்துக் கொண்டே சென்று விட்டான்". 

இன்னொரு கோபி சொல்லுவாள்: "நான் என் வீட்டில் பாலையும் தயிரையும் மேலே உத்திரத்திலிருந்து தொங்கும் உறியில் வைத்திருந்தேன். கிருஷ்ணனும், பலராமனும் அங்கு வந்தார்கள். ஆனால் அது அவர்களுக்கு எட்டவில்லை. ஆகவே அவர்கள் ஒரு தந்திரம் செய்தார்கள். சில பலகைகளை ஒன்றின்மீது ஒன்றாக அமைத்தார்கள். அவற்றின்மீது, நான் உட்கார்ந்து தயிர் கடைவதற்காகப் பயன்படுத்தும் முக்காலியை வைத்தார்கள். முக்காலியின் மீது பலராமன் ஏறினான். அப்பொழுதும் பானை எட்டவில்லை. அதனால் பலராமன் வளைந்து கொடுக்க, கிருஷ்ணன் அவன் முதுகின் மீது ஏறினான். 


பானை எட்டவே, எல்லா வெண்ணையையும் சாப்பிட்டு தீர்த்தார்கள். அப்பொழுது நான் வீட்டிற்குள் நுழைந்து கிருஷ்ணனின் கையைப் பிடித்தேன். ஆனால் அவன் என்னைக் கண்டு பயப்படவில்லை. என்னைப் பார்த்து, நான் இந்த வீட்டின் சொந்தக்காரன், நீ தான் திருடி என்றான்".

இன்னொரு கோபி சொல்லுவாள்: "நான் அப்பொழுது தான் வீட்டை மெழுகிச் சுத்தமாக வைத்திருந்தேன். கிருஷ்ணன் வந்து வெண்ணெய் கேட்டான். என்னிடம் வெண்ணெய் இல்லை என்று சொன்னேன். பிறகு நான் வீட்டு வேலையைக் கவனித்துக் கொண்டிருந்த வேளையில் அவன் தெரு மண்ணை எல்லாம் என் வீட்டுத் தரையில் இரைத்து விட்டு ஓடி விட்டான்".


இப்படி எல்லாக் கோபிகளும் யசோதையிடம் முறையிடுவார்கள். ஆனால் ஒருத்திக்கும் கிருஷ்ணனின் மீது கோபம் இருக்காது. அவன் குறும்புகளை அவர்கள் ரசிக்கவே செய்தார்கள். இவர்கள் யசோதையிடம் முறையிடும் போது, கிருஷ்ணன் ஒரு மூலையில் குறும்புச் சிரிப்பு சிரித்து கொண்டு, இவர்கள் தன்னை பற்றி என்ன சொல்லுகிறார்கள் என்று கேட்டுக் கொண்டிருப்பான். யசோதை கோப கண்களுடன் அவனை திரும்பிப் பார்ப்பாள். உடனே அவன் கண்களில் கண்ணீர் மல்கும். கிருஷ்ணன் அழ யார் தாம் பொறுப்பார்கள்? உடனே யசோதை அவனை தன் மடியில் கிடத்தி தட்டிக்கொடுப்பாள். கிருஷ்ணனுடைய அழகிய முகம் அவனுடைய களங்கமற்ற கண்கள் அவனுடைய இனிய புன்முறுவல் இவை கோபிகளின் மனத்தை மயக்கின. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 13 - பெரியாழ்வார் திருமொழி - 1.1.1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 13 - திருக்கோட்டியூர்க் கேசவனான 
கண்ணன்  பிறந்தான்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - முதலாம் திருமொழி - முதலாம் பாசுரம்

வண்ண மாடங்கள் சூழ்* திருக்கோட்டியூர்*
கண்ணன் கேசவன்* நம்பி பிறந்தினில்*
எண்ணெய் சுண்ணம்* எதிரெதிர் தூவிடக்*
கண்ணன் முற்றம்* கலந்து அளறாயிற்றே| (2)

  • வண்ண மாடங்கள் - அழகிய மாடங்களால்
  • சூழ் - சூழப்பட்ட
  • திருக்கோட்டியூர் - திருக்கோட்டியூரில்
  • கேசவன் - கேசவன் என்ற பெயருடைய
  • நம்பி - கல்யாண குண பரிபூர்ணனான நாயகன்
  • கண்ணன் - ஸ்ரீ கிருஷ்ணன்
  • இன் இல் - நந்தகோபனுடைய இனிய திருமாளிகையில்
  • பிறந்து - அவதரித்து அதனால் ஆய்ப்பாடியில் உள்ளவர்கள்
  • எண்ணெய் - எண்ணெயும்
  • சுண்ணம் - மஞ்சள் பொடியையும்
  • எதிரெதிர் - ஒருவருக்கொருவர்
  • தூவிட - எதிர்த்துத் தூவ
  • கண் நல் முற்றம் - விசாலமான விக்ஷணாமான முற்றம்
  • கலந்து - எண்ணெயும் மஞ்சள் பொடியையும் சேர்த்து

திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான், திருவாய்பாடியில் நந்தகோபருடைய அழகிய திருமாளிகையில் கேசவன் என்கிற திருநாமம் கொண்ட, ஒளி நிறைந்த நீண்ட கண்களை உடையவனும், கேசி என்னும் அசுரனைக் கொன்றவனுமான, பேரெழில் மிக்கத் தலைவன் கண்ணனாக திருவவதரித்த போது கோகுலவாசிகளிடம் இருந்த அளவில்லா உத்ஸாகத்தை வர்ணிக்கிறார் ஆழ்வார். அவர்கள் எண்ணையையும், மஞ்சள் பொடியையும் ஒருவர் மேல் ஒருவர் தூவி சந்தோஷப்பட்டார்களாம். இதனால் ஸ்ரீ நந்தகோபருடைய திருமாளிகையின் முற்றமே சேறாகி காட்சியளித்ததாம். (குறிப்பு: கண்ணபிரான் வடமதுரையில் கம்ஸனுடைய சிறைக் கூடத்திலே பிறந்திருக்க, நந்தகோபருடைய திருமாளிகையிற் பிறந்ததாகச் சொன்னது - கம்ஸனுக்குத் தப்பி கோகுலத்தில் பிரவேசித்த பின்பு தான் இவன் பிறந்ததாக ஆழ்வார் நினைத்திருக்கிறார் என்று வ்யாக்யானம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.13

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.13 

தத: ஸ²ங்கா²ஸ்² ச பே⁴ர்யஸ்² ச
பணவா நக கோ³முகா²:|
ஸஹஸை வாப்⁴ய ஹந்யந்த 
ஸ ஸ²ப்³த³ஸ்து முலோ ப⁴வத்||  

  • ததஸ் - அதன் பிறகு
  • ஸ²ங்கா²ஸ்² - சங்குகள்
  • ச - மேலும்
  • பே⁴ர்யஸ்² - மத்தளங்கள்
  • ச - மேலும்
  • பணவ ஆநக - தாரைகளும் முரசுகளும்
  • கோ³முகா²ஹ - கொம்புகள்
  • ஸஹஸா - திடீரென
  • ஏவ - நிச்சயமாய்
  • அப்⁴ய ஹந்யந்த - ஒரே சமயத்தில் ஒலித்தன
  • ஸ: - அந்த
  • ஸ²ப்³த³ஸ் - ஒருமித்த சப்தம்
  • துமுல: - கிளர்ச்சி
  • அப⁴வத் – உண்டாயிற்று

அதன் பின், சங்குகள், மத்தளங்கள், முரசுகள், கொம்புகள், தாறைகள், தம்பட்டங்கள் என அனைத்தும் திடீரென ஒரே சமயத்தில் முழங்க, அப்பேரொலி மிகவும் பயங்கரமாக இருந்தது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.1.20

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² ப்ரத²ம: அத்⁴யாய꞉||
||நைமிஷ க்ஷேத்ரே ஸ்ரீமத் பாகவத விஷயே  
ஸூதம், ப்ரதி ஸொ²னகாதி முனீநாம் ப்ரஸ்ந:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||முதல் அத்யாயம்|| 
||ஞானிகளின் கேள்விகள்||

ஸ்லோகம் - 1.1.20

க்ருத வாந் கில வீர்யாணி 
ஸஹ ராமேண கேஸ²வ꞉|
அதி மர்த் யாநி ப⁴க³வாந் 
கூ³ட⁴꞉ கபட மாநுஷ꞉||

  • கபட மாநுஷஹ - மாயா மனுஷன் ஆனவனும்
  • கூ³ட⁴ஹ் - அறியப்படாதவனுமான
  • ப⁴க³வாந்நு கேஸ²வஹ - இறைவனான கிருஷ்ணன்
  • ராமேண ஸஹ - பலராமனோடு கூடியவராய்
  • அதி மர்த் யாநி - மனித சக்திக்கு அப்பாற்பட்ட
  • வீர்யாணி - வீரியம் மிகுந்த செயல்களை
  • க்ருதவாந் கில - செய்தார் அன்றோ? அவற்றைச் சொல்லும்

தன் உண்மை ஸ்வரூபத்தை தன் மாயையால் மறைத்து, சாதாரண ஒரு மனிதன் போல் நடித்துக் கொண்டு ஒரு கபட நாடக சூத்திரதாரியான பகவான், பலராமனோடு சேர்ந்து கோகுலத்தில் வளர்ந்து, மனித சக்திக்கு அப்பாற்பட்ட பற்பல வீரச்செயல்களைச் செய்தாரல்லவா?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்