About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 5 April 2024

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.69

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.69

அநு மாந்ய ததா³ தாராம் 
ஸுக்³ரீவேண ஸமா க³த:|
நிஜ கா⁴ந ச தத்ரை நம் 
ஸ²ரேணை கேந ராக⁴வ:|| 

  • ததா³ - அப்பொழுது 
  • தாராம் - தாரையை 
  • அநுமாந்ய - சம்மதிகச் செய்து 
  • ஸுக்³ரீ வேண - ஸுக்³ரீவனோடு
  • ஸமா க³தஹ - கை கலந்தான் 
  • ராக⁴வஹ - ஸ்ரீராகவர் 
  • தத்ர - அவ்விடத்தில் 
  • ஏநம் ஏகேந - இவனை ஒரு 
  • ஸ²ரேணை ச - பாணத்தாலேயே 
  • நிஜ கா⁴ந - கொன்றார்

தன் மனைவியான தாரையை ஏற்கச் செய்து, ஸுக்ரீவனை போரில் சந்தித்த வாலி, ஸ்ரீராகவரின் ஒரே கணையால் அங்கே கொல்லப்பட்டான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்  

திவ்ய ப்ரபந்தம் - 111 - பெரியாழ்வார் திருமொழி - 1.9.4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 111 - அர்ஜுனனுக்காகத் தேரோட்டியவன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - நான்காம் பாசுரம்

நாந்தகம் ஏந்திய* நம்பி சரண் என்று*
தாழ்ந்த தனஞ்சயற்கு ஆகி* தரணியில்* 
வேந்தர்கள் உட்க* விசயன் மணித் திண் தேர்*
ஊர்ந்தவன் என்னைப் புறம் புல்குவான்* 
உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான்|

  • நாந்தகம் - நந்தகம் என்னும் வாளை
  • ஏந்திய - கையில் ஏந்தி உள்ள
  • நம்பி - கண்ணனே!
  • சரண் - நீயே எனக்கு ரக்ஷகன்
  • என்று - என்று சொல்லி
  • தாழ்ந்த - தன்னை வணங்கி நின்ற
  • தனஞ்சயற்கு ஆகி - அர்ஜுநனுக்குப் பக்ஷபாதியாக இருந்து
  • தரணியில் - இப் பூமியிலே
  • வேந்தர்கள் - எதிரிகளான ராஜாக்கள்
  • உட்க - அஞ்சிக் கலங்கும்படி
  • விசயன்-அந்த அர்ஜுநனது
  • மணி திண் தேர் - அழகிய வலிய தேரை
  • ஊர்ந்தவன் - ஸாரதியாயிருந்து செலுத்தின இவன்
  • என்னை - என்னுடைய
  • புறம் - முதுகை
  • புல்குவான் - கட்டிக் கொள்வான்
  • உம்பர் - நித்ய ஸூரிகளுக்கு
  • கோன் - நிர்வாஹகனான இவன்
  • என்னை - என்னுடைய 
  • புறம் புல்குவான் - முதுகை கட்டிக் கொள்வான்

அர்ஜுநன் கண்ணனை நோக்கி, "நந்தகம் என்னும் வாளைக் கையில் ஏந்தியவனே! உன்னை சரண் அடைகிறேன். நீ தான் என்னை ரக்ஷிக்க வேணும்" என்று ப்ரார்த்தித்த நிமித்தம், தனஞ்சயனுக்காக இந்த பூமியில் எதிர்த்து வந்த அரசர்களை நடுங்கும்படி செய்து, அவனுடைய அழகிய தேரை ஒட்டிய கண்ணன் என் பின்னால் வந்து என்னைக் கட்டிக் கொள்வான்! விண்ணோர் தலைவன் என்னைப் பின்புறம் வந்து கட்டிக் கொள்வான்! அர்ஜுநனை குறிக்கும் தனஞ்சயன் என்ற சொல்லுக்கு வெற்றியையே செல்வமாக கொண்டவன் என்று பொருள் கொள்ளலாம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Thursday, 4 April 2024

108 திவ்ய தேசங்கள் - 034 - திருவாலி – திருநகரி 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||034. திருவாலி – திருநகரி||
||திருநாங்கூர்||
||முப்பத்தி நான்காவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ அழகிய சிங்கர் பெருமாள் திருக்கோயில்|| 
& 
||ஸ்ரீ வேத ராஜன் பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ அம்ருதகடவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ திருவாலி நகராளன் பெருமாள்|| 
||ஸ்ரீ அம்ருதவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ வயலாலி மணவாளன் பெருமாள்||
||திருவடிகளே சரணம்||

திருவாலி

  • பெருமாள் மூலவர் - அழகிய சிங்கர் (லக்ஷ்மி நரஸிம்ஹர்)  
  • பெருமாள் உற்சவர் - திருவாலி நகராளன்  
  • தாயார் மூலவர் - பூர்ணவல்லி, 
  • தாயார் உற்சவர் - அம்ருதகடவல்லி
  • திருமுக மண்டலம் திசை - கிழக்கு 

திருநகரி

  • பெருமாள் மூலவர் - வேதராஜன், வயலாளி மணவாளன்   
  • பெருமாள் உற்சவர் - கல்யாண ரங்கநாதன்  
  • தாயார் மூலவர் - பூர்ணவல்லி, 
  • தாயார் உற்சவர் - அம்ருதவல்லி
  • திருமுக மண்டலம் திசை - மேற்கு 

------------

  • திருக்கோலம் - வீற்றிருந்த
  • புஷ்கரிணி/தீர்த்தம் - இலாக்ஷணி
  • விமானம் - அஷ்டாக்ஷர
  • ஸ்தல விருக்ஷம் - வில்வம்
  • ப்ரத்யக்ஷம் - கலியன், அலாதி நிகஞ்சம ப்ரஜாபதி
  • ஸம்ப்ரதாயம் - தென் கலை
  • மங்களாஸாஸநம் - 2 ஆழ்வார்கள்
  • பாசுரங்கள் - 42

-------------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

பத்ரிகாசிரமத்திற்கு அடுத்ததாக பெருமாள் திருமந்திரத்தை தானே உபதேசம் செய்த இடமாதலால் இத்தலம் பத்ரிக்கு இணையானது. லக்ஷ்மியுடன் பெருமாள் நரஸிம்ஹ கோலத்தில் வீற்றிருப்பதால் இத்தலத்திற்கு "லக்ஷ்மி நரஸிம்ஹ க்ஷேத்திரம்' என்ற பெயரும் உண்டு. திருவாலியையும் தரிசிப்பதால் இங்கே பஞ்ச நரஸிம்ஹ தலங்களைத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும். திருமங்கையாழ்வாருக்கு விரைவில் அருள்பாலிக்க வேண்டும் என லக்ஷ்மி தேவி பெருமாளை இடைவிடாது வேண்டினாள். பெருமாள் கூறியபடி லக்ஷ்மி திருவாலியில் தவம் செய்யும் பூர்ண மஹரிஷியின் மகளாக பிறந்தாள். பெருமாளை திருமணம் செய்து கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வரும் போது திருமங்கை மன்னன் வழிமறித்து வழிப்பறி நடத்த, பெருமாள் திருமங்கையின் காதில் அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டார். திருமங்கை வழிப்பறி செய்த இடத்தில் இருந்த மண்டபத்தை இன்றும் காணலாம். இதை முன்னிட்டு ஆண்டுதோறும் தேவராஜபுரத்தில் திருமங்கை மன்னன் பெருமாளை வழிப்பறி நடத்தி, திருமந்திர உபதேசம் பெறும் விழா சிறப்பாக நடக்கிறது.

திருமால் நரஸிம்ஹ அவதாரம் எடுத்த போது இரண்யனை வதம் செய்த சீற்றம் அடங்காமல் இருந்தார். இதனால் பயந்து போன தேவர்களும், ரிஷிகளும் பூலோகம் மேலும் அழியாது காக்கப்பட வேண்டும் என லக்ஷ்மி தேவியை வேண்டினர். இவர்களது வேண்டுகோளை ஏற்ற தாயார் பெருமாளின் வலது தொடையில் வந்து அமர்ந்தாள். தேவியை பெருமாள் ஆலிங்கனம் (அணைத்தல்) செய்து கொண்டார். எனவே இவ்வூர் திரு ஆலிங்கனம் என்ற பெயர் பெற்று திருவாலி (திருவாகிய லக்ஷ்மியை ஆலிங்கனம் செய்தல்) ஆயிற்று. இப்பகுதியில் (ஆலிநாடு) திருமங்கை ஆழ்வார் குறுநில மன்னனாக திகழ்ந்தார். எனவே அவருக்கு "ஆலிநாடன்' என்ற பெயர் உண்டாயிற்று.

பிரம்மாவின் புத்திரன் கர்த்தம பிரஜாபதி பெருமாளிடம் மோட்சம் வேண்டி இத்தலத்தில் கடும் தவம் செய்தான். இவனுக்கு தரிசனம் தர பெருமாள் தாமதம் செய்ததால், வருத்தம் அடைந்த லக்ஷ்மி பெருமாளிடம் கோபம் கொண்டு, இத்தலத்தில் குளத்தில் இருந்த தாமரை மலருக்குள் தன்னை ஒளித்து கொண்டாள். பெருமாள் லக்ஷ்மியை தேடி இத்தலம் வந்து லக்ஷ்மியை ஆலிங்கனம் செய்து கொண்டார். அருகிலுள்ள திருவாலியிலும் இதே போல் ஆலிங்கன கோலத்தில் இருப்பதால், இரண்டும் சேர்த்து திருவாலி-திருநகரி ஆனது. 

திரேதா யுகத்தில் பிரஜாபதி உபரிசிரவஸு மன்னனாக பிறந்தான். இவன் இத்தலத்தின் மீது புஷ்பக விமானத்தில் பறந்து வரும் போது இவ்விடத்தில் பறக்காமல் அப்படியே நின்று விட்டது. எனவே, இத்தலம் மிகவும் புண்ணியமானது எனக்கருதி தனக்கு மோட்சம் வேண்டி பெருமாளிடம் தவம் செய்தான். கிடைக்கவில்லை. அடுத்த யுகத்தில் சங்கபாலன் என்ற பெயரில் ஒரு மன்னனின் மந்திரியாகப் பிறந்தான். அப்பிறவியிலும் தனக்கு மோட்சம் கேட்க, பெருமாள் கலியுகத்தில் கிடைக்கும் என கூறினார். கலியுகத்தில் நீலன் என்ற பெயரில் ஒரு படைத்தலைவனின் மகனாக பிறந்தான். இவன் திருவாலியில் வசித்த குமுதவல்லி நாச்சியாரை திருமணம் செய்ய நினைத்தான். அவள்,"ஓராண்டிற்கு தினமும் ஆயிரம் வைஷ்ணவர்களுக்கு அன்னதானம் செய்தால் நான் உங்களுக்கு மனைவியாவேன்,' என்று நிபந்தனை விதித்தாள். இந்த அன்னதானத்திற்கு பொருள் தீர்ந்த பிறகு நீலன் வழிப்பறியில் ஈடுபட்டான். அந்த நேரத்தில் பெருமாள் லக்ஷ்மியை திருமணம் செய்து கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வரும் போது நீலன் மறித்து வழிப்பறி நடத்த, பெருமாள் நீலனின் காதில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டார். இவ்வாறு திருவாலியின் வரலாற்றிற்கும் திருநகரியின் வரலாற்றிற்கும் ஒரே வரலாறு உள்ளது

திருமங்கையாழ்வார் இத்தலத்தில் தனி சன்னதியில் திருஞானசம்பந்தர் கொடுத்த வேலுடன் காட்சி தருகிறார். இவருக்கு எதிரே ஒரு கொடி மரமும், பெருமாளுக்கு எதிரே ஒன்றும் என இரண்டு கொடி மரங்கள் உள்ளன.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 78

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 23

ஸ்கந்தம் 03

நூறு வருட காலம் திவ்ய விமானத்திலேயே சுகமாய் வாழ்ந்தனர் கர்தமரும், தேவஹூதியும். அத்தனை காலமும் ஒரு நொடிபோல் கடந்தது. கர்தமர், தேவஹூதி நிறைய மக்கட் செல்வம் விரும்புகிறாள் என்றறிந்து தன்னை ஒன்பது ரூபங்களாக ஆக்கிக் கொண்டு கர்பாதானம் செய்தார்.


அதன் பின் உரிய காலத்தில் ஒரே நாளில் ஒன்பது மிக அழகான பெண் குழந்தைகளைப் பெற்றாள் தேவஹூதி. குழந்தைகள் பிறந்ததும், கர்தமர் தான் துறவறம் மேற்கொள்ளப்போவதாகச் சொன்னார்.

மனம் கலங்கிய தேவஹூதி, கண்ணீருடன் தரையைப் பார்த்துக் கொண்டு சொன்னாள். பகவானே! எனக்கு அபயம்‌ கொடுங்கள். இக்குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கமுள்ள கணவர்களைத் தேடிக் கொடுங்கள். தாங்கள் துறவறம் மேற்கொண்டபின் என் வருத்தம் போக்கவும், வாழ்விற்குப் பிடிமானமாகவும் ஒரு புதல்வன் வேண்டும்.

இன்பங்களில் மனத்தைச் செலுத்தி, அந்தோ, நூறு வருட காலம் ஒரு நொடிபோல் கழிந்தது. எனக்கு இனியாவது இறை சிந்தனை ஏற்படட்டும்.

ப்ரும்மத்தை அறிந்த தங்களுடன், எனக்கு ஏற்பட்ட இவ்வுறவே எனக்கு அபயம் அளிக்கட்டும். அருள் புரியுங்கள். அறியாமையால் அஸத்துக்களிடம் வைக்கும் அன்பு, உலகியல் தளைகளுக்குக் காரணமாகிறது. அதே அன்பை தங்களைப் போன்ற ஸாதுக்களிடம் வைத்தால், அதுவே உலகியல் தளைகளைக் களைகிறது. மாயையால் நான் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறேன். மோக்ஷத்தையே பெற்றுத் தரும்‌ தங்களைக் கணவராய் அடைந்தும்‌ உலகியல் இன்பங்களில் மனத்தைச் செலுத்தி தளைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம்கூட எனக்கு எழும்பவில்லை.என்று வேண்டினாள்.

கர்தமருக்கு, அப்போதுதான் பகவான் தனக்கு மகவாய்ப் பிறப்பதாக வாக்களித்தது நினைவுக்கு வந்தது. தேவஹூதியைப் பார்த்துக் கூறலானார்.

மாசற்றவளே! நீ இவ்வாறு வருந்தவேண்டா. எல்லையற்ற கல்யாண குணங்கள் கொண்ட பகவான், உன் திருவயிற்றில் அவதாரம் செய்யப்போகிறார். உனக்கு மகவாய்ப் பிறந்து, அஞ்ஞானத்தைப் போக்கி, ஆன்ம தத்துவத்தை விளக்கி, என் புகழையும் பரப்பப்போகிறார். எனவே நீ புலன்களை அடக்கி, பகவானிடம்‌ மனத்தை நிறுத்தி, தானங்களாலும், கற்பு நிலையாலும், தவத்தாலும் பகவானை வழிபடுவாய், என்றார்.

அதையே உபதேசமாக ஏற்ற தேவஹூதி, அவ்வாறே பகவானைப் பூஜிக்கலானாள்.

வெகுகாலம் சென்றதும், ஒரு திருநாளில், பகவான் அவளது திருவயிற்றில் ப்ரவேசித்து உரிய காலத்தில் அரணியிலிருந்து அக்னி தோன்றுவதுபோல் அவதாரம் செய்தார். அப்போது, ப்ரும்மா உள்ளிட்ட அத்தனை தேவர்களும் கர்தமரின் ஆஸ்ரமத்திற்கு வந்தனர். பல மங்கள வாத்யங்களை முழங்கினர்.

இட்ட கட்டளையை ஏற்று செவ்வனே நிறைவேற்றியதற்காக ப்ரும்மா கர்தமரைப் பலவாறு புகழ்ந்தார். ஸாக்ஷாத் ஸ்ரீ ஹரியே உன் வீட்டில் பிறந்திருக்கிறார். அவர் கபிலர் என்னும் திருநாமத்துடன் ஸாங்க்ய யோகத்தை நிறுவுவார். உன் குமாரிகளை மரீசி முதலிய ரிஷிகளுக்கு அவரவர் விருப்பத்திற்கேற்ப திருமணம் செய்து கொடு, என்று கர்தமரை வாழ்த்தி, சின்னஞ்சிறு உருவில் பிறந்த குழந்தையாய்க் காட்சியளிக்கும் பகவானை வணங்கி விடை பெற்றார் ப்ரும்மா.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்