About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 18 February 2024

திவ்ய ப்ரபந்தம் - 92 - பெரியாழ்வார் திருமொழி - 1.7.7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 92 - சார்ங்கம் என்னும் வில்லை ஏந்தியவன்
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - ஏழாம் திருமொழி - ஏழாம் பாசுரம்

படர் பங்கைய மலர் வாய் நெகிழப்* 
பனி படு சிறு துளி போல்* 
இடங் கொண்ட செவ்வாய் ஊறி ஊறி* 
இற்றிற்று வீழ நின்று* 
கடுஞ் சேக்கழுத்தின் மணிக் குரல் போல்* 
உடை மணி கணகணென* 
தடந் தாளிணை கொண்டு சாரங்கபாணி* 
தளர் நடை நடவானோ!

  • படர் - படர்ந்திருக்கிற
  • பங்கயம் மலர் - தாமரைப் பூ
  • வாய் நெகிழ - மொட்டாக இல்லாமல் வாய் திறந்து மலரும் போது அதில் இருந்து பெருகுகி்ன்ற
  • பனி படு - குளிர்ச்சி பொருந்திய மதுவாகிய தேனானது
  • சிறு துளி போல - சொட்டுச்சொட்டாக விழும் துளியைப் போலே
  • இடம் கொண்ட - பெருமை கொண்டுள்ள
  • செவ்வாய் - தனது சிவந்த வாயில் இருந்தும்
  • ஊறி ஊறி - ஜலமானது இடைவிடாமல் சுரந்து
  • இற்று இற்று - நடுவே முறிந்து முறிந்து சொட்டு சொட்டாக
  • வீழ நின்று - கீழே விழும் படி நின்று 
  • கடும் சே - முரட்டு ரிஷபத்தின்
  • கழுத்தில் - கழுத்திலே கட்டப்பட்டுள்ள
  • மணி - மணியினுடைய
  • குரல் போல் - ஒலி போலே
  • உடை மணி - தனது இடுப்பில் கட்டிய மணி
  • கண கண என - கண கண என்று ஒலிக்க
  • தடம் தாளிணை கொண்டு - அழகியதாய் பருத்த இரண்டு பாதங்களாலும்
  • சார்ங்க பாணி - சார்ங்கம் என்னும் வில்லை ஏந்தியவனே!
  • தளர் நடை - அழகிய இளம் நடையை
  • நடவானோ - நடக்க மாட்டானோ? நடக்க வேணும்

மலர்ந்த தாமரைப் பூவில் இருந்து குளிர்ந்த தேன் சிறு சிறு துளியாக ஒழுகுவதைப் போல், கண்ணனின் சிவந்த வாயில் இருந்து ஊரும் ஜலமானது தொடர்ந்து கீழே முறிந்து விழ, இடுப்பில் கட்டின மணியின் ஓசை கொடிய ரிஷபத்தின் கழுத்தில் கட்டின மணியின் ஓசையைப் போல கண கண என்றொலிக்க, பெரிய கால்களையுடைய சார்ங்கபாணியான கண்ணன் தளர் நடையிட்டு வருவானோ என ஏங்குகிறார் ஆழ்வார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 027 - திருக்காவளம்பாடி 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||027. திருக்காவளம்பாடி||
||திருநாங்கூர்||
||இருபத்தி ஏழாவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ கோபால கிருஷ்ணன் பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ மடவரல் மங்கை தாயார் ஸமேத ஸ்ரீ கோபால கிருஷ்ணன் பெருமாள்|| 
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர் - கோபால கிருஷ்ணன்
  • பெருமாள் உற்சவர் - ராஜ கோபாலன்
  • தாயார் மூலவர் - மடவரல் மங்கை
  • தாயார் உற்சவர் - செங்கமல நாச்சியார்
  • திருமுக மண்டலம் திசை - கிழக்கு 
  • திருக்கோலம் - நின்ற - பாமா ருக்மணியுடன்
  • புஷ்கரிணி/தீர்த்தம் - தடமலர்ப் பொய்கை
  • விமானம் - ஸ்வயம்பு, வேதா மோத
  • ஸ்தல விருக்ஷம் - புன்னை
  • ப்ரத்யக்ஷம் - சேனைத் தலைவர், மித்ர தேவர், ருத்ரன்
  • ஸம்ப்ரதாயம் - தென் கலை
  • மங்களாஸாஸநம் - 1 ஆழ்வார்
  • பாசுரங்கள் - 10

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

கிருஷ்ண பரமாத்மா சத்ய பாமாவுடன் சேர்ந்து நரகாசுர வதத்தை நிகழ்த்தினார். இந்திரன், வருணன் உள்ளிட்டோரிடம் இருந்து நரகாசுரன் அபகரித்த பொருட்கள் யாவற்றையும் அவர்களுக்கே கிருஷ்ணர் மீட்டுத் கொடுத்த பிறகு, அவர்கள் கிருஷ்ணருக்கு நன்றி தெரிவித்தனர்.

நீண்ட நாட்கள் கழித்து, இந்திரன் தோட்டத்தில் விளைந்த பாரிஜாத மலர் குறித்து அறிகிறார் சத்யபாமா. தனக்கு அந்த மலர் வேண்டும் என்று கிருஷ்ணரிடம் கேட்கிறார். கிருஷ்ணரும் உரிமையோடு பாரிஜாத மலரைத் தருமாறு இந்திரனிடம் கேட்கிறார். ஆனால் அதற்கு இந்திரன் உடன்படவில்லை.

கோபம் கொண்ட கிருஷ்ணர், இந்திரனோடு போர் செய்து, அவரது காவளத்தை (பூம்பொழில்) அழித்தார். துவாரகாவில் இருந்து வந்த கிருஷ்ணர், தான் இருப்பதற்கு ஓர் இடத்தை தேர்ந்தெடுக்க விரும்பினார். பிறகு மிகவும் பசுமை நிறைந்த இந்த இடத்திலேயே கோயில் கொண்டார். இந்த இடத்திலேயே சத்யபாமாவுக்காக பாரிஜாத மலர்ச் செடியை நட்டார் கிருஷ்ண பரமாத்மா.

இத்தலத்துக்கு அருகிலேயே திருமங்கையாழ்வாரின் பிறந்த இடமான குறையலூரும், அவர் வைணவர் அடியாருக்கு அன்னதானம் நடத்திய மங்கை மடமும் உள்ளன.

கோயில் சிறியது தான் என்றாலும், மிக அருமையாக உள்ள இத்தலத்தில் ராஜகோபால சுவாமி கிழக்கு நோக்கி ருக்மிணி, சத்யபாமாவுடன் எழுந்தருளி உள்ளார்.

ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் இப்பகுதியிலுள்ள 11 திருப்பதி பெருமாள்களும் ஒன்றாக கருட சேவைக்கு மணிமாடக் கோவிலில் எழுந்து அருள்வார்கள். இவர்களுக்கு மங்களாஸாஸநம் செய்வதற்காக திருமங்கை ஆழ்வார் இங்கு எழுந்து அருள்வார். அன்றைய தினம் இந்த ஊரைச் சுற்றி உள்ள வயல் வெளிகளில் உள்ள நெற் பயிர்கள் காற்றினால் ஆடும் சத்தத்தை கேட்டதும், அந்த சப்த வடிவில் திருமங்கை ஆழ்வாரே வந்து விட்டதாக பக்தர்கள் பரவசம் அடைவார்கள். பதினொரு பெருமாளையும் மங்களாஸாஸநம் செய்த பிறகு, திருமங்கை ஆழ்வாரை மணவாள மாமுனிகள் மங்களாஸாஸநம் செய்வார். இந்த கண்கொள்ளா காட்சியை காண ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள்.

சிவனுக்கும், சேனைத் தலைவர் விஷ்வக் சேனருக்கும் இங்கு கிருஷ்ணன் காட்சி தந்துள்ளார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 104

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ரிஷிகளின் சாபம்|

ஒரு நாள் சில யாதவர்கள், தங்கள் முட்டாள்தனம் காரணமாக, ரிஷிகளைச் சீண்ட விரும்பினார்கள். அவர்கள் கிருஷ்ணருக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்த சாம்பனுக்குப் பெண் வேஷம் போட்டார்கள். பிறகு ரிஷிகளிடம் சென்று, ரொம்ப அடக்கம் உள்ளவர்கள் போல நடித்து, அவர்களைப் பார்த்து, 'இந்த இளம் பெண் கருவுற்றிருக்கிறாள். இவளுக்குப் பிறக்கப் போவது ஆணா, பெண்ணா சொல்லுங்கள்?' என்று கேட்டார்கள்.


அவர்களுடைய கபடத்தனத்தைப் புரிந்துகொண்ட ரிஷிகள் மிகவும் கோபம் கொண்டு, அவர்களைச் சபித்தார்கள்: 'ஓ மடையர்களே! அவன் ஓர் இரும்பு உலக்கையை ஈன்றெடுப்பான். அது உங்கள் குலத்தையே அழிக்கும்' என்றார்கள்.

ரிஷிகளின் சாபத்தைக் கேட்டுப் பயந்து அந்த இளைஞர்கள் உடனே சாம்பனின் வேஷத்தைக் கலைத்தார்கள். அப்பொழுது ஓர் இரும்பு உலக்கை அவன் புடவையிலிருந்து கீழே விழுந்தது. ஒன்றும் புரியாமல் அவர்கள் அந்த உலக்கையை எடுத்துக் கொண்டு அரசவைக்குச் சென்று, நடந்த விஷயங்களைச் சொன்னார்கள்.

ரிஷிகளின் சாபத்தைக் கேட்டுச் சபையில் இருந்த எல்லாரும் நடு நடுங்கினார்கள். சாபத்தைத் தவிர்ப்பதற்கு உக்கிரசேனர் ஒரு வழி கண்டுப்பிடித்தார். உலக்கையைப் பொடிசெய்து, அந்தப் பொடியைக் கடலில் எறியும்படிச் சொன்னார். அப்படியே அதைப் பொடி செய்து கடலில் எறிந்தார்கள். ஆனால், ஒரே ஒரு கூரிய துண்டைப் பொடி பண்ண முடியவில்லை. ஆகவே, அதையும் கடலில் தூக்கி எறிந்தார்கள்.

இந்த இரும்புத் துண்டைக் கடலில் இருந்த ஒரு மீன் சாப்பிட்டது. பிறகு ஒரு செம்படவன் அந்த மீனைப் பிடிக்க, அதன் வயிற்றில் அந்த இரும்பைக் கண்டான். அதை அவன் தட்டி, ஓர் அம்பின் தலையாகச் செய்தான். மற்ற இரும்புப் பொடிகள் கடற்கரைக்குத் தள்ளப்பட, அவை ஏரக் என்று அழைக்கப்படும் புல்லாக வளர்ந்தன.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Friday, 16 February 2024

ஸ்ரீமத் பாகவத புராணம் - 57

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 2

ஸ்கந்தம் 03

விராட்புருஷனின் தோற்றம்’ உலகனைத்திற்கும் நலம் பயக்கும் கேள்விகளை விதுரர் கேட்டார். மைத்ரேயர் சொல்லத் துவங்கினார்.

“விதுரரே, தங்கள் மனம் எப்போதும் இறைவனின் திருவடியிலேயே லயித்திருப்பதால் உலகிற்கே நலம் தரும் கேள்விகளைக் கேட்டீர். இவற்றால் தங்கள் புகழ் மேலும் ஓங்கப் போகிறது. 


வியாசரின் சகோதரன் விசித்ர வீர்யன். அவர்களிருவருக்கும் தாய் ஸத்யவதி. விசித்ர வீர்யனின் மனைவியாய் இருந்த பணிப்பெண்களுள் ஒருத்தியின் வயிற்றில் வியாசரின் அருளால் அவதரித்தீர். நீங்கள் அவரவர் செய்வினைகளுக்கு ஏற்ப தண்டனையருளும் யமதர்ம ராஜனின் அம்சமாவீர். ஆணி மாண்டவ்ய ரிஷியின் சாபத்தால் இவ்வுலகில் பிறந்தீர். தாங்கள் பகவான் க்ருஷ்ணனுக்கு மிகவும் ப்ரியமானவர். பகவான் தான் வைகுண்டம் செல்லும் சமயம் தங்களுக்கு ஞானோபதேசம் செய்யுமாறு என்னிடம் கூறிச் சென்றார்.

பகவானின் திருவிளையாடல்களில் முக்கியமான படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைப் பற்றிக் கூறுகிறேன்.” என்று சொல்லி, “பகவான் தனித்திருப்பத்தையும், பின்னர் தன் மாயா சக்தியால் முக்குணங்களைத் தோற்றுவித்ததையும், அவைகளில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வினால் தன் அம்சத்தை அதனுள் புகுத்தி சமன் செய்ததையும் கூறினார். அதுவே ஜீவன் ஆகும். பின்னர் மஹத் தத்வம், ஐம்பெரும் பூதங்கள், பத்து புலன்கள், மனம், அஹம் எனும் தத்வம் ஆகியவற்றின் தோற்றம், தன்மை, குணங்கள் ஆகியவற்றை விரிவாகச் சொன்னார். தொடு உணர்ச்சி, வாயு, ஒளி, அக்னி, சுவை, நீர், மணம், மண் ஆகியவற்றின் தோற்றங்களும் விளக்கப்பட்டன. இவை அனைத்தும் தனித்தனியாக இருந்தமையால் ப்ரபஞ்சம் உருவாகவில்லை. தேவர்களின் ப்ரார்த்தனைக்கிணங்கி, பகவான் அவற்றினுள் அந்தர்யாமியாக நுழைந்து தன் க்ரியா சக்தியால் அவற்றின் செயல்பாடுகளைத் தூண்டி விட்டார். 

இருபத்து மூன்று தத்வங்களும் ஒன்றிணைந்து விராட் புருஷனைத் தோற்றுவித்தன. அதுவே பகவானின் முதல் அவதாரம். இவரிடமிருந்தே அனைத்து ஜீவன்களும் தோன்றின. விராட் புருஷன் உணர்வு கொண்டதும் அவரது அங்கங்களில் இருந்து சகல தேவதைகளும் தோன்றினர். அவருடைய உருவம், ஸ்தானம், லோகங்கள் ஆகியவற்றை விரிவாக விளக்கினார் மைத்ரேயர். (இரண்டாவது ஸ்கந்தத்தில் நாம் இவற்றை விரிவாகப் பார்த்தபடியால், இங்கே குறிப்பு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.)

மைத்ரேயர் மேலும் கூறினார். “விதுரரே, காலம் தர்மம் இவற்றோடு கூடி யோக மாயையின் பெருமையை வெளிப் படுத்துபவர் இந்த விராட் புருஷன். இவரது ஸ்வரூபத்தை முழுமையாக எவராலும் வர்ணிக்க இயலாது. மனம் போனபடி உலக விஷயங்களைப் பேசி பேசித் தூய்மையை இழந்து விட்ட என் நாவைத் தூய்மைப்படுத்துவதற்காகவே, என் குரு உபதேசம் செய்தவற்றை என் சிற்றறிவிற்கு எட்டியவரை உமக்குச் சொல்கிறேன். கேளும்.” என்றார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்