About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 2 February 2024

திவ்ய ப்ரபந்தம் - 82 - பெரியாழ்வார் திருமொழி - 1.6.8

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 82 - சக்கர கையனே! சப்பாணி கொட்டு
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஆறாம் திருமொழி - எட்டாம் பாசுரம்

குரக்கினத்தாலே* குரை கடல் தன்னை* 
நெருக்கி அணை கட்டி* நீள் நீர் இலங்கை*
அரக்கரவிய* அடு கணையாலே* 
நெருக்கிய கைகளால் சப்பாணி* 
நேமியங் கையனே! சப்பாணி|

  • குரை - கோஷத்தோடு (பெரும் ஒலியோடு)
  • கடல் தன்னை - ஸமுத்ரத்தை
  • நெருக்கி - இரண்டு பக்கத்திலும் தேங்கும்படி செய்து
  • குரங்கு - குரங்குகளினுடைய
  • இனத்தாலே - கூட்டங்களைக் கொண்டு
  • அணை கட்டி - ஸேது அணையை கட்டி முடித்து
  • நீள் நீர் - பரந்துள்ள ஸமுத்ரத்தினால் சூழப்பட்ட
  • இலங்கை - இலங்கையிலுள்ள
  • அரக்கர் - ராக்ஷஸர்களெல்லாம்
  • அவிய - அழிந்து போகும்படி
  • அடு  - அழிக்கும் திறனுயுடைய 
  • கணையாலே - அம்புகளைக் கொண்டு
  • நெருக்கிய - போர் செய்த கைகளால் 
  • சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும்
  • நேமி - திருவாழி ஆழ்வானை
  • அம் கையனே - அழகிய கையிலேந்தினவனே! 
  • சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும்

அலை மோதிய கடலை அடங்க வைத்து, வானர சேனையைக் கொண்டு இலங்கை வரை நீண்ட பாலம் அமைத்து, கடலால் சூழப்பட்ட இலங்கையை அடைந்து அங்குள்ள ராக்ஷஸர்களுடன் சரமாரியாக அம்புகளை எய்து கடுமையாகப் போர் செய்து அவர்களை அழித்த அந்த ஸாகஸக் கைகளாலே சப்பாணி கொட்ட வேண்டும். சக்ராயுதம் ஏந்திய திருக் கைகளாலே சப்பாணி கொட்ட வேண்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 023 - திருதேரழுந்தூர் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||023. திருதேரழுந்தூர்|| 
||திருவழுந்தூர் - மாயவரம்|| 
||இருபத்தி மூன்றாவது திவ்ய க்ஷேத்ரம்||

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் – 45 பாசுரங்கள்

001. திருமங்கையாழ்வார் - 45 பாசுரங்கள் 
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) - 41 பாசுரங்கள்

  • திவ்ய ப்ரபந்தம் – 1588 - 1597 - ஏழாம் பத்து - ஐந்தாம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் – 1597 - 1607 - ஏழாம் பத்து - ஆறாம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் – 1608 - 1617 - ஏழாம் பத்து - ஏழாம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் – 1618 - 1627 - ஏழாம் பத்து - எட்டாம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் – 1854 - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - ஏழாம் பாசுரம் - 1 பாசுரம்

2. திருநெடுந்தாண்டகம் (இரண்டாம் ஆயிரம்) - 2 பாசுரங்கள்

  • திவ்ய ப்ரபந்தம் – 2066 - இரண்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (15) - 1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் – 2077 - மூன்றாம் திருமொழி - ஆறாம் பாசுரம் (26) - 1 பாசுரம்

3. சிறிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் – 2707 - நான்காம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (34)

4. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் – 2777 - ஏழாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (65)

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி 

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி
அடியாராய் வாழ்மின் அறிவு இலாப் பேய்காள்*
செடி ஆர் வினை அனைத்தும் தீரும் முடிவில்*
செழுந்தூரத் தன் எனினும் செங்கண் மால் எங்கள்*
அழுந்தூர் அத்தன் அணியன் ஆம்|

  • அறிவு இலா பேய்காள் - புத்தி இல்லாமையால் பேய் போன்றிருப்பவர்களே! 
  • அடியார் ஆய் வாழ்மின் - நீங்கள் எம்பெருமானுக்குத் தொண்டர்களாய் நல்வாழ்ச்சியை அடையுங்கள். அவ்வாறு செய்தால்
  • செடி ஆர் வினை அனைத்தும் தீரும் - செடி போல அடர்ந்துள்ள உங்களது தீவினைகள் யாவும் ஒழியும்
  • செம் கண் மால் - சிவந்த திருக்கண்களை உடைய திருமாலும்
  • அழுந்தூர் எங்கள் அத்தன் - திருவழுந்தூர் என்னும் திருப்பதியில் எழுந்தருளிய எங்கள் ஸ்வாமியுமாகிய எம்பெருமான்
  • செழுந் தூரத்தன் எனினும் - சாதாரணமான நிலையில் மிக்க தூரத்தில் இருப்பவன் போலத் தோன்றினாலும்
  • முடிவில் - அந்திம காலத்தில்
  • அணியன் ஆம் - சமீபத்தில் வந்து காட்சி தந்து உங்களுக்கு நற்கதியை அளிப்பவனாவன்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 93

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

சுதாமருக்கு வரவேற்பு|

துவாரகையை அடைந்ததும், அந்த அழகிய நகரைக் கண்டு இன்புற்றுக் கொண்டே சென்றார், கிருஷ்ணருக்குச் சொந்தமான பல மாளிகைகள் இருந்த இடத்தை அடைந்தார். எல்லா மாளிகைகளையும் விட மிகச் சிறப்பாகத் தோன்றிய ஒரு மாளிகைக்குள் நுழைந்தார். அவரை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. வாயிற் கதவைத் தாண்டி உள்ளே இருந்த கூடத்துள் நுழைந்தார். தூரத்தில் கிருஷ்ணர் ஒரு கட்டிலில், ருக்மிணியோடு உட்கார்ந்திருந்தது தெரிந்தது. 


அவர் உள்ளே நுழைந்து தான் தாமதம். கிருஷ்ணர் வெகு ஆவலோடு ஓடி வந்து அவரைக் கட்டித் தழுவிக் கொண்டார். தம் நண்பரைத் தழுவிக் கொண்டது கிருஷ்ணருக்குப்
மிகுந்த ஆனந்தத்தைத் கொடுத்தது. அவருடைய தாமரைக் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்தது. சுதாமரும் தம்மை அடக்கி கொள்ள முடியாமல் அழுதார்.

கிருஷ்ணர் அவரைத் தம் கட்டிலில் உட்கார வைத்து, அவர் கால்களை அலம்பி அந்தத் தண்ணீரைக் குடித்ததுடன், தம் தலையிலும் தெளித்துக் கொண்டார். கிருஷ்ணர் பக்கத்தில் நின்று கொண்டு ருக்மிணி சுதாமருக்கு விசிற ஆரம்பித்தாள். எலும்பும் தோலுமாக இருந்த அந்த அந்தணரை, அதுவும் கிழிந்த அழுக்கு வேட்டி கொண்டிருந்தவரைக் கிருஷ்ணர் பூஜை செய்தது, அரண்மனையில் உள்ள எல்லோருக்கும் வியப்பாக இருந்தது. 

கிருஷ்ணரும் சுதாமரும் கை கோர்த்துக் கொண்டு உட்கார்ந்து குரு குலத்தில் தாங்கள் கழித்த இன்ப நாட்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.

தம் நண்பருடைய நிலை கிருஷ்ணருக்கு நன்கு தெரியும், அவர் ஏன் அங்கு வந்தார் என்பதும் கிருஷ்ணருக்கு தெரியும். அவருக்கு நிறைய தனம் கொடுக்க வேண்டுமென்று அவர் நினைத்தார். பணத்திற்க்காகச் சுதாமர் என்னை ஒரு நாளும் பூஜை செய்தது இல்லை. இப்பொழுது கூட அவருடைய தர்ம பத்தினியின் தூண்டுதலினால் தான் வந்திருக்கிறார். அவர் கனவிலும் நினைத்துப் பார்க்காத அளவுக்கு அவருக்கு செல்வதைக் கொடுக்க வேண்டும் என்று கிருஷ்ணர் நினைத்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 46

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

பகவான்

ஸ்கந்தம் 02

ப்ரும்மாவின் கடும் தவத்தில் மகிழ்ந்த இறைவன் அவருக்கு வைகுண்ட தரிசனத்தை அளித்தார். அங்கு விஷ்ணு பார்ஷதர்கள் ஸ்ரீ விஷ்ணுவைப் போலவே தோற்றமளித்தனர். திருமகள் அனைத்துச் செல்வங்களையும் கொண்டு பற்பல விதங்களில் இறைவனுக்கு பூஜை செய்கிறாள். தன் அன்புக் கணவனின் திருவிளையாடல்களை இனிமையான குரலில் பாடுகிறாள். வண்டுகள் அவளின் அழகில் மயங்கி அவளது குணங்களைப் பாடுகின்றன. ஒப்பற்ற தலைவனும், அழகே உருவானவனுமான இறைவன் ப்ரகாசமாக விளங்குகிறார். சுநந்தன், நந்தன், ப்ரபலன், அர்ஹணன் முதலிய பார்ஷதர்கள் பகவானுக்குப் பணிவிடை செய்கின்றனர். அவரது திருமுகம் தாமரையை ஒத்தது. மயக்கும் இனிய புன்முறுவல் தவழ்கின்றது. பெரிய அகன்ற திருக்கண்களில் செவ்வரி ஓடுகிறது. தலையில் திருமுடி, காதுகளில் குண்டலங்கள், அரையில் மஞ்சள் பட்டாடை, திருமார்பில் தங்கத்தாலான ரேகை போல்,   மின்னல் கொடி போல் திருமகள். நாற்கரங்கள். ஆஹா! என்ன அழகு! விலை மதிக்க வொண்ணா பீடத்தில் பகவான் எழுந்தருளி இருக்கிறார். செல்வம், தர்மம், புகழ், செழிப்பு, ஞானம், வைராக்யம் இந்த ஆறு குணங்களும் சேர்ந்திருப்பதே 'பக' எனப்படும். பக என்னும் தன்மை கொண்டவர் பகவான் ஆகிறார். இவை அனைத்தும் நிலைத்து நிற்கும் இடமாக இறைவன் இருக்கிறார். தனது நித்ய ஆனந்தத்தில் எப்போதும் நிலைத்திருக்கிறார்.


இவ்வாறு இறைவனைத் தரிசித்த ப்ரும்மா ஆனந்தக் கடலில் மூழ்கினார். ஆனந்தக் கண்ணீர் சொரிய, பகவானின் திருவடித் தாமரைகளை சிரம் தாழ்த்தி வணங்கினார். அன்பே வடிவான பகவான், தன்னைக் கண்ட ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டு, படைப்பிற்கான கட்டளையை எதிர் நோக்கி இருக்கும் ப்ரும்மாவின் கரங்களைத் தன் இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு புன்னகை பூத்தவாறு கூறலானார்.

“ப்ரும்ம தேவரே! எல்லா வேதங்களையும் உமக்குள் கொண்டு இருக்கிறீர். வெகுகாலம் தவம் செய்து என்னை மகிழச் செய்தீர். நானோ அடியார் விரும்பிய அனைத்தையும் அளிப்பவன். என்னை தரிசிக்கும் வரை தான் ஒருவனைச் சிரமம் தீண்ட முடியும். நீங்கள் என்னைக் காணாமலேயே, என் குரலைக் கேட்டு அதன்படிச் செய்தீர். இந்த வைகுண்ட தரிசனத்தை நானே உமக்கு விரும்பி அளித்தேன். படைப்பை எப்படிச் செய்வது என்று நீங்கள் மயங்கியதால் தவம் செய்யக் கட்டளை இட்டேன். தவம் எனது ஹ்ருதயம். நானோ தவத்தின் ஜீவன். தவத்தைக் கொண்டே இந்தப் ப்ரபஞ்சத்தைப் படைக்கிறேன். தவத்தாலேயே காக்கிறேன். தவத்தினாலேயே என்னுள் இழுத்துக் கொள்கிறேன். என் திறன் அனைத்தும் தவமே. ஆனால் அதைச் செய்வது மிகவும் கடினம்.”

ப்ரும்மா இறைவனிடம் சொன்னார். “இறைவா, அனைத்து உயிர்களின் சாட்சி தாங்களே. தாங்கள் தங்களது தடங்கல் அற்ற ஞானத்தால் என் உளத்தை அறிந்தீர். தாங்களே மாயையின் தலைவர். சிலந்தி தன் வாயிலிருந்து கசியும் திரவத்தால் வலை பின்னி, அதில் சுற்றிச் சுற்றி விளையாடித் தனக்குள் இழுத்துக் கொள்கிறது. அவ்வாறு செய்வதால் அதன் உடல் பருமனாகவோ, இளைத்தோ மாறுபாடு அடைவதில்லை. அது போல், தாங்களும் தங்களுடைய பற்பல சக்திகளால் ப்ரபஞ்சத்தைப் படைத்து, காத்து, தன்னுள் இழுத்துக் கொள்கிறீர். நீங்களும் செய்யும் லீலைகளால் எந்த மாறுபாடுகளும் இல்லாமல் இருக்கிறீர். இவ்வாறு எப்படிச் செயல்படுகிறீர்கள்? மேலும், தாங்கள் கட்டளை இட்டால், சோம்பலின்றி படைப்புத் தொழிலைத் துவங்குகிறேன். தங்கள் திருவருளால் 'நான் தான் படைக்கிறேன்' என்ற அகந்தையோ, அவற்றின் மீது பற்றுதலோ எனக்கு ஏற்படாமல் இருக்கட்டும். (இவ்விடத்தில் மிகவும் ஆச்சரியமாக தற்கால வழக்கத்தை ஸ்ரீமத் பாகவதம் மேற்கோள் காட்டுகிறது.) இறைவா! தோழமை பூண்ட ஒருவன் மற்றொருவரின் கைகளைப் பிடித்துக் குலுக்குவது போல் என் கைகளைத் தங்கள் திருக்கரங்களால் பிடித்தீர். என் படைப்புத் தொழில் தங்கள் சேவை என்பதை எப்போதும் நான் மறவாதிருக்க வேண்டும்” என்றார்.

பகவான் மிகவும் மகிழ்ந்து ப்ரும்மாவிற்கு சதுஸ்லோகீ பாகவதம் என்னும் பாகவத ஸாரத்தை உரைத்தார். பகவான் சொன்னதால் இது பாகவதம் எனப்படுகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்