About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 1 February 2024

திவ்ய ப்ரபந்தம் - 80 - பெரியாழ்வார் திருமொழி - 1.6.6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 80 - தேவகி சிங்கமே! சப்பாணி கொட்டு
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஆறாம் திருமொழி - ஆறாம் பாசுரம்

தாரித்து நூற்றுவர்* தந்தை சொற் கொள்ளாது* 
போருய்த்து வந்து* புகுந்தவர் மண்ணாளப்* 
பாரித்த மன்னர் படப்* பஞ்சவர்க்கு* 
அன்று தேருய்த்த கைகளால் சப்பாணி* 
தேவகி சிங்கமே! சப்பாணி|

  • தந்தை - எல்லார்க்கும் பிதாவாகிய 
  • சொல் - உனது பேச்சை 
  • தாரித்து கொள்ளாது - மனத்தில் கொண்டு சொன்னபடி கேட்காமல் 
  • போர் உய்த்து வந்து - யுத்தத்தை நடத்துவதாக கர்வத்துடன் வந்து 
  • புகுந்தவர் - போர்க் களத்தில் பிரவேசித்து 
  • மண் - தாங்களே பூமி முழுவதும் 
  • ஆள பாரித்த - ஆளுவதற்கு முயற்சி செய்த 
  • மன்னர் - அரசர்களாகிய 
  • நூற்றுவர் - நூற்றுக் கணக்காய் இருந்த கௌரவர்கள்
  • பட - மாண்டு போகும்படி 
  • பஞ்சவர்க்கு - பாண்டவர்கள் ஐவர்க்கும் வெற்றி உண்டாக
  • அன்று தேர் உய்த்த - அன்று பார்த்த ஸாரதியாய் நின்று தேரை ஓட்டின
  • கைகளால் - திருக்கைகளாலே 
  • சப்பாணி கொட்டாய்! - சப்பாணி கொட்டி அருள வேணும்
  • தேவகி - தேவகியின் வயிற்றில் பிறந்த 
  • சிங்கமே! - சிங்கக்குட்டியே! 
  • சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும்

தந்தையாகிய உன் சொல் கேளாமல் ராஜ்யத்தை தாங்களே ஆளும் பேராசையினால் பஞ்ச பாண்டவர்களின் மீது போர் தொடுத்து வந்த நூற்றுக்கணக்கான துர்யோதன மன்னர்களை மாய்த்து, இது விஷயமாக பாரத யுத்தத்தில் பாண்டவர்களுக்காக தேரை ஒட்டிய அத் திருக்கைகளால் சப்பாணி கொட்ட வேண்டும். தேவகியிடமிருந்து தோன்றிய சிங்கக் குட்டியைப் போன்றவனே, நீ சப்பாணி கொட்ட வேண்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 022 - திருவெள்ளியங்குடி 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||022. திருவெள்ளியங்குடி||
||கும்பகோணம்|| 
||இருபத்தி இரண்டாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10

திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1338 - பெரிய திருமொழி - 4.10.1
ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒரு கால்*
ஆல் இலை வளர்ந்த எம் பெருமான்*
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்துப்*
பெரு நிலம் அளந்தவன் கோயில்* 
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும்* எங்கும் ஆம் பொழில்களின் நடுவே*
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்பால்* திருவெள்ளியங்குடி அதுவே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1339 - பெரிய திருமொழி - 4.10.2
ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு*
அரக்கர்தம் சிரங்களை உருட்டி*
கார் நிறை மேகம் கலந்தது ஓர் உருவக்* கண்ணனார் கருதிய கோயில்* 
பூ நிரைச் செருந்தி புன்னை முத்து அரும்பி* பொதும்பிடை வரி வண்டு மிண்டி*
தேன் இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும்* திருவெள்ளியங்குடி அதுவே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1340 - பெரிய திருமொழி - 4.10.3
கடு விடம் உடைய காளியன் தடத்தைக்* கலக்கி முன் அலக்கழித்து* 
அவன் தன் படம் இறப் பாய்ந்து பல் மணி சிந்தப்* 
பல் நடம் பயின்றவன் கோயில்* 
பட அரவு அல்குல் பாவை நல்லார்கள்* பயிற்றிய நாடகத்து ஒலி போய்*
அடை புடை தழுவி அண்டம் நின்று அதிரும்* திருவெள்ளியங்குடி அதுவே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1341 - பெரிய திருமொழி - 4.10.4
கறவை முன் காத்து கஞ்சனைக் காய்ந்த* காளமேகத் திரு உருவன்*
பறவை முன் உயர்த்து பாற்கடல் துயின்ற* பரமனார் பள்ளிகொள் கோயில்* 
துறைதுறைதோறும் பொன் மணி சிதறும்* 
தொகு திரை மண்ணியின் தென்பால்*
செறி மணி மாடக் கொடி கதிர் அணவும்* திருவெள்ளியங்குடி அதுவே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1342 - பெரிய திருமொழி - 4.10.5
பாரினை உண்டு பாரினை உமிழ்ந்து* பாரதம் கையெறிந்து* 
ஒரு கால் தேரினை ஊர்ந்து தேரினைத் துரந்த*
செங் கண் மால் சென்று உறை கோயில்* 
ஏர் நிரை வயலுள் வாளைகள் மறுகி*
எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி*
சீர் மலி பொய்கை சென்று அணைகின்ற* திருவெள்ளியங்குடி அதுவே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1343 - பெரிய திருமொழி - 4.10.6
காற்றிடைப் பூளை கரந்தென அரந்தை உறக்* கடல் அரக்கர்தம் சேனை*
கூற்றிடைச் செல்ல கொடுங் கணை துரந்த* கோல வில் இராமன்தன் கோயில்* 
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள்* ஊழ்த்து வீழ்ந்தன உண்டு மண்டி*
சேற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ்* திருவெள்ளியங்குடி அதுவே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1344 - பெரிய திருமொழி - 4.10.7
ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த* மாவலி வேள்வியில் புக்கு*
தெள்ளிய குறள் ஆய் மூவடி கொண்டு* திக்கு உற வளர்ந்தவன் கோயில்* 
அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள்* 
அரி அரி என்று அவை அழைப்ப*
வெள்ளியார் வணங்க விரைந்து அருள் செய்வான்* 
திருவெள்ளியங்குடி அதுவே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1345 - பெரிய திருமொழி - 4.10.8
முடி உடை அமரர்க்கு இடர் செய்யும்* அசுரர் தம் பெருமானை* 
அன்று அரி ஆய் மடியிடை வைத்து மார்வம் முன் கீண்ட*
மாயனார் மன்னிய கோயில்* 
படியிடை மாடத்து அடியிடைத் தூணில்* பதித்த பல் மணிகளின் ஒளியால்*
விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய* திருவெள்ளியங்குடி அதுவே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1346 - பெரிய திருமொழி - 4.10.9
குடி குடி ஆகக் கூடி நின்று அமரர்* குணங்களே பிதற்றி நின்று ஏத்த*
அடியவர்க்கு அருளி அரவுஅணைத் துயின்ற* 
ஆழியான் அமர்ந்து உறை கோயில்* 
கடி உடைக் கமலம் அடியிடை மலரக்* கரும்பொடு பெருஞ் செந்நெல் அசைய*
வடிவு உடை அன்னம் பெடையொடும் சேரும்* வயல் வெள்ளியங்குடி அதுவே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1347 - பெரிய திருமொழி - 4.10.10
பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால்* பார் இடந்து எயிற்றினில் கொண்டு*
தெண் திரை வருடப் பாற்கடல் துயின்ற* திருவெள்ளியங்குடியானை*
வண்டு அறை சோலை மங்கையர் தலைவன்* 
மான வேல் கலியன் வாய் ஒலிகள்*
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள்* ஆள்வர் இக் குரை கடல் உலகே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 91

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

சால்வனின் வீழ்ச்சி|

சார்ங்கம் என்ற தமது வில்லைக் கிருஷ்ணர் தம் இடத்தோளில் மாட்டிக் கொண்டிருந்தார். அது தோளிலிருந்து விலகித் தரையில் விழுந்தது. இதைக் கண்டு, யுத்தத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தவர்கள், "ஹா ஹா! என்று ஆரவாரித்தார்கள். பிறகு சால்வன் கிருஷ்ணரைப் பார்த்து இழிவான வார்த்தைகள் பேச ஆரம்பித்தான். 


"ஏ மடையா! நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே நீ வெட்கமில்லாமல் ருக்மிணியைத் திருடிக் கொண்டு போனாய். பிறகு ராஜ சூய யாகத்தில் சிசுபாலன் போருக்குக் தயாராக இல்லாத சமயம் பார்த்து அவனைக் கொன்றாய். என் அருமை நண்பனைக் கொன்றதற்காக நான் உன்னைக் கொன்று பழி தீர்த்துக் கொல்லப் போகிறேன்" என்றான். 

கிருஷ்ணருக்கு கோபம் வந்தது. "வீண் பெருமை பேசாதே, சூரவீரர்கள் போரில் தங்கள் பராக்கிரமத்தைக் காண்பிப்பார்களே அன்றி, வீண் வார்த்தைகள் பேச மாட்டார்கள்" என்றார். இப்படிச் சொல்லிக் கொண்டே கிருஷ்ணர் தம் கதையினால் சால்வனின் கழுத்தைத் தாக்கினார். சால்வன் நடுங்கினான், இரத்தம் கக்கினான். உடனே தம் மாய விமானத்தில் எங்கேயோ சென்று மறைந்தான். அவன் எங்கு இருக்கிறான் என்று கண்டுபிடிக்க கிருஷ்ணர் முயன்றார். 

அப்பொழுது யாரோ ஒருவன் வந்து கிருஷ்ணனின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து அழுது கொண்டே, "நான் உங்கள் தாயார் தேவகி அம்மையாரால் அனுப்பப்பட்டவன். உங்களுடைய அருமைத் தகப்பனார் வசுதேவரைச் சால்வன் இறைச்சி விற்பவன் ஆட்டைப் பிடித்துச் செல்வது போலப் பிடித்துச் சென்று விட்டான்" என்று சொன்னான். 

இதைக் கேட்டுக் கிருஷ்ணர் ஒரு கணம் திகைத்தார். "தேவர்களாலும் அசுரர்களாலும் வெல்ல முடியாத பலராமனை இந்தச் சால்வன் எப்படி வென்று என் தகப்பனாரை அழைத்துச் சென்றான்? என்று நினைத்தார். கிருஷ்ணர் இப்படி யோசனை செய்து கொண்டிருக்கையில் சால்வன், வசுதேவரைப் போலத் தோற்றமளித்த ஓர் உருவத்தைக் கிருஷ்ணருக்குக் காட்டினான். 

"நீ யாருக்காக உயிர் வாழ்கிறாயோ, அந்த உன் தகப்பனார் இதோ இருக்கிறார். உன் கண் முன்னால் அவரை நான் கொல்லப் போகிறேன், உன்னால் முடிந்தால் அவரைக் காப்பாற்று, பார்க்கலாம்!" என்றான். 

இப்படிச் சொல்லிக் கொண்டே சால்வன் தன் வாளினால் வசுதேவரின் தலையை துண்டித்தான். கிருஷ்ணர் ஒரு கணம் துக்கத்தில் ஆழ்ந்தார். ஆனால் மறுகணமே, அது சால்வனின் மாய வேலை என்று தெரிந்து கொண்டார். பலராமரின் பாதுகாப்பில் இருக்கும் வசுதேவரைச் சால்வன் கைப்பற்றி இருக்க முடியாது என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டது. அவனை இனித் தாமதமின்றிக் கொல்ல வேண்டும் என்று நினைத்தார். அவர் தம் சக்ராயுதத்தை ஏவ, அது சால்வனை நோக்கிப் பாய்ந்து, அவன் தலையை அவன் உடலிலிருந்து பிரித்தது. இதைக் கண்டு எல்லா யாதவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். 

தன நண்பனின் சாவுக்குப் பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்று, சால்வனின் நெருங்கிய நண்பனான தந்தவக்திரன் கிருஷ்ணரைத் தாக்க முன் வந்தான். ஆனால் அவன் கிருஷ்ணருக்கு முன் எம்மாத்திரம்! கிருஷ்ணர் அவன் மார்பில் முஷ்டியால் குத்த, அவன் இறந்து கீழே விழுந்தான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 44

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

பரிக்ஷித்தின் கேள்விகள்

ஸ்கந்தம் 02

ப்ரும்மா நாரதரிடம் மேலும் சொன்னார்

“பகவானது உண்மை நிலை எப்போதும் இன்பமே வடிவெடுத்தது. அமைதியானது. அழிவற்றது.  அறிவொளியால் ஆனது. இரண்டற்றது. பயமற்றது. சோகமற்றது. மாயை எனும் மலமற்றது. அதனால் புலன் வழிச் செல்லுதல் இல்லை. ஸத், அஸத் இரண்டையும் கடந்தது. 


உபநிடதங்களாலும் விளக்க இயலாதது. ஏதோ ஒரு பொருளை உதாரணமாக வைத்துக் கூற முற்பட்டாலும், சொல்ல இயலாதது. செயல், செய்பவன், காரணம், மூன்றும் இன்னும் பல கர்மாக்களும் கூட அவரிடம் அழைத்துச் செல்ல முடியாது. மாயை அவரைக் கண்டாலே நாணம் கொண்டு ஓடி ஒளிகிறது.

பொறி புலன்களை அடக்கிய பெரியோர் மனத்தை இறைவனிடம் ஒரு நிலைப்படுத்தி அவரை அடைந்து விடுகிறார்கள். வேறு தனியான முயற்சி அவர்களுக்குத் தேவைப்படுவதில்லை. வருணனுக்கு நீர் வேண்டுமெனில் கடப்பாரையை எடுத்து பூமியைத் தோண்டுவானா என்ன? அது போல் தான். அனைத்துச் செயல்களுக்கும் பலன் தருபவன் இறைவனே. மனிதன் தன் தாதுக்களின்(பஞ்ச பூதங்களின்) சக்தியை இழந்து இறக்கும் போது, உடற்கூட்டினுள் இருக்கும் இறைவன் அழிவதில்லை. ஆகாயத்திற்கு அழிவுண்டா? அது போல. தன் இச்சையினாலேயே ப்ரபஞ்சத்தைப் படைத்துக் காத்து அழிக்கும் பகவான் அவற்றில் ஒட்டாது தனித்து நிற்கிறான். அந்த பகவானான ஸ்ரீ ஹரியின் மகிமைகளை சுருக்கமாகக் கூறினேன்.

இந்த பாகவதத்தை எனக்கு பகவான் உபதேசித்தார். நான் சுருக்கமாகக் கூறிய பகவானின் மகிமைகளை, உலகோர்க்கு அன்பேவ்வடிவான பக்தி உண்டாகும்படி நீ விரிவாக எடுத்துக் கூறுவாய். பகவானின் திருவிளையாடல்களை விவரித்துக் கூறுபவரும், அதை பக்தியுடன் கேட்பவரும் எக்காலத்திலும் மாயைக்கு ஆட்படுவதில்லை” என்றார்.

எல்லாவற்றையும் கவனமாகக் கேட்ட பரிக்ஷித் நிறைய சந்தேகங்களைக் கேட்டான்.

“மஹரிஷியே, நாரதர் தன்னிடம் வருபவர் அனைவர்க்கும் இறைவனின் அருளையும் தரிசனத்தையும் பெற்றுத் தருபவர் ஆயிற்றே. பகவானின் மகிமைகளை அவர் யார்யாருக்கு எவ்வெவ்விதமாக உபதேசித்தார்? பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனிடம் மனத்தைச் செலுத்தி இவ்வூனுடலை உதறித் தள்ளும் வழியைக் கூறுங்கள். பகவானின் பெருமையைக் கேட்பவர்கள் இதயத்தில் அவன் குடியேறுகிறான். அவர்களது உள்ள மலங்கள் அழிகின்றன.  ரிஷியே! ஜீவாத்மாவிற்கு பஞ்ச பூதங்களோடு தொடர்பில்லை. ஆனால், பஞ்ச பூதங்களாலான இவ்வுடலோடு தொடர்புள்ளதே. அது இயற்கையா? வேறு காரணம் உண்டா? மனிதனின் அங்கங்களைப்போல் விராட் ஸ்வரூபனின் அங்கங்களும் எல்லைக்கு உட்பட்டதா? பகவான் எப்படி மாயையை விட்டு ஆனால் அனைவருள்ளும் அந்தர்யாமியாய் விளங்குகிறார்?

மஹாப்ரளயம், அவாந்திர ப்ரளயம், இவற்றின் கால அளவென்ன? முக்காலங்களின் நிகழ்வு எவ்வாறு கணிக்கப்படுகிறது? மனிதர் மற்றும் தேவர்களின் ஆயுட்காலம் எவ்வளவு? வினாடி முதல் வருடம் வரை எவ்வாறு அறியப்படுகிறது? தங்கள் கர்மங்களால் ஜீவர்கள் அடையும் கதிகள் எவ்வளவு? அவை என்னென்ன? எவ்வாறு அடையப்படுகின்றன? தேவன், மானிடன், அரக்கன் முதலிய பிறவிகள் ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களின் பரிணாமத்தால் ஏற்படுகின்றன. அத்தகைய பிறவிகளை அடைய ஜீவன்கள் என்னென்ன கர்மாக்கள் செய்ய வேண்டும்?

பூமி, பாதாளம், திசைகள், ஆகாயம், கிரகங்கள், நக்ஷத்ரங்கள், மலைகள், கடல்கள், நதிகள், தீவுகள் ஆகியவையும், அவற்றில் வாழும் உயிரினங்களும் எவ்வாறு தோன்றின? ப்ரும்மாண்டத்தின் உள், வெளி அளவு எவ்வளவு? சான்றோர்களின் நடத்தை என்ன? வர்ணாஸ்ரமங்களின் நெறிமுறை என்ன? யுகங்கள் எத்தனை? அவற்றின் கால அளவுகள் என்ன? அவற்றின் கால நெறிமுறைகள் என்னென்ன? ஒவ்வொரு யுகத்திலும் பகவான் எவ்வாறு திருத்தோற்றங்கள் கொள்கிறார்? 

மனிதனின் பொது தர்மம், விசேஷ தர்மம், தொழில் தர்மம், ஆகியவற்றைக் கூறுங்கள் மன்னர்களின் தர்மம் என்ன? துன்பப்படுவோரின் தர்மம் என்ன? ப்ரக்ருதி தத்துவங்கள் எத்தனை? அவற்றின் உண்மைத் தோற்றம் என்ன? இறைவனை வழிபடும் முறை யாது? அஷ்டாங்க யோகத்தின் வழிமுறை என்ன? அஷ்ட சித்திகள் எவ்வாறு பெறப்படுகின்றன? அவர்கள் முக்தியடையும் மார்கம் யாது? அவர்களது உடல் எவ்வாறு அழியும்? இதிஹாஸ புராணங்களின் இவற்றின் உள் கருத்து என்ன? உயிர்களின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி எவ்வாறு ஏற்படுகிறது? கர்மங்களும், நியமங்களும், அவற்றின் பலன்களும் ஒன்றுக்கொன்று எவ்வாறு முரண்படாமல் விளங்குகின்றன?

நாஸ்திகன் எவ்வாறு உருவாகிறான்? ப்ரளயத்தில் ப்ரக்ருதியோடு லயமாகும் ஜீவன் மீண்டும் எப்படித் தோன்றுகிறான்? ஜீவனின் தளையும், விடுதலையும் எவ்வாறு? ஆத்மா எப்படித் தனித்து நிற்கிறது? அனைத்துமறிந்த தங்களிடம் என் ஐயங்கள் அனைத்தையும் கேட்டு விட்டேன். எனக்கு தயை கூர்ந்து விளக்க வேண்டும். எனக்கு ஏழுநாட்களுக்கு மரணம் இல்லை. தங்களின் வாக்காகிய அமுதத்தைப் பருகுவதால் பசி, தாகம் முதலியவையும் இல்லை.”

இவற்றைக் கேட்டதும் ஸ்ரீ சுகர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். அழகிய புன்முறுவலுடன் பதில் கூறத் துவங்கினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்