About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 10 January 2024

திவ்ய ப்ரபந்தம் - பெரியாழ்வார் திருமொழி - 1 ம் பத்து - 6 ம் திருமொழி அறிமுகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஆறாம் திருமொழி - 11 பாசுரங்கள்
திவ்ய ப்ரபந்தம் - 75 - 85

கை கொட்டி விளையாடுதல் - சப்பாணிப் பருவம்

வெண்டளையால் வந்த கலித்தாழிசை

கண்ணன் தன் திருமேனியைச் சிறிது அசைக்கிறான். இடுப்பில் கட்டிய சதங்கைகள் ஒலிக்கின்றன! தன் முத்துப் பற்களைக் காட்டிப் புன்முறுவல் செய்கிறான். பெருஞ் செயல்களைச் செய்த இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டுகிறான்! அரிய செயலைச் செய்து விட்டதாக நினைக்கிறான்! 


கை தட்டுவதால் ஏற்பட்ட ஓசையைக் கேட்டு மேலும் மகிழ்கிறான். இதைக் கண்டு பேரானந்தம் அடைகிறாள் யசோதை. 'கண்ணா! மீண்டும் ஒரு முறை சப்பாணி கொட்டு; உலகம் மகிழட்டும்' என்று வேண்டுகிறாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 020 - திரு தஞ்சைமாமணி கோவில் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||020. திரு தஞ்சை மாமணி கோவில்||
||தஞ்சாவூர்||
||இருபதாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 5

திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 953 - பெரிய திருமொழி - 1.1.6
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்* 
எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்*
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி* 
அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்**
வம்பு உலாம் சோலை மா மதிள்* 
தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி*
நம்பிகாள்! உய்ய நான் கண்டு கொண்டேன்* 
நாராயணா என்னும் நாமம்|

002. திவ்ய ப்ரபந்தம் - 1090 - பெரிய திருமொழி - 2.5.3
உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறு ஆய்* 
உலகு உய்ய நின்றானை அன்று பேய்ச்சி*
விடம் பருகு வித்தகனைக் கன்று மேய்த்து* 
விளையாட வல்லானை வரைமீ கானில்**
தடம் பருகு கரு முகிலைத் தஞ்சைக் கோயில்* 
தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை வையம் காக்கும்*
கடும் பரிமேல் கற்கியை நான் கண்டு கொண்டேன்* 
கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1576 - பெரிய திருமொழி - 7.3.9
என் செய்கேன் அடியேன் உரையீர்* 
இதற்கு என்றும் என் மனத்தே இருக்கும் புகழ்*
தஞ்சை ஆளியைப் பொன் பெயரோன்* 
நெஞ்சம் அன்று இடந்தவனை தழலே புரை**
மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட*
சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும்*
பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை அன்றி* 
என் மனம் போற்றி என்னாதே|

பூதத்தாழ்வார்
004. திவ்ய ப்ரபந்தம் – 2251 - இரண்டாம் திருவந்தாதி - 7.10 (70)
தமர் உள்ளம் தஞ்சை* தலை அரங்கம் தண்கால்*
தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை*
தமர் உள்ளும் மாமல்லை கோவல்* 
மதிள் குடந்தை என்பரே* ஏ வல்ல எந்தைக்கு இடம்|

நம்மாழ்வார்
005. திவ்ய ப்ரபந்தம் - 3255 - திருவாய்மொழி - 5.3.1
மாசு அறு சோதி* என் செய்ய வாய் மணிக் குன்றத்தை*
ஆசு அறு சீலனை* ஆதி மூர்த்தியை நாடியே**
பாசறவு எய்தி* அறிவு இழந்து எனை நாளையம்?*
ஏசு அறும் ஊரவர் கவ்வை* தோழீ என் செய்யுமே?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 85

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

பீமன் ஜராசந்தனின் போர்|

இரண்டு கதாயுதங்கள் கொண்டு வரும்படி ஜராசந்தன் உத்தரவிட்டான். ஒன்றைப் பீமனுக்குக் கொடுத்தான். இன்னொன்றைத் தான் வைத்துக் கொண்டான். இருவரும் வெளியே திறந்தவெளிக்கு வந்து சண்டையிடத் தொடங்கினார்கள்.


இருவரும் சரமாரியாகச் சண்டையிட்டனர். விருப்பத்துடன் சண்டையிட்டனர். வைரத்தைப் போன்று உறுதியாக இருந்த கதாயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டார்கள். வெகு லாவகமாக, இடப்பக்கமும் வலப்பக்கமும் வளைந்து கொடுத்துச் சண்டை இட்டார்கள். மேடையில் நடிகர்கள் போன்று அவர் தூகாக் கொண்டிருந்த போது கிளம்பிய சப்தம் இரண்டு யானைகள் தங்கள் தந்தங்களால் தாக்கிக்கொள்ளும் பொழுது ஏழும் சப்தத்தை ஒத்திருந்தது, இரண்டு கருமேகங்கள் இடித்துக் கொண்டு எழுப்பும் இடி முழக்கதைப் போன்று இருந்தது. 

இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. அதனால் சண்டைக்கு முடிவே இருக்காது என்று தோன்றியது. கடைசியில் கதாயுதங்கள் ஒன்றுக்கொன்று மோதித் துண்டு துண்டாகவே, அவர்கள் மல்யுத்தம் செய்யத் தொடங்கினார்கள். 

இப்படி இருபத்தேழு நாட்கள் சென்றன. இருவரும் நடந்து கொண்ட விதம் வெகு விசித்திரமாக இருந்தது. பகலில் இருவரும் மிகவும் உக்கிரமாகச் சண்டை போடுவார்கள். இரவானால், நண்பர்களைப் போல சேர்ந்து உட்கார்ந்து உணவருந்துவார்கள். 

இருபத்தெட்டாம் நாளன்று, பீமன் கிருஷ்ணரைப் பார்த்து, "இதோ பார், கிருஷ்ணா! என்னால் ஜராசந்தனை வெற்றி கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. எல்லா அம்சங்களிலும் அவன் எனக்குச் சரிநிகராக இருக்கிறான். அதனால் சண்டை ஓயாமல் போய்க் கொண்டேயிருக்கும் போலத் தோன்றுகிறது" என்று சொன்னான். கிருஷ்ணர் அவனுக்குத் தைரியம் கொடுத்து, "கவலைப்படாதே பீமா, இன்று நீ அவனை கொல்லுவாய் பார்" என்று சொன்னார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 38

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

எங்கும் நிறைந்த இறை

ஸ்கந்தம் 02

ஸூதர் சொன்னார். “ஸ்ரீ சுகாசார்யாரின் விளக்கங்களைக் கேட்ட பரிக்ஷித் ஸ்ரீ க்ருஷ்ணனிடம் மனத்தைப் பறி கொடுத்தான். பற்றுக்கள் அனைத்தையும் துறந்தான். பிறகு, நீங்கள் (ரிஷிகள்) என்னிடம் கேட்ட கேள்விகளையே அவனும் சுகரிடம் கேட்டான்.


“மாசற்றவரே! தாங்கள் அனைத்தும் அறிந்தவர். தங்களது வாக்கினால் என் மன இருள் அகல்கிறது. ப்ரும்மா எவ்விதம் இவ்வுலகைப் படைக்கிறார்? எவ்விதம் காப்பாற்றுகிறார்? எவ்விதம் அழிக்கிறார்? கற்பனைக் கெட்டாத சக்திகளை உடைய பகவான் எந்தெந்த சக்திகளைக் கொண்டு மணல் வீடு கட்டி விளையாடுவது போல் தன்னைத் தானே பல உருவங்கள் ஆக்கிக் கொண்டு பலவித லீலைகளைச் செய்கிறார்? பகவானின் லீலைகள் ஊகித்து அறிய முடியாதவையாக விநோதமாக உள்ளன. பல வித ரூபங்களை ஏற்கும் பகவான் எல்லாச் செயல்களையும் முறைப்படி செய்கிறார். எல்லா சக்திகளையும் ஒரே நேரத்தில் மேற் கொள்கிறாரா? அல்லது ஒவ்வொன்றாகவா?” இவ்வாறு வேண்டப்பட்ட ஸ்ரீ சுகர், பகவானை தியானம் செய்து கூறலானார்.

“புருஷோத்தமனான பகவான், ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய மூன்று குணங்களையும் ஏற்று, ப்ரும்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று திருவுருவங்களிலும் விளங்குகிறார். எல்லா உயிரினங்களிலும் அந்தர்யாமியாகக் காட்சி அளிக்கிறார். ஸாதுக்களின் துன்பத்தைத் துடைத்துப் பாவங்களைப் போக்கி பக்தியை அளிக்கிறார். தீயோரை அடக்கி, நற்கதி தருபவர். துறவிகளுக்கு ஆத்ம அநுபவம் அளிக்கிறார். அசையும் அசையாப் பொடுள்கள் அனைத்தையும் தன்னுள் கொண்டவர். தானும் அவற்றுள் விளங்குபவர். பக்ஷபாதம் அற்றவர். பக்தர்களைப் பரிபாலிக்கிறார். பிடிவாதத்துடன் சாதனை செய்யும் வேஷதாரிகளால் அறிய முடியாதவர். அவருக்கு ஒப்பானவரே இல்லை எனும்போது மேலானவர் எப்படி இருக்க முடியும்? 

ஒத்தார் மிக்கார் இலையாய மாமாயா என்கிறார் ஆழ்வார். அவரைப் பற்றிப் பேசினாலும், நினைத்தாலும், கண்டாலும், வணங்கினாலும், பூஜை செய்தாலும் ஜீவராசிகளின் பாவங்கள் உடனே அழிகின்றன. தவம் செய்பவர்கள், புகழ் படைத்தவர்கள், நல்மனம் படைத்தவர்கள், மந்திரமும், அதன் பொருளும் அறிந்து கர்ம அநுஷ்டானம் செய்பவர்கள், ஒழுக்கம் தவறாத பக்தர்கள் யாராகினும், தங்களது தவம், தானம் முதலியவற்றின் பலனை பகவத் அர்ப்பணம் செய்தால் ஓழிய அவற்றின் பயனைப் பெறுவதில்லை. பல்வேறு பிரிவைச் சேர்ந்த மாபாவிகள் ஆயினும் அவர்கள் இறை அடியாரை அண்டி பாவங்களைத் தொலைத்து தூய்மை பெறுகிறார்கள்.

பகவான் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் அளிப்பவர். வேள்விகள் அனைத்திற்கும் தலைவர். அவற்றை அநுபவித்து பலன் அளிப்பவர். அவரே யது குலத்தில் அவதரித்தார். பகவானே ஸாது ஜனங்களின் ஒரே பற்றுக் கோடாவார்.

ப்ரம்ம தேவருக்கு படைப்புத் திறனைத் தூண்டுவதற்காக ஞானத்தின் தலைவியான ஸரஸ்வதி தேவியை பகவான் ஏவினார். அவள், ப்ரும்மாவின் திரு முகத்தில் இருந்து, சிக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜோதிஷம், கல்பம் ஆகிய ஆறு அங்கங்களுடன் வேத ரூபமாக வெளித் தோன்றினாள். இறைவனே ஐம்புலன்களின் சேர்க்கையால் இவ்வுடலை ஆக்கித் தந்து அதில் ஜீவாத்மாவாக குடி புகுகிறார். அதனாலேயே அவன் புருஷன் என்று அழைக்கப்படுகிறான். ஐந்து ஞானேந்திரியங்கள் (அறிவுப் புலன்கள்), ஐந்து கர்மேந்திரியங்கள் (செயற் புலன்கள்), ஐந்து ப்ராணன்கள், மனம் ஆகிய பதினாறு சாதனங்களைக் கொண்டு குணங்களை வெளிப்படுத்துகிறார். இப்படிப்பட்ட பகவானுக்கு நமஸ்காரம். அவர் அனைவர்க்கும் நலம் புரியட்டும். ப்ரும்மா இது விஷயமாக பகவானிடம் கேட்டு அறிந்ததை தன் மகனான நாரதர்க்குச் சொன்னார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்