About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 2 November 2023

108 திவ்ய தேசங்கள் - 014 - திருநறையூர் 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||014. திருநறையூர்||
||நாச்சியார் கோயில் - கும்பகோணம்||
||பதிநான்காவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 111 - 2

திருமங்கையாழ்வார்
021. திவ்ய ப்ரபந்தம் - 1495 - பெரிய திருமொழி - 6.5.8
வெள்ளைப் புரவித் தேர் விசயற்கு ஆய்* விறல் வியூகம் விள்ள* 
சிந்துக்கோன் விழ* ஊர்ந்த விமலன் ஊர்* 
கொள்ளைக் கொழு மீன்* உண் குருகு ஓடி பெடையோடும்*
நள்ளக் கமலத்* தேறல் உகுக்கும் நறையூரே|

022. திவ்ய ப்ரபந்தம் - 1496 - பெரிய திருமொழி - 6.5.9
பாரை ஊரும் பாரம் தீரப்* பார்த்தன் தன்*
தேரை ஊரும்* தேவ தேவன் சேரும் ஊர்* 
தாரை ஊரும்* தண் தளிர் வேலி புடை சூழ*
நாரை ஊரும்* நல் வயல் சூழ்ந்த* நறையூரே|

023. திவ்ய ப்ரபந்தம் - 1497 - பெரிய திருமொழி - 6.5.10
தாமத் துளப* நீள் முடி மாயன் தான் நின்ற*
நாமத் திரள் மா மாளிகை சூழ்ந்த* நறையூர் மேல்*
காமக் கதிர் வேல் வல்லான்* கலியன் ஒலி மாலை* 
சேமத் துணை ஆம்* செப்பும் அவர்க்கு திருமாலே|

024. திவ்ய ப்ரபந்தம் - 1498 - பெரிய திருமொழி - 6.6.1
அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும்*
அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன்*
கொம்பு அமரும் வட மரத்தின் இலைமேல்* பள்ளி
கூடினான் திருவடியே கூட கிற்பீர்*
வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு*
மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு*
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில்*
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே|

025. திவ்ய ப்ரபந்தம் - 1499 - பெரிய திருமொழி - 6.6.2
கொழுங் கயல் ஆய் நெடு வெள்ளம் கொண்ட காலம்*
குல வரையின் மீது ஓடி அண்டத்து அப்பால்*
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை*
இணை அடிக்கீழ் இனிது இருப்பீர் இன வண்டு ஆலும்*
உழும் செறுவில் மணி கொணர்ந்து கரைமேல் சிந்தி*
உலகு எல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள*
செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த*
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே|

026. திவ்ய ப்ரபந்தம் - 1500 - பெரிய திருமொழி - 6.6.3
பவ்வ நீர் உடை ஆடை ஆகச் சுற்றி*
பார் அகலம் திருவடியாப் பவனம் மெய்யா*
செவ்வி மாதிரம் எட்டும் தோளா* அண்டம்
திரு முடியா நின்றான்பால் செல்லகிற்பீர்*
கவ்வை மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற*
கழல் மன்னர் மணி முடிமேல் காகம் ஏற*
தெய்வ வாள் வலம் கொண்ட சோழன் சேர்ந்த*
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே|

027. திவ்ய ப்ரபந்தம் - 1501 - பெரிய திருமொழி - 6.6.4
பைங் கண் ஆள்-அரி உரு ஆய் வெருவ நோக்கிப்*
பரு வரைத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி*
அம் கை வாள் உகிர் நுதியால் அவனது ஆகம்*
அம் குருதி பொங்குவித்தான் அடிக்கீழ் நிற்பீர்*
வெம் கண் மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற*
விறல் மன்னர் திறல் அழிய வெம் மா உய்த்த*
செங்கணான் கோச் சோழன் சேர்ந்த கோயில்*
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே|

028. திவ்ய ப்ரபந்தம் - 1502 - பெரிய திருமொழி - 6.6.5
அன்று உலகம் மூன்றினையும் அளந்து* 
வேறு ஓர் அரி உரு ஆய் இரணியனது ஆகம் கீண்டு*
வென்று அவனை விண் உலகில் செல உய்த்தாற்கு*
விருந்து ஆவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து*
பொன் சிதறி மணி கொணர்ந்து கரைமேல் சிந்திப்*
புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன்*
தென் தமிழன் வட புலக்கோன் சோழன் சேர்ந்த*
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே|

029. திவ்ய ப்ரபந்தம் - 1503 - பெரிய திருமொழி - 6.6.6
தன்னாலே தன் உருவம் பயந்த தான் ஆய்*
தயங்கு ஒளி சேர் மூவுலகும் தான் ஆய் வான் ஆய்*
தன்னாலே தன் உருவின் மூர்த்தி மூன்று ஆய்*
தான் ஆயன் ஆயினான் சரண் என்று உய்வீர்*
மின் ஆடு வேல் ஏந்து விளைந்த வேளை*
விண் ஏறத் தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட*
தென் நாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த*
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே|

030. திவ்ய ப்ரபந்தம் - 1504 - பெரிய திருமொழி - 6.6.7
முலைத் தடத்த நஞ்சு உண்டு துஞ்சப் பேய்ச்சி*
முது துவரைக் குலபதியாக் காலிப்பின்னே*
இலைத் தடத்த குழல் ஊதி ஆயர் மாதர்*
இன வளை கொண்டான் அடிக்கீழ் எய்தகிற்பீர்*
மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய*
வளம் கொடுக்கும் வரு புனல் அம் பொன்னிநாடன்*
சிலைத் தடக் கைக் குலச் சோழன் சேர்ந்த கோயில்*
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே|

031. திவ்ய ப்ரபந்தம் - 1505 - பெரிய திருமொழி - 6.6.8
முருக்கு இலங்கு கனித் துவர் வாய்ப் பின்னை கேள்வன்*
மன் எல்லாம் முன் அவியச் சென்று* 
வென்றிச் செருக்களத்துத் திறல் அழியச் செற்ற வேந்தன்*
சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்*
இருக்கு இலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு*
எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட*
திருக் குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில்*
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே|

032. திவ்ய ப்ரபந்தம் - 1506 - பெரிய திருமொழி - 6.6.9
தார் ஆளன் தண் அரங்க ஆளன்* 
பூமேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற பேர் ஆளன்* 
ஆயிரம் பேர் உடைய ஆளன்*
பின்னைக்கு மணவாளன் பெருமை கேட்பீர்*
பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற*
படை மன்னர் உடல் துணியப் பரிமா உய்த்த*
தேர் ஆளன் கோச் சோழன் சேர்ந்த கோயில்*
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே|

033. திவ்ய ப்ரபந்தம் - 1507 - பெரிய திருமொழி - 6.6.10
செம் மொழி வாய் நால் வேத வாணர் வாழும்*
திருநறையூர் மணிமாடச் செங் கண் மாலை*
பொய்ம் மொழி ஒன்று இல்லாத மெய்ம்மையாளன்*
புல மங்கைக் குல வேந்தன் புலமை ஆர்ந்த*
அம் மொழி வாய்க் கலிகன்றி இன்பப் பாடல்*
பாடுவார் வியன் உலகில் நமனார் பாடி*
வெம் மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில்*
விண்ணவர்க்கு விருந்து ஆகும் பெருந் தக்கோரே|

034. திவ்ய ப்ரபந்தம் - 1508 - பெரிய திருமொழி - 6.7.1
ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான்* விண்ட நிசாசரரை*
தோளும் தலையும் துணிவு எய்தச்*
சுடு வெம் சிலைவாய்ச் சரம் துரந்தான்* 
வேளும் சேயும் அனையாரும்* வேல் கணாரும் பயில் வீதி*
நாளும் விழவின் ஒலி ஓவா* நறையூர் நின்ற நம்பியே|

035. திவ்ய ப்ரபந்தம் - 1509 - பெரிய திருமொழி - 6.7.2
முனி ஆய் வந்து மூவெழுகால்* முடி சேர் மன்னர் உடல் துணிய*
தனி வாய் மழுவின் படை ஆண்ட* தார் ஆர் தோளான் வார் புறவில்*
பனி சேர் முல்லை பல் அரும்பப்* பானல் ஒருபால் கண் காட்ட*
நனி சேர் கமலம் முகங் காட்டும்* நறையூர் நின்ற நம்பியே|

036. திவ்ய ப்ரபந்தம் - 1510 - பெரிய திருமொழி - 6.7.3
தெள் ஆர் கடல்வாய் விட வாய* சின வாள் அரவில் துயில் அமர்ந்து*
துள்ளா வரு மான் விழ வாளி துரந்தான்* இரந்தான் மாவலி மண்* 
புள் ஆர் புறவில் பூங் காவி* புலங்கொள் மாதர் கண் காட்ட*
நள் ஆர் கமலம் முகம் காட்டும்* நறையூர் நின்ற நம்பியே|

037. திவ்ய ப்ரபந்தம் - 1511 - பெரிய திருமொழி - 6.7.4
ஒளியா வெண்ணெய் உண்டான் என்று* உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால்*
விளியா ஆர்க்க ஆப்புண்டு* விம்மி அழுதான் மென் மலர்மேல்*
களியா வண்டு கள் உண்ண* காமர் தென்றல் அலர் தூற்ற*
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும்* நறையூர் நின்ற நம்பியே|

038. திவ்ய ப்ரபந்தம் - 1512 - பெரிய திருமொழி - 6.7.5
வில் ஆர் விழவில் வட மதுரை* விரும்பி விரும்பா மல் அடர்த்து*
கல் ஆர் திரள் தோள் கஞ்சனைக் காய்ந்தான்* பாய்ந்தான் காளியன்மேல்* 
சொல் ஆர் சுருதி முறை ஓதிச்* சோமுச் செய்யும் தொழிலினோர்*
நல்லார் மறையோர் பலர் வாழும்* நறையூர் நின்ற நம்பியே|

039. திவ்ய ப்ரபந்தம் - 1513 - பெரிய திருமொழி - 6.7.6
வள்ளி கொழுநன் முதலாய* மக்களோடு முக்கணான் வெள்கி ஓட* 
விறல் வாணன்* வியன் தோள் வனத்தைத் துணித்து உகந்தான்* 
பள்ளி கமலத்திடைப் பட்ட* பகு வாய் அலவன் முகம் நோக்கி*
நள்ளி ஊடும் வயல் சூழ்ந்த* நறையூர் நின்ற நம்பியே|

040. திவ்ய ப்ரபந்தம் - 1514 - பெரிய திருமொழி - 6.7.7
மிடையா வந்த வேல் மன்னர் வீய* விசயன் தேர் கடவி*
குடையா வரை ஒன்று எடுத்து* 
ஆயர் கோ ஆய் நின்றான் கூர் ஆழிப் படையான்*  
வேதம் நான்கு ஐந்து வேள்வி* அங்கம் ஆறு இசை ஏழ்*
நடையா வல்ல அந்தணர் வாழ்* நறையூர் நின்ற நம்பியே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 58

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஜராசந்தனின் எண்ணம்l

கம்சனுக்கு அஸ்தி, பிராப்தி என்று இரு மனைவியர் இருந்தனர். கம்சன் கொல்லப்பட்டதும் இவர்கள் தங்கள் தகப்பனாரான ஜராசந்தன் வீட்டை அடைந்தனர். ஜராசந்தன் மிக்க பலசாலி; ஆனால் கொடுங்கோல் மன்னன், விதவையாக்கப்பட்ட தன் பெண்களைக் கண்டதும் அவனுக்கு வருத்தம் மேலிட்டது. ஆதலால் அவன் கிருஷ்ணனை மாத்திரம் அல்ல, யாதவ குலத்தையே அழித்து விடுவது என்று தீர்மானித்தான். ஆயிரக்கணக்கான ரதங்களையும்  காலாட் படைகளையும் குதிரைகளையும்,  யானைகளும் கொண்டு மதுராவைத் தாக்க ஏற்பாடுகள் செய்தான்.


கிருஷ்ணனை எப்படியும் கொல்ல வேண்டும் என்று திட்டமிட்ட ஜராசந்தன் மதுரா மீது படையெடுத்தான். சிறிய நகரமான மதுராவை நோக்கி அவனுடைய படைகள் முன்னேறுவதைக் கண்டதும் மதுராவாசிகள் நடுநடுங்கினர். ஆனால் கிருஷ்ணன் நிம்மதியாக இருந்தான். ஜராசந்தனைத் தாக்கச் சரியான தருணம் எது என்று யோசித்தான்.

"நான் அவதாரம் எடுத்ததே துஷ்டர்களை அழிப்பதற்காகத்தான். அதனால் ஜராசந்தனின் படை முழுவதையும் அழித்து விட வேண்டும். அப்பொழுது தான் அவை திரும்பிச் சென்று தங்கள் படைபலத்தை அதிகரித்துக் கொள்ள முடியாது" என்று இப்படிக் கிருஷ்ணன் யோசனை செய்து கொண்டிருந்தபோது சூரியனைப் போல பிரகாசித்த இரண்டு ரதங்கள் ஆகாயத்திலிருந்து கீழே வந்திறங்கின. ஒவ்வொரு இரதத்திலும் ஒரு தெய்விகச் சாரதி இருந்ததோடு, எல்லா விதமான போர்க் கருவிகளும் இருந்தன.

உடனே கிருஷ்ணன் பலராமனை பார்த்து, "இரண்டு ரதங்களிலும் நிறையப் போர்க்கருவிகள் இருக்கின்றன. மதுராவுக்கு இப்பொழுது ஆபத்து ஏற்பட்டு உள்ளது. ஆகவே நீங்கள் ஒரு ரதத்தில் ஏறி, எல்லாப் போர் வீரர்களையும் கொல்லுங்கள். நான் இன்னொரு ரதத்தில் ஏறி, உங்களை பின் தொடர்கிறேன். நாம் எதற்காக அவதாரம் எடுத்திருக்கிறோம் என்பது உங்களுக்கு தெரியும், ஆகவே இந்த முழு படையையும் நாம் அழிப்போம்" என்றான் கிருஷ்ணன்.

கிருஷ்ணன் சொன்னதை பலராமனும் ஏற்றுக் கொண்டான். இருவரும் கவசங்கள் தரித்துச் சிறந்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, ரதத்தில் ஏறி, ஒரு சிறிய படை பின் தொடர, ஊருக்கு வெளியே வந்தனர். கிருஷ்ணனும் பலராமனும் ஜராசந்தனுடன் போர் புரியத் தயாரானார்கள். கிருஷ்ணன் பாஞ்சசன்யம் என்ற தன் சங்கை ஊதினான். சங்கநாதத்தைக் கேட்டதும், எதிரிப் படையில் இருந்த வீரர்கள் நடுங்கினர்.

ஜராசந்தன் கிருஷ்ணனையும் பலராமனையும் பார்த்தான். அது அவனுக்குப் பெருத்த ஏமாற்றத்தை தந்தது, அவன் திடகாத்திரமான இரண்டு வீரர்களை எதிர்ப்பார்த்தன். ஆனால் அவன் பார்த்ததோ கொஞ்சி விளையாடக் கூடிய இரண்டு இளம் சிறுவர்கள். இந்த இளம் சிறுவர்களான கிருஷ்ணன் எப்படித் தன் உறவினர்களை எல்லாம் கொன்றான் என்று ஜராசந்தன் மிகவும் ஆச்சரியப்பட்டான். இதை நினைக்க நினைக்க அவனுக்குக் கோபம் தான் அதிகரித்தது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - 64

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

அறுபத்தி நான்காவது வார்த்தை

064. அனந்தபுரம் புக்கேனோ ஆளவந்தாரைப் போலே|

வைணவ ஆசாரியனாகிய ஆளவந்தார், நாதமுனிகளின் பேரனாக, ஈசுவரமுனிக்கு மகனாக வீரநாராயணபுரத்தில் (தற்போதைய காட்டுமன்னார் கோயிலில்), யமுனைத்துறைவன் என்ற இயற்பெயருடன் பிறந்தார். மணக்கால் நம்பிக்குப் பிறகு ஆசாரிய பட்டம் பெற்றவர் ஆளவந்தார். தமக்குப் பிறகு வைஷ்ணவத்தைக் காக்க ராமானுஜரே சரியானவர் எனத் தேர்ந்தெடுத்தவர் இவரே.


அரையர் சேவை என்பது திருவரங்கத்திற்கே உரிய ஒரு நாட்டிய நிகழ்ச்சி ஆகும். அந்த நிகழ்ச்சியில் நடனக் கலைஞர்கள் ஆழ்வார் பாசுரங்களுக்கு இனிய இசையமைத்து, அபிநயம் பிடித்துக் காட்டுவார்கள். ஸ்ரீ ரங்கத்தில் மடம் ஒன்று அமைத்து, அரங்கனுக்கு சேவை செய்து கொண்டிருந்த ஆளவந்தார், முன் வரிசையில் அமர்ந்து, அரையர் சேவையைக் கண்டு, கேட்டு, பெருமாள் பெருமையில் மூழ்கித் திளைப்பார். ஒரு நாள், அரையர் சேவையில் முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஆளவந்தாரைக் கண்டு, திருவாய்மொழியில் வரும் "ஆனந்த நகரம் புகுதும் இன்றே' என்ற பகுதியை மூன்று முறை பாடி நடித்தனர்.

அதைக் கேட்ட ஆளவந்தார், அரங்கன், தன்னை அரையர் வாய்மொழி மூலம் அனந்தபுரம் செல்ல அறிவுறுத்துவதாக உணர்ந்தார். உடனே, நம்பெருமாளின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு, தனது மடத்தின் பொறுப்புகளை தனது சீடரான தெய்வாரியாண்டானிடம் ஒப்படைத்து விட்டு, அனந்தபுரம், என்ற திருவனந்தபுரத்திற்கு சென்று பத்மனாப சுவாமியை தரிசித்து, பெருமாள் சேவையில் சில நாட்கள் ஈடுபட்டார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "ஆளவந்தாரைப் போல் நம்பெருமாளின் குறிப்பறிந்தேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவத புராணம் - 11

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஆத்ம தேவன் - 3

ஸ்கந்தம் 01

கோகர்ணன் தந்தைக்கு ஸ்ரீமத் பாகவதத்தின் தசம ஸ்கந்தம் பாராயணம் செய்யுங்கள் என்றும் கூற, ஆத்ம தேவன் ஸ்ரீமத் பாகவத புராணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டை நீங்கினார் என்கிறது மாஹாத்மியம்.


தீர்த்த யாத்திரை சென்ற கோகர்ணன் கயாவில் இருந்த போது, தன் ஊர்க்காரர்கள் சிலரைப் பார்த்தார். அவர்களிடம் தாயும் சகோதரனும் எப்படி இருக்கிறார்கள் என்று விசாரித்தார். அவர்கள் நடந்த வ்ருத்தாந்தங்களைச் சொல்லி, துந்துலியும், துந்துகாரியும் இறந்து விட்டார்கள் என்று கூறினர். மிகவும் வருந்திய கோகர்ணன் கயாவிலேயே அவர்களுக்குச் செய்ய வேண்டிய அந்திம கிரியைகளையும், பிண்ட தானங்களையும் செய்தார்.

மந்திர பூர்வமான கிரியைகளை ஒருவரின் வாரிசுகளும், தாயாதிகளும் செய்தால் மட்டுமே அது இறந்தவரைச் சென்றடையும். ஆனால், கயா க்ஷேத்திரத்தில் மட்டும் யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் பிண்ட தானங்களைச் செய்யலாம். பயணத்தில் உடன் வந்தவர், அண்டை அயலார், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், நம் செல்ல ப்ராணிகளுக்காகக் கூட கயாவில் ச்ராத்தம் செய்யலாம். அப்படிச் செய்தால் இறந்தவருக்கு ஸ்வாமியான கதாதரன் உயர்ந்த பதத்தைக் கொடுத்து விடுவார்.

கோகர்ணனும் கயாவில் ச்ராத்தம் செய்து விட்டு, ஊருக்கு வந்து பார்க்கலாம் என்று திரும்பி வந்தார்.

வீடு பாழடைந்து பூட்டியிருந்தது. வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கண்களை மூடி, ஜபம் செய்யத் துவங்கினார். சற்று நேரத்தில் ஆடு கனைப்பது போலவும், யாரோ அலறுவது போலவும், ஊளையிடுவது போலவும் விதம் விதமான சப்தங்கள் அவரது காதில் விழுந்தன. கண்களைத் திறந்தார். எதிரே புகை போல் ஒரு உருவம் இருந்தது. அது இவரிடம் பேச விழைகின்றது என்று புரிந்து கொண்டு, சில மந்திரங்களைச் சொல்லி தீர்த்த பாத்திரத்திலிருந்து சிறிது நீரை அதன் மீது தெளித்தார். இப்போது அந்த உருவம் பேச ஆரம்பித்தது.

“கோகர்ணா! என்னைக் காப்பாத்து! என்னைக் காப்பாத்து“ அலறியது அந்த உருவம்.

கோகர்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“யார் நீ? ஏன் இப்படி இருக்க? “

“நான் தான் உன் அண்ணன் துந்துகாரி. “

“துந்துகாரியா? இதென்ன கோலம்? “

“நான் பஞ்சமா பாதங்களையும் செய்ததால துர்மரணமாகி இறந்துட்டேன். ப்ரும்ம ராக்ஷஸாகிட்டேன். எனக்கு உடம்பெல்லாம் எரியுது. அகோரப் பசி. என்னால் இந்த அவஸ்தையைத் தாங்க முடியல. இந்த ராக்ஷஸ அவஸ்தை என்னை விட்டுப் போனாப் போதும். தயவு செய்து ஏதாவது செய் கோகர்ணா“ அழுதது அந்த உருவம்.

“நீயும் அம்மாவும் இறந்துட்டீங்கன்னு கேள்விப்பட்டு நான் உங்களுக்காக கயாவில் ச்ராத்தம் செய்தேனே. அப்றம் எப்படி இந்த அவஸ்தை உனக்கு? “

“நூறு கயா ச்ராத்தம் செய்தாக் கூட என் பாவங்கள் போகாது கோகர்ணா. அவ்வளவு பண்ணிருக்கேன். என்னால் தாங்க முடியல கோகர்ணா. நான் உன் கிட்ட அன்பா ஒரு வார்த்தை கூட பேசினதில்ல. ஆனா, நீ மஹாத்மாவாச்சே. அண்ணனாச்சேன்னு கூட வேண்டாம். கஷ்டப்படற ஜீவன்னு நினைச்சாவது இரக்கம் காட்டு. என்னை இந்த அவஸ்தைலேர்ந்து விடுவிக்க ஏதாவது செய்யப்பா..“

கோகர்ணன் பல சாஸ்திர நூல்களை ஆராய்ந்தார். வழி ஒன்றும் புலப்படவில்லை. ஊரிலுள்ள அத்தனை சான்றோர்களையும் கூட்டி ஏதாவது வழி உண்டா? சாஸ்திரம் என்ன சொல்கிறது? என்று கேட்டார்.

பலவாறு விவாதங்கள் நடந்தன. முடிவில் கயா ச்ராத்தத்தை விட உயர்ந்த மார்கம் இல்லை. எல்லா சாஸ்திரங்களும் அதைத் தான் சொல்கின்றன என்றார்கள்.

ஒரு பழுத்த ஸாது சொன்னார், “கோகர்ணா, கதியில்லை என்று ஒருவரையும் சாஸ்திரம் தள்ளுவதில்லை. நிச்சயம் ஏதாவது வழி இருக்கும். நமக்குத் தான் தெரியவில்லை. ஸூரிய பகவான் ப்ரத்யக்ஷ தெய்வமாவார். அத்தனை சாஸ்திரங்களையும் அறிவார். அவரை உபாசித்தால் ஏதாவது வழி புலப்படும்.“

கேட்டதும் மகிழ்ந்தார் கோகர்ணன். அவர் காயத்ரியை கோடிக் கணக்கில் ஜபம் செய்து தேஜஸ்வியாக விளங்கியதால், “அவ்வளவு தானே“ என்று சொல்லி சூர்ய மந்திரங்களைச் சொல்லி அவரை நிறுத்தி விட்டார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்