About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 17 October 2023

108 திவ்ய தேசங்கள் - 013 - திருவிண்ணகரம் 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||013. திருவிண்ணகரம்|| 
||மார்க்கண்டேய க்ஷேத்ரம் – ஒப்பிலியப்பன் கோயில் - கும்பகோணம்||
||பதிமூன்றாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 47 - 2

திருமங்கையாழ்வார்
025. திவ்ய ப்ரபந்தம் - 1472 - பெரிய திருமொழி - 6.3.5
மற்று ஓர் தெய்வம் எண்ணேன்* 
உன்னை என் மனத்து வைத்துப் பெற்றேன்* 
பெற்றதுவும் பிறவாமை எம் பெருமான்* 
வற்றா நீள் கடல் சூழ்* இலங்கை இராவணனைச்*
செற்றாய் கொற்றவனே* திருவிண்ணகரானே|

026. திவ்ய ப்ரபந்தம் - 1473 - பெரிய திருமொழி - 6.3.6
மை ஒண் கருங் கடலும்* நிலனும் மணி வரையும்*
செய்ய சுடர் இரண்டும்* இவை ஆய நின்னை* 
நெஞ்சில் உய்யும் வகை உணர்ந்தேன்* உண்மையால் இனி* 
யாதும் மற்று ஓர் தெய்வம் பிறிது அறியேன்* திருவிண்ணகரானே|

027. திவ்ய ப்ரபந்தம் - 1474 - பெரிய திருமொழி - 6.3.7
வேறே கூறுவது உண்டு* அடியேன் விரித்து உரைக்கும் ஆறே* 
நீ பணியாது அடை* நின் திருமனத்து* 
கூறேன் நெஞ்சு தன்னால்* குணம் கொண்டு* 
மற்று ஓர் தெய்வம் தேறேன் உன்னை அல்லால்* திருவிண்ணகரானே|

028. திவ்ய ப்ரபந்தம் - 1475 - பெரிய திருமொழி - 6.3.8
முளிந்தீந்த வெம் கடத்து* மூரிப் பெருங் களிற்றால்*
விளிந்தீந்த மா மரம்போல்* வீழ்ந்தாரை நினையாதே* 
அளிந்து ஓர்ந்த சிந்தை* நின்பால் அடியேற்கு* 
வான் உலகம் தெளிந்தே என்று எய்துவது?* திருவிண்ணகரானே|

029. திவ்ய ப்ரபந்தம் - 1476 - பெரிய திருமொழி - 6.3.9
சொல்லாய் திரு மார்வா * 
உனக்கு ஆகித் தொண்டு பட்ட நல்லேனை * 
வினைகள் நலியாமை நம்பு *
நம்பீ மல்லா குடம் ஆடீ * மதுசூதனே * 
உலகில் செல்லா நல் இசையாய்* திருவிண்ணகரானே|

030. திவ்ய ப்ரபந்தம் - 1477 - பெரிய திருமொழி - 6.3.10
தார் ஆர் மலர்க் கமலத்* தடம் சூழ்ந்த தண் புறவில்*
சீர் ஆர் நெடு மறுகின்* திருவிண்ணகரானை* 
கார் ஆர் புயல் தடக் கைக்* கலியன் ஒலி மாலை*
ஆர் ஆர் இவை வல்லார்* அவர்க்கு அல்லல் நில்லாவே|

031. திவ்ய ப்ரபந்தம் - 1855 - பெரிய திருமொழி - 10.1.8
பத்தர் ஆவியைப்* பால் மதியை* 
அணித் தொத்தை* மாலிருஞ்சோலைத் தொழுது போய்* 
முத்தினை மணியை* மணி மாணிக்க வித்தினை* 
சென்று விண்ணகர்க் காண்டுமே|

032. திவ்ய ப்ரபந்தம் - 2080 - திருநெடுந்தாண்டகம் - 3.9 (29)
அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை*
அலை கடலைக் கடைந்து அடைத்த அம்மான் தன்னை*
குன்றாத வலி அரக்கர் கோனை மாளக்*
கொடும் சிலை வாய்ச் சரம் துரந்து குலம் களைந்து வென்றானை*
குன்று எடுத்த தோளினானை*
விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும் நின்றானை* 
தண் குடந்தைக் கிடந்த மாலை*
நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே|

பேயாழ்வார்
033. திவ்ய ப்ரபந்தம் - 2342 - மூன்றாம் திருவந்தாதி - 7.1 (61)
பண்டு எல்லாம் வேங்கடம்* பாற்கடல் வைகுந்தம்*
கொண்டு அங்கு உறைவார்க்கு கோயில் போல்*
வண்டு வளம் கிளரும் நீள் சோலை* வண் பூங் கடிகை*
இளங் குமரன் தன் விண்ணகர்|

034. திவ்ய ப்ரபந்தம் - 2343 - மூன்றாம் திருவந்தாதி - 7.2 (62)
விண்ணகரம் வெஃகா* விரி திரை நீர் வேங்கடம்*
மண் நகரம் மா மாட வேளுக்கை*
மண்ணகத்த தென் குடந்தை* 
தேன் ஆர் திருவரங்கம் தென் கோட்டி*
தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு|

திருமங்கையாழ்வார்
035. திவ்ய ப்ரபந்தம் - 2707 - சிறிய திருமடல் - 4.5 (35)
கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்*
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர்*
கார் ஆர் குடந்தை கடிகை கடல் மல்லை*
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை*
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர்|

036. திவ்ய ப்ரபந்தம் - 2772 - பெரிய திருமடல் - 6.10 (60)
தாமரை மேல் மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை*
பொன்னி மணி கொழிக்கும் பூங் குடந்தைப் போர் விடையை*
தென்னன் குறுங்குடியுள் செம் பவளக் குன்றினை*
மன்னிய தண் சேறை வள்ளலை|

நம்மாழ்வார் 
037. திவ்ய ப்ரபந்தம் - 3365 - திருவாய்மொழி - 6.3.1
நல்குரவும் செல்வும்* நரகும் சுவர்க்கமும் ஆய்*
வெல்பகையும் நட்பும்* விடமும் அமுதமும் ஆய்* 
பல்வகையும் பரந்த* பெருமான் என்னை ஆள்வானை*
செல்வம் மல்கு குடித்* திருவிண்ணகர்க் கண்டேனே|   

038. திவ்ய ப்ரபந்தம் - 3366 - திருவாய்மொழி - 6.3.2
கண்ட இன்பம் துன்பம்* கலக்கங்களும் தேற்றமும் ஆய்*
தண்டமும் தண்மையும்* தழலும் நிழலும் ஆய்* 
கண்டுகோடற்கு அரிய* பெருமான் என்னை ஆள்வான் ஊர்*
தெண் திரைப் புனல் சூழ்* திருவிண்ணகர் நல் நகரே|

039. திவ்ய ப்ரபந்தம் - 3367 - திருவாய்மொழி - 6.3.3
நகரமும் நாடுகளும்* ஞானமும் மூடமும் ஆய்*
நிகர் இல் சூழ் சுடர் ஆய் இருள்* ஆய் நிலன் ஆய் விசும்பு ஆய்* 
சிகர மாடங்கள் சூழ்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
புகர் கொள் கீர்த்தி அல்லால்* இல்லை யாவர்க்கும் புண்ணியமே|

040. திவ்ய ப்ரபந்தம் - 3368 - திருவாய்மொழி - 6.3.4
புண்ணியம் பாவம்* புணர்ச்சி பிரிவு என்று இவை ஆய்*
எண்ணம் ஆய் மறப்பு ஆய்* உண்மை ஆய் இன்மை ஆய் அல்லன் ஆய்* 
திண்ண மாடங்கள் சூழ்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
கண்ணன் இன் அருளே* கண்டு கொள்மின்கள் கைதவமே?

041. திவ்ய ப்ரபந்தம் - 3369 - திருவாய்மொழி - 6.3.5
கைதவம் செம்மை* கருமை வெளுமையும் ஆய்*
மெய் பொய் இளமை* முதுமை புதுமை பழமையும் ஆய்* 
செய்த திண் மதிள் சூழ்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
பெய்த காவு கண்டீர்* பெரும் தேவு உடை மூவுலகே| 

042. திவ்ய ப்ரபந்தம் - 3370 - திருவாய்மொழி - 6.3.6
மூவுலகங்களும் ஆய்* அல்லன் ஆய் உகப்பு ஆய் முனிவு* 
ஆய் பூவில் வாழ் மகள் ஆய்* தவ்வை ஆய்ப் புகழ் ஆய்ப் பழி ஆய்* 
தேவர் மேவித் தொழும்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
பாவியேன் மனத்தே* உறைகின்ற பரஞ்சுடரே|

043. திவ்ய ப்ரபந்தம் - 3371 - திருவாய்மொழி - 6.3.7
பரம் சுடர் உடம்பு ஆய்* அழுக்குப் பதித்த உடம்பு ஆய்*
கரந்தும் தோன்றியும் நின்றும்* கைதவங்கள் செய்தும்*
விண்ணோர் சிரங்களால் வணங்கும்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
வரம் கொள் பாதம் அல்லால் இல்லை* யாவர்க்கும் வன் சரணே|

044. திவ்ய ப்ரபந்தம் - 3372 - திருவாய்மொழி - 6.3.8
வன் சரண் சுரர்க்கு ஆய்* அசுரர்க்கு வெம் கூற்றமும் ஆய்*
தன் சரண் நிழற்கீழ்* உலகம் வைத்தும் வையாதும்* 
தென் சரண் திசைக்குத்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
என் சரண் என் கண்ணன்* என்னை ஆளுடை என் அப்பனே|

045. திவ்ய ப்ரபந்தம் - 3373 - திருவாய்மொழி - 6.3.9
என் அப்பன் எனக்கு ஆய்* இகுள் ஆய் என்னைப் பெற்றவள் ஆய்*
பொன் அப்பன் மணி அப்பன்* முத்து அப்பன் அன் அப்பனும் ஆய்* 
மின்னப் பொன் மதிள் சூழ்* திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்*
தன் ஒப்பார் இல் அப்பன்* தந்தனன் தன தாள் நிழலே|

046. திவ்ய ப்ரபந்தம் - 3374 - திருவாய்மொழி - 6.3.10
நிழல் வெய்யில் சிறுமை பெருமை* குறுமை நெடுமையும் ஆய்*
சுழல்வன நிற்பன* மற்றும் ஆய் அவை அல்லனும் ஆய்* 
மழலை வாய் வண்டு வாழ்* திருவிண்ணகர் மன்னு பிரான்*
கழல்கள் அன்றி* மற்றோர் களை கண் இலம் காண்மின்களே|

047. திவ்ய ப்ரபந்தம் - 3375 - திருவாய்மொழி - 6.3.11
காண்மின்கள் உலகீர் என்று* கண் முகப்பே நிமிர்ந்த*
தாள் இணையன் தன்னைக்* குருகூர்ச் சடகோபன் சொன்ன* 
ஆணை ஆயிரத்துத்* திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்*
கோணை இன்றி விண்ணோர்க்கு* என்றும் ஆவர் குரவர்களே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 53

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

மல்யுத்த வீரர்களின் வீழ்ச்சி|

அனைவரும் போட்டிக்கு தயாராகினர். புகழ் பெற்ற வீரனான சனுரா, கிருஷ்ணன் மற்றும் பலராமனிடம் சென்று, "உங்கள் இருவரின் சாகசங்களை நான் நன்கு அறிவேன், நீங்கள் நிஜத்தில் வீரர்கள் தான், நீங்கள் இருவரும் மல்யுத்தத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் என்று நன்றாக தெரியும், இதை அறிந்த மகாராஜா உங்களை இந்த போட்டிக்கு அழைத்து உள்ளார். உங்களை நான் மனமாற வரவேற்கிறேன்" என்றான். கிருஷ்ணன் சனுராவின் பொல்லாத நோக்கத்தை புரிந்துகொண்டார். ஆனால் கிருஷ்ணன் ராஜதந்திரமாக, "நாம் அனைவரும் அரசரின் ஆசைப்படி நடப்போம். ஆனால் நாங்கள் சிறிய பிள்ளைகள். எங்கள் வயிதில் இருக்கும் பிள்ளைகளுடன் சண்டையிட்டால் தான் நன்றாக இருக்கும். இந்த மல்யுத்த போட்டியில் சில விதி முறைகளை பின்பற்ற வேண்டும், இல்லையென்றால் நீங்கள் பாவத்திற்கு ஆளாகக்கூடும்."


ஆனால் சனுரா கிருஷ்ணனிடம், "கிருஷ்ணா நீங்கள் அந்த யானையை கொன்றதில் இருந்தே தெரிந்து விட்டது நீங்கள் மிக பெரிய வீரர்கள் என்று. நீங்கள் இந்த வீரர்களுடன் எதிர்த்து போரிட தயாராக உள்ளீர்கள். தாங்கள் என்னை எதிர்த்து உங்கள் பலத்தை காட்டுங்கள், பலராமன் முஷ்டிக்ஹா என்பவனை எதிர்த்து போரிட்டும்" என்றான்.

இந்த போட்டியை ஏற்றுக்கொண்டு, கிருஷ்ணனும் பலராமனும், முஷ்டிக்ஹாவையும் சனுராவையும் நோக்கி நடந்தனர். கைக்குள் கைவைத்து, காலுக்குள் கால் விட்டு, கிருஷ்ணனும் சனுராவும் ஒருவரை இருவர் இழுத்து வெற்றி பெற விரும்பினர். உடலுடன் உடல் முட்டிக்கொண்டு, கட்டி உருண்டனர். முன் பின் தள்ளி, தரையில் உருண்டு ஒருவரை ஒருவர் அடித்தனர், சனுராவை தலைமீது தூக்கி சுழற்றி அடித்து, இறுதியில் கிருஷ்ணன் சனுராவை வென்றார். இதேபோல் பலராமனும் முஷ்டிக்ஹாவை அடித்து உதைத்தார், அவன் வாயில் ரத்தம் வரும் வரை அடித்து, கடைசியில் அவனை அழித்தார்.

இருவரும் அழிந்தவுடன், மற்ற வீரர்களும் களத்தில் இறங்கினர். கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் ஈடு இணையே இல்லை. அனைவரும் சில நொடிகளிலேயே சுருண்டு விழுந்தனர். அனைத்து மக்களும் கூடி கை தட்டி அவர்களை உற்சாகம் செய்தனர். மக்களின் சந்தோஷத்துக்கு அளவேயில்லை. கோபியர் கூடத்தில் இருந்த கிருஷ்ணனின் நண்பர்கள் களத்தில் குதித்து பாட்டு பாட ஆரம்பித்தனர். கிருஷ்ணனும் பலராமனும் பாட்டுக்கு ஆடத்தொடங்கினர். அனைவரும் இவர்கள் நடனத்தை பார்த்து பெரு மகிழ்ச்சியடைந்தனர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Monday, 16 October 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - 59

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஐம்பத்தி ஒண்பதாவது வார்த்தை

059. நெடுந்தூரம் போனேனோ நாதமுனியைப் போலே|

வைணவ ஆச்சாரியர்கள் பரம்பரை வரிசையில் முதன்மையானவரான நாதமுனிகள் வீரநாராயணபுரம் எனும் இன்றைய காட்டுமன்னார்கோயில் பகுதியில் அந்தணக் குடும்பம் ஒன்றில் ரங்கநாதன் எனும் இயற்பெயருடன் பிறந்தார்.  யோகவித்தை, தேவகான இசை ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர் இவர். ஆகவே, இவரை திருவரங்கநாத முனிவர் என்று அழைத்தனர். அதுவே நாதமுனியாயிற்று. சிறுவயதிலேயே பெருமாள் மீது பற்று கொண்ட இவர், ஒரு சமயம், கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் குறித்து நம்மாழ்வார் பாடிய பத்துப் பாசுரங்களை சில வைணவர்கள் இசையுடன் பாடியதை கேட்டார். ‘ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்’ என்று அவர்கள் பாசுரங்களைப் பாடி முடித்த போது, நாதமுனிகள், “ஆயிரத்தையும் பாடக் கூடாதா?’’ என்று கேட்டார். அதற்கு அவர்களோ “திருக்குருகூரில் வசிக்கும் நம்மாழ்வாரின் சீடர் பராங்குசதாசனுக்கு தான் அத்தனையும் தெரியும்” என்றனர்.


பராங்குசதாசனைத் தேடி தாமிரபரணிக் கரைக்குப் போனார் நாத முனிகள். அவரோ, “எல்லாம் மகான் நம்மாழ்வாருக்குத் தானே தெரியும். ஆழ்வார் திருநகரியில் உள்ள புளிய மரத்தடியில் தான் அந்த மகான் மோட்சமான இடம் உள்ளது. அங்கு சென்று, நம்மாழ்வாருக்காக மதுரகவி ஆழ்வார் பாடிய ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ என்ற பாசுரத்தை பன்னிரெண்டாயிரம் முறை பாடினால் நம்மாழ்வார் காட்சி கொடுப்பார். அவர் அருளினால், ஆயிரத்தையும் நீங்கள் பெறலாம்.” என்று கூறினார்.


அதன்படியே, ஆழ்வார் திருநகரி சென்று பன்னிரெண்டாயிரம் முறை அந்தப் பாசுரத்தைப் பாடினார் நாதமுனிகள். அப்போது அவருக்கு காட்சி கொடுத்த நம்மாழ்வார், “ஆயிரமென்ன! நாலாயிரமும் உமக்குத் தந்தோம்” என்றுக் கூறி நாலாயிரம் திவ்யப் பிரபந்தங்களையும் நாதமுனிகளுக்கு அருளினார். இவர் இல்லையெனில் நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்கள் காணாமல் போயிருக்கும். அனைத்திலும் இறைவனை மட்டுமே கண்டார் நாதமுனிகள். யோக பிரபாவம் உடையவர் நாதமுனிகள். 

ஒரு நாள், அவர் யோக நிஷ்டையில் இருந்த போது, சோழ மன்னன் இவரைக் காண வந்தான். ஆனால், பார்க்க முடியாமல் திரும்பினான் .பின், அதை அறிந்த நாதமுனியார், சோழனின் தலைநகரமான கங்கை கொண்ட சோழபுரம் வரை மன்னனைக் காண நடந்தே சென்றார். இவரது இச்செயலைப் பற்றி சிஷ்யர்கள் கேட்ட போது, தான் மன்னனை, கிருஷ்ணனாகவே எண்ணுவதாகக் கூறினார்.

மற்றொரு சமயம், பிருந்தாவனம் வரை யோக மார்க்கத்தால் வந்த நாதமுனிகளைக் காண சிலர் வந்து சென்றனர். தியானம் முடிந்து விழித்த நாதமுனிகள், விஷயம் கேட்டு, யார் வந்ததென வினவ, அவர்கள், “கையில் வில்லுடன் இரு ஆடவரும், ஒரு பெண்ணும் உடன் சில வானரமும் வந்தனர்.”, என்றனர். அதிர்ந்த நாதமுனிகள், வந்தது, தான் யோகத்தில் அனுபவித்த ராமனே என்பதை உணர்ந்து, அவர்கள் சென்ற திசை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

வீர நாராயணப்பெருமாளே அவ்வாறு வந்து, போக்கு காட்டி, நாதமுனிகளை கங்கை கொண்ட சோழபுரம் வரை அழைத்துச் சென்றார். கடைசி வரை அவர்களை நாதமுனிகளால் காண முடியவில்லை. சோர்ந்துப் போன நாதமுனிகள் எங்கு செல்ல என்று காட்டில் அமர்ந்து அழ, வீர நாராயணப் பெருமாளே அவருக்கு காட்சிக் கொடுத்தார். பெருமாளைக் கண்ட ஆனந்தத்திலேயே ஸ்ரீ வைகுண்டம் புகுந்தார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "நாதமுனியைப் போலே| எம்பெருமானைக் காண நெடுந்தூரம் போனேனோ? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவத புராணம் - 6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

அசிங்கம் அழகானது

ஸ்கந்தம் 01

தென் பாரதத்தின் கோடியிலிருந்து மாதக்கணக்காக நடையாய் நடந்து, ஜென்ம சாபல்யம் அடைந்து விட வேண்டும் என்ற தீராத வேட்கையோடு, பல சிரமங்களைப் பொருட்படுத்தாது, பல ஆபத்துகளிலிருந்து தப்பி வந்தும், காசி வந்து கங்கைக் கரையை அடைந்து விட்ட பின்னரும், லட்சியம் பூர்த்தி ஆகவில்லை. கங்கா மாதா கண்ணுக்குப் புலப்படவில்லை. அழுகை அழுகையாய் வந்தது. அப்பேர்ப்பட்ட பாவியா நான்? விமோசனமே இல்லையா? கங்கா மாதாவை நினைத்து நினைத்து அழுதழுது புழுவாய்த் துடித்தார். இரவாகி விட்டது. அங்கேயே உட்கார்ந்து அரற்றிக் கொண்டு இருந்தார்.


எதனால் தனக்கு தரிசனம் கிட்டவில்லை என்று தெரிந்து கொள்ள கங்கா மாதாவைக் குறித்து தியானம் செய்யத் துவங்கினார். தியானத்தில் ஒளிப் ரவாஹமாய் கங்கா மாதா தோன்றினாள்.

"அம்மா, எனக்கு ஏன் தங்கள் ப்ரவாஹம் தெரியவில்லை?"

"நீ ஒரு பரம பாகவதோத்தமரை அவமத்து விட்டாய். அவரிடம் சென்று மன்னிப்பு வேண்டு. அவர் மன்னித்து விட்டாரானால், உனக்கு தரிசனம் கிட்டும்"

"அம்மா, நான் அனைவரிடமும் வணக்கத்துடன் பழகும் இயல்புடையவன். யாரை அவமதித்தேன்? தாங்கள் சொன்னால், ஓடோடிச் சென்று அந்தப் பெரியவரின் பதம் பணிவேன்"

"நேற்றிரவு ஒருவர் வீட்டுத் திண்ணையில் தங்கியிருந்தாயே. அவர் பெரிய மஹாத்மா. நீ அவரை நிந்தித்து பெரும் பாவத்தை சம்பாதித்துக் கொண்டாய். அவரை வணங்கி மன்னிப்புக் கேள்" என்று சொல்லி மறைந்து விட்டாள் கங்கை.

பயணி சிந்தித்தார். நேற்றிரவு சந்தித்தவரோ, காசி தெரியாது. கங்கை தெரியாது என்றார். ஆனால், கங்கா மாதாவோ அவரை மஹாத்மா என்கிறாள். பார்த்த சில நிமிடங்களில் அவரைப் பற்றி தவறான அபிப்ராயம் கொண்டு திட்டியது தவறு தான். அவரிடம் மன்னிப்பு வேண்டினால் மட்டும் போதாது. கங்கா மாதாவே ஒருவரை மஹாத்மா என்று கொண்டாடுகிறாள் என்றால் அவர் என்ன ஸாதனை செய்தார், என்ன தவம் செய்தார், ஏதேனும் மந்திர ஜபம் செய்கிறாரா, தெய்வ உபாசனையா? என்ன தான் செய்கிறார் என்று தெரிந்து கொண்டு அவரிடம் உபதேசமும் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நிச்சயித்து அந்த கிராமத்தை நோக்கி நடந்தார்.

ஒரு நாளலெல்லாம் நடந்து அந்த வீட்டை அடையும் போது இருட்டி விட்டது. இரவில் தொந்தரவு செய்யக் கூடாதென்று திண்ணையில் படுத்தார்.

அப்போது மிகவும் கோரமான உருவம் கொண்ட ஏழு பேர் அந்த வீட்டினுள் சென்றனர். அவர்களின் உருவத்தைப் பார்த்து பயந்து போன பயணி வீட்டிற்குள் எட்டிப் பார்த்தார்.

அந்த வீட்டுப் பெரியவர் உறங்கிக் கொண்டிருக்க, ஒருத்தி விசிறினாள். மற்றவர்கள் வீட்டைப் பெருக்கி, நீர் கொண்டு வந்து மெழுகி, கோலம் போட்டு, வீட்டை ஒழுங்கு செய்து என்று அத்தனை வேலைகளையும் செய்தார்கள்.

எல்லா வேலைகளும் முடியவும் ப்ரும்ம முகூர்த்தம் வரவும் சரியாக இருந்தது. இப்போது அந்தப் பெண்கள் அனைவரும் அதிரூப சுந்தரிகளாக மாறி விட்டிருந்தனர். ஏழு பேரும் வீட்டை விட்டுக் கிளம்பி வெளியே வரும் நேரம், அவர்களுக்குத் தலைவி போல் இருந்த ஒரு பெண்ணின் காலில் சென்று விழுந்தார் நமது பயணி. உற்றுப் பார்த்ததும் அவள் தான் நேற்று தியானத்தில் தரிசனம் கொடுத்  கங்கா மாதா என்று உணர்ந்து கொண்டார்.

"அம்மா நீங்களா? இவர்களெல்லாம் யார்? நீங்கள் வந்து சேவை செய்யும் அளவிற்கு இவர் உயர்ந்தவரா? தெரியாமல் தவறு செய்தேன் அம்மா"

கங்கா புன்சிரிப்போடு சொன்னாள்.

நாங்கள் கங்கா, யமுனா, ஸரஸ்வதி, நர்மதா, கோதாவரி, ஸிந்து, காவேரி ஆகிய ஸப்த் புண்ய நதிகளாவோம். நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் எங்களிடம் ஸ்நானம் செய்து தங்கள் பாவத்தைப் போக்கிக் கொள்கிறார்கள். அவற்றின் தாக்கத்தால் நாங்கள் குரூபிகளாக மாறி விடுகிறோம். தினமும் இவருக்கு ஸேவை செய்வதன் மூலம் எங்களிடம் சேர்ந்த பாவங்கள் அனைத்தும் தொலைந்து போய், நாங்கள் எங்கள் ஸ்வரூபத்திற்குத் திரும்புகிறோம். நீ பொழுது விடிந்ததும் அவரை வணங்கு" என்று சொல்லி விட்டு ஆறு புண்ய நதிகளுடனும் மறைந்து போனாள் கங்கா மாதா.

பொழுது எப்போது விடியும் என்று மிகுந்த ஆர்வத்தோடு காத்திருக்கலானார் பயணி.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்