About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 26 September 2023

108 திவ்ய தேசங்கள் - 011 - திரு ஆதனூர் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||011. திரு ஆதனூர்||
||கும்பகோணம்|| 
||பதினொன்றாவது திவ்ய க்ஷேத்ரம்||

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த 
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில் 
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 1 பாசுரம்

001. திருமங்கையாழ்வார் - 1 பாசுரம்
1. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் – 2781 - ஏழாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (69)

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி 

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி 
இடர் ஆன ஆக்கை இருக்க முயலார்*
மடவார் மயக்கின் மயங்கார்* 
கடவுளர்க்கு நாதன் ஊர் ஆதரியார்* 
நான் எனது என்னார் அமலன்*
ஆதனூர் எந்தை அடியார்|

  • அமலன் – குற்றமற்றவனும்
  • ஆதனூர் எந்தை – திருஆதனூர் என்னும் ஸ்தலத்தில் எழுந்தருளி உள்ளவனுமாகிய எம்பெருமானது
  • அடியார் – பக்தர்கள்
  • இடர் ஆன ஆக்கை இருக்க முயலார் – பலவகைத் துன்பங்கட்கும் இடமாகிய தமது உடம்பு நிலைத்து இருக்குமாறு முயற்சி செய்ய மாட்டார்கள்
  • மடவார் மயக்கில் மயங்கார் –இள மகளிரது மோக வலையிற் சிக்கித்து இயங்க மாட்டார்கள்
  • கடவுளர்க்கு நாதன் ஊர் ஆதரியார் – தேவர்கட்குத் தலைவனான இந்திரனது ஊரையும் சுவர்க்க லோக இன்பத்தையும் விரும்ப மாட்டார்கள்
  • நான் எனது என்னார் – அகங்கார மமகாரச் சொற்களையும் சொல்ல மாட்டார்கள்

------------------
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரம் - 1

திருமங்கையாழ்வார் 
001. திவ்ய ப்ரபந்தம் – 2781 - பெரிய திருமடல் - 7.9 (69)
மூழிக்களத்து விளக்கினை*
அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை*
நென்னலை இன்றினை நாளையை* 
நீர் மலை மேல் முன்னவனை|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 44

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

மீண்டும் நாரதர் கம்சன் சந்திப்பு|

நாரத முனி, கிருஷ்ணன் ஒவ்வொரு அரக்கனையும் கொள்வதை பார்த்துக் கொண்டிருந்தார், கம்சனின் வதம் நடக்க வேண்டிய நேரமும் வந்தது. நாரதர் அதனை பற்றி கூற கம்சனிடம் சென்றார், அசுரன் ஆனாலும் கம்சன், நாரதரை பணிவுடனே வரவேற்றான். இருவரும் பல விஷயங்களை பற்றி அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தனர். இறுதியாக விஷயத்துக்கு வந்தார் நாரதர், "கம்சா நீ இங்கு நடக்கும் மர்மத்தை பற்றி தெரிந்து வைத்திருக்கவில்லை, பெண்ணாக பிறந்த எட்டாவது குழந்தை தான் யசோதையின் மகள், மற்றும் கிருஷ்ணன் தான் தேவகியின் உண்மையான எட்டாவது மகன். பலராமன் ரோஹிணிக்கும் வசுதேவருக்கும் பிறந்தவன். உன்னிடம் உள்ள பயத்தால் தான் நந்தரிடம் கிருஷ்ணன் ஒப்படைக்கப்பட்டான். இப்பொழுது கிருஷ்ணன் வளர்ந்து விட்டான், இனி உன்னை பார்த்து யாரும் பயப்பட மாட்டார்கள்." இதை கேட்ட கம்சன் மிகவும் கோபமுற்றான். வசுதேவர் அவனை ஏமாற்றியதற்காக கொல்லப்பட வேண்டும் என்று முடிவு செய்தான். இதனை கேட்ட நாரதர், "நீ என்ன செய்தாலும் உனக்கு உதவாது, நீ இனி கிருஷ்ணனை எப்படி கொல்லலாம் என்று மட்டுமே முடிவு செய்ய வேண்டும்" என்றார் நாரதர். நாரதர் ஆயிற்றே, அவர் வேலை முடிந்ததும், “நாராயண நாராயண” என்று கூறி கொண்டே புறப்பட்டார். மறுபடியும் கம்சன் வசுதேவரையும் தேவகியையும் சிறையில் போட்டு அடைத்தான்.


கேசி என்ற அசுரனை அழைத்து "பிருந்தாவனம் சென்று கிருஷ்ணனையும் பலராமனையும் கொன்று விட்டு வா" என்றான். அவனை அனுப்பி விட்டு அனைத்து மந்திரிகளையும் அழைத்தான். அதில் முக்கியமானவர்கள் முஷ்டிகா, சனுறா, ஷாலா, டோஷாலா. அவர்களை நோக்கி "என் இனிய நண்பர்களே, வீரர்களே, உங்களுடைய துணை எனக்கு தேவை. வாசுதேவனின் எட்டாவது மகன் பிருந்தாவனத்தில் வசிப்பதாக கேள்விப் பட்டேன், அவனையும் அவன் அண்ணன் பலராமனையும் அழிக்க கேசியை அனுப்பி உள்ளேன், இதில் கேசி வெற்றி பெறுவான் என்று நம்புகிறேன். அவனால் முடியவில்லை என்றால், கிருஷ்ணன் பலராமனை நமது ஊரில் நடக்கும் குத்து சண்டைக்கு அழைத்து உங்கள் மூலம் அவர்களை வீழ்த்தலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் நால்வர் தான் நமது ஊரில் நல்ல குத்து சண்டை வீரர்கள், உடனே சென்று சரியான இடத்தில் குத்து சண்டை மைதானத்தை அமைத்திடுங்கள், எல்லோரும் பார்க்கும் இடத்தில் அமைப்பது முக்கியம், அவர்கள் இயற்கையாக மரணம் அடைந்ததை போல இருக்குமாறு செய்யுங்கள். யானை படை தளபதியே, இந்த அரங்கம் வாசலில் நமது குவலயபிதா என்ற யானையை நிறுத்துங்கள், அவர்கள் உள்ளே நுழையும் போது அவர்களை யானையின் கால்களால் நசுக்க சொல்லுங்கள். நான் ஈசனுக்காக யாகம் நடத்தி நீண்ட ஆயுளை கேட்க போகிறேன்."


கம்சன் என்னத் தான் தைரியமாக பேசினாலும், மனதிற்குள் சிறிய பயம் இருந்து கொண்டே இருந்தது. தனது நண்பனான அக்ருரா என்ற யாதவனை அழைத்து, "எனது அருமை நண்பா, எனக்கு ஒரு சின்ன உதவியை நீ செய்ய வேண்டும், நீங்கள் சென்று கிருஷ்ணனையும் பலராமனையும் எந்த வித தடங்கலும் இன்றி நமது தேரில் அழைத்து வரவேண்டும். தேவர்கள், மஹா விஷ்ணுவின் துணையுடன் என்னை கொள்ள முயற்சிப்பதாக கேள்விப் பட்டேன், அதுவும் கிருஷ்ணன் பலராமன் உருவில். நீ சென்று அந்த இருவர் மற்றும் அவரது தந்தை நந்தர், மற்ற கோபியர்களை அழைத்து வா, அவர்கள் இங்கு வந்தால் நமது யானை அவர்களை கொன்று விடும். யானையிடம் இருந்து தப்பித்தால் நமது குத்து சண்டை வீரர்கள் அவர்களை கொன்று விடுவார்கள்”. 

அக்ருரன் எல்லாவற்றையும் கேட்டு விட்டு, கம்சனுக்கு சில அறிவுரைகளை கூறினான். "என் அருமை தோழா, நீ என் மேல் வைத்திருக்கும் அன்பினை நினைதால் பெருமையாக உள்ளது, நீ உன்னை ஆபத்தில் இருந்து காப்பற்றி கொள்ள நினைப்பது சரி தான், ஆனால் ஒரு மனிதனின் வாழ்கையில் உள்ள வெற்றி தோல்வி அனைத்தும் ஆண்டவன் கையில் மட்டுமே உள்ளது, அதனால் அனைத்தையும் ஒன்று போலவே எடுத்து கொள்ள வேண்டும், நீ சொன்னதை நான் கண்டிப்பாக செய்கிறேன் உனது கட்டளையின்படி." இதை கூறிவிட்டு அக்ருரன் பிருந்தாவனத்திற்கு புறப்பட்டார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - 50

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஐம்பதாவது வார்த்தை

050. இனியது என்று வைத்தேனோ சபரியைப் போலே|

சபரி ஒரு வேடுவ குலப் பெண். (வேடர்களில் தேன், அரக்கு போன்ற பொருட்களைச் சேகரித்து விற்கும் பிரிவினரைச் சபரர் என்பர்). அவள் காட்டில் மிருகங்களை அடித்துச் சாப்பிடுபவள். ஒரு நாள் அவளுக்கு நல்ல பசி, யாராவது வர மாட்டார்களா அடித்துச் சாப்பிடலாம் என்று காத்துக் கொண்டு இருக்கும் போது மதங்க முனிவரின் சிஷ்யர்கள் குளித்து விட்டு வேதம் ஓதிக் கொண்டு சபரி இருக்கும் இடத்தை நோக்கி வந்தார்கள். அவர்கள் ஓதிய வேத ஒலியில் மயங்கி உருகினாள் சபரி. அவளுக்குள் ஒரு பரவசம் ஏற்பட்டது.


தினமும் அந்த இடத்தில் உட்கார்ந்து சிஷ்ய குழந்தைகள் வரும் காட்சியை மறைவாகக் கண்டு களிப்பது அவளுக்கு ஆனந்தம். இந்தக் குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது.

குழந்தைகள் போகும் பாதையில் உள்ள முள், கற்களை எல்லாம் சுத்தம் செய்து, தண்ணீர் தெளித்து அழகிய பூக்களால் கோலம் போட்டு வைத்தாள். இதைத் தினமும் கவனித்த குழந்தைகள் தங்களின் குரு மதங்க முனிவரிடம் ஓடிச் சென்று “குருவே! தினமும் யாரோ நாங்கள் நடக்கும் வழியைச் சுத்தம் செய்து வைக்கிறார்கள்” என்றார்கள். மதங்க முனிவர் “யார் என்று கண்டு பிடித்து அழைத்துக் கொண்டு வாருங்கள்” என்கிறார்.


குழந்தைகள் அன்று சீக்கிரமே சென்று ஒரு மரத்துக்குப் பின் ஒளிந்து கொண்டு பார்த்தார்கள். அங்கே சபரி சுத்தம் செய்து, தண்ணீர் தெளித்தாள். குழந்தைகள் ”எங்கள் குரு உங்களைக் கூப்பிடுகிறார்” என்று சபரியை அழைத்துக் கொண்டு போனார்கள். சபரி மதங்க முனிவரைப் பார்த்தவுடன் அவரின் காலில் விழுந்து வணங்குகிறாள்.

முனிவர் அவளுக்கு ஆசி வழங்கி “இந்த ஆசிரமத்திலேயே தங்கி இங்கே ஏதாவது வேலை செய்து கொண்டு இரு” என்கிறார். அவளும் ஆசிரமத்தைச் சுத்தம் செய்வது. தோட்டம் அமைத்துப் பூச்செடி வளர்ப்பது. முனிவர்களுக்கும், அவருடைய சீடர்களுக்கும் பழங்களைப் பறித்துக் கொடுப்பது என்ற சிறு சிறு வேலைகளைச் செய்து அங்கேயே தங்கினாள். முனிவர்களும், சீடர்களும் சாப்பிட்ட பிறகு மீதம் இருப்பதைத் தான் சாப்பிடுவாள். நாட்கள் செல்ல செல்ல, சபரியைத் தமது முதன்மை சிஷ்யையாக அங்கீகரித்தார் மதங்கர். இப்படியே பல காலம் கழிந்தது.

மதங்க முனிவருக்கு வயதாகி கடைசிக் காலம் நெருங்கச் சிஷ்யர்களிடம் “நான் மோட்ச கதியை அடையப் போகிறேன். உங்களுக்கு என்ன தேவையோ கேளுங்கள்” என்றார். சிஷ்ய குழந்தைகள் அவர்களுக்கு என்ன என்ன மந்திரங்கள் தேவையோ அதை உபதேசமாகப் பெற்றுக் கொண்டார்கள். இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த சபரியிடம் “இங்கே வா” என்று அன்புடன் அழைத்தார் முனிவர்.


சபரி பணிவுடன் முனிவர் அருகில் சென்றாள். மதங்கர் இல்லா உலகம் தனக்கும் வேண்டாம். எனவே தன்னையும் அழைத்து செல்லுமாறு சபரி வேண்டினார். முனிவர் சபரியிடம்” ‘ராம’ என்று சொல்லு” என்றார். சபரியும் ‘ராம’ என்று சொல்லி விட்டு ’ராம’ என்பதற்கு என்ன பொருள்?” என்று கேட்டாள். முனிவர் ‘ராம’ என்ற சொல்லையே தினமும் தியானம் செய்து கொண்டு இரு, இதன் அர்த்தமே உன்னைத் தேடி வரும். அப்படி உன்னைத் தேடி வரும் போது நீ அவருக்கு எல்லா பணிவிடைகளையும் செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டு முனிவர் மோட்சம் அடைந்தார்.

வருடங்கள் பல சென்றன. எந்த எதிர்பார்ப்பும் இன்றி, குருவின் வார்த்தைக்கு மதிப்பளித்து, அவரது வாக்கில் பூரண நம்பிக்கை வைத்து காலம் செல்வதைப் பற்றி துளியும் சிந்திக்காமல், தினமும் காலை எழுந்து குளித்து விட்டு, தன் குருவைத் தியானித்து விட்டு, குருவின் சீடர்களுக்குப் பணிவிடை செய்து விட்டு, குரு உபதேசித்த ‘ராம’ மந்திரத்தை வாழ்நாள் முழுவதும் ஓதிக் கொண்டிருந்தார். சபரி தனது குருநாதரின் கட்டளைப்படி தவவாழ்க்கை மேற்கொண்டு ஸ்ரீ இராமனின் வரவை எதிர்ப்பார்த்து காத்திருந்தார். 

ஒவ்வொரு நாளும் ராமனின் வருகையை எதிர்பார்த்திருந்த முதியவரான சபரி, அனுதினமும் காலை, தனது கைத்தடியுடன் ஆஷ்ரமம் நீங்கி, காட்டினுள்ளே சென்று, ராமர் வந்தால் அவரை உபசரிக்க எந்த மரத்தின் பழம் இனிக்கிறது சோதித்து பார்த்து என்று அதை எல்லாம் பறித்து வருவார். அவற்றைக் கடித்துச் சுவைத்துப் பார்ப்பார். இனிய சுவையுடைய கனிகளை மட்டும் ராமனுக்கு என்று தனியே எடுத்து வெய்யில் காய வைத்து வைப்பார். தனது கூடை நிரம்பியவுடன், ஆஷ்ரமம் சேர்ந்து, ஸ்ரீ இராமனின் வருகைக்காக வாசலில் அமர்ந்து விடுவார்.  

ஒரு நாள் ஆசிரமத்துக் குழந்தைகள் ‘பாட்டி பாட்டி யாரோ இரண்டு பேர் வில்லும் கையுமாக வருகிறார்கள்” என்று சொல்லச் சபரி விரைந்து சென்று பார்த்த போது அங்கே ராமரும், லக்ஷ்மணரும் வில்லுடன் காட்சி கொடுத்தார்கள்.

குரு சொன்னது நினைவுக்கு வந்தது. உடனே அவர்களை வரவேற்று, கைகளைக் கூப்பி வணங்கி, கீழே விழுந்து ராமரின் திருவடிகளை இருக்கையாலும் இறுகப் பற்றிக் கொண்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி ஓடியது.

”ராமா! நான் தவம் செய்த வார்த்தையை இப்போது நேராகப் பார்க்கிறேன். பல்லாண்டுகளாக மேற்கொண்டிருந்த தவத்தின் பயன் என்னை வந்தடைந்தது. ராமரின் திருவடிகளில் தண்ணீரால் அலம்பி விட்டாள். அலம்பி ஓடும் திருவடி பட்ட தண்ணீரை தன் தலையிலும் உடலிலும் எடுத்துப் பூசுக் கொண்டாள். அதைப் பருகினாள். நறுமணமுள்ள மலர்களால் அர்ச்சித்தாள்.

“ராமா என் குருவிற்குக் கூடக் கிடைக்காத உன் தரிசனம் எனக்குக் கிடைத்தது. நானோ ஒரு பெண், நல்லறிவு இல்லாதவள், தாழ்ந்த ஜாதியில் பிறந்தவள், நீயோ முனிவர்களாலும் அறிய முடியாதவள். உன் அடியார் அடியார் என்றபடி நூறாவது தொண்டனுக்குக் கூடக் கைங்கரியம் செய்யும் உரிமை எனக்கு இல்லை!” என்று ஆனந்தக் கண்ணீர் விட்டாள்.

ராமர் சபரியை அன்புடன் பார்த்து “சபரி என்னை ஒருவன் அடைவதற்கு ஆண்மையோ பெண்மையோ, உயர் ஜாதிப் பிறப்போ, பெயரோ, பிரம்மச்சரியம், இல்லறம், வானப்ஸ்தம், சன்னியாசி என்று எதுவும் கிடையாது. என்னிடம் உண்மையான பற்றும் பக்தியும் தேவை. அந்தப் பக்தி ஏற்படுவதற்குக் காரணம் நல்ல குருவின் சம்பந்தம் முக்கிய காரணம் என்று சொல்லிவிட்டு “சபரி! குருவிற்குச் செய்ய வேண்டிய கைங்கரியத்தை ஒழுங்காகச் செய்கிறாயா?“ என்று ராமர் விசாரித்தார்.

உடனே சபரி “ராமா! என் குரு நீ வந்தால் உபசரிக்கச் சொன்னார். இதோ நான் உனக்காக அன்புடன் சேமித்து வைத்த பழங்களை நீ ஏற்க வேண்டும்” என்று கை நிறையப் பழங்களை எடுத்து ராமருக்கு நீட்டினாள்.

சபரியால் கடித்துச் சுவைத்துப் பார்த்து, தனக்கென்று வைத்திருந்த இனிய கனிகளை ராமர் உண்டு மகிழ்ந்தார். லக்ஷ்மணனுக்கும் கொடுத்தார். இதைத் தவிர சபரிக்கு வேறு என்ன வேண்டும். அவளுக்கு அதுவே இனியதானது. சபரி உன் கையால் கொடுத்த பழங்கள் இனிய சுவையாக இருக்கிறது என்றார். அதற்குச் சபரி ”இதற்குக் காரணம் நான் இல்லை. என் குரு தான்! அவர் அருளால் உன் திருவடி அருளைப் பெற்றேன். அவர் அருளால் நான் செய்த தவம் சித்தியடைந்தது. அவர் அருளால் பிறவிப் பயன் பெற்றேன். அவர் அருளால் மோட்சமும் எனக்குக் கிடைக்கப் போகிறது. நான் கைங்கரியம் செய்த குரு நீ இங்கே வரும் சமயம் உங்களை வரவேற்று உபசரித்து வழியனுப்பி விட்டு என்னையும் மோட்சம் பெறுவாயாக என்று கட்டளையிட்டார். அதனால் நீ வருவதற்குக் காத்துக் கொண்டு இருந்தேன்” என்று சொல்லிவிட்டு.

சபரி ஆர்வமாக ”ராமா என்னுடன் வா உனக்கு என் குரு மதங்க முனிவரின் ஆசிரமத்தைச் சுற்றிக் காட்டுகிறேன்” என்றாள். ராமர் சபரியின் பின் சென்றார். சபரி “இங்கே தான் குரு தினமும் பகவத் தியானம் செய்வார், இதோ இந்த இடத்தில் தான் காயத்திரி மந்திரத்தை ஜபிப்பார், இங்கே யாக ஹோமங்களைச் செய்வார். அங்கே மரத்துக்குப் பக்கம் தான் அவர் நீராடிய இடம், இது அவரின் மரவுரிகள்” என்று எதையும் விட்டு வைக்காமல் ராமரிடம் காண்பித்து தன் குருவின் மேன்மையைக் கூறினாள் சபரி. இதை எல்லாம் கேட்ட ராமர் உள்ளன்போடு ”நீ விருப்பபட்டதை பெறுவாயாக” என்று சொன்னார். சபரி ராமரை வணங்கினாள். தீ வளர்த்து அதில் இறங்கி தன் குருவின் திருவடியை அடைந்தாள்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "சபரியைப் போல் இனிய பழங்களை மட்டுமே பெருமாளுக்கு ஈந்தேனோ? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Sunday, 24 September 2023

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - அறிமுகம் 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

இராமாயணம் என்னும் பெயர் இராமன், அயனம் என்னும் சொற்களின் கூட்டாகும். காவியத்தின் மையப் பாத்திரத்தின் பெயரான இராம, இரண்டு சூழ்நிலை அர்த்தங்களைக் கொண்டுள்ளது. அதர்வவேதத்தில், இது 'அடர், அடர் நிறம், கருப்பு' என்று பொருள்படும் மற்றும் 'இரவின் இருள் அல்லது அமைதி' என்று பொருள்படும் இராத்திரி என்ற வார்த்தையுடன் தொடர்புடையது. அயனம் என்னும் சொல் ஸமஸ்க்ருதத்தில் பயணம் என்னும் பொருளுடையது. இதனால், இராமாயணம் என்பது "இராமனின் பயணம்" என்று பொருள்படும்.

தமிழில் கம்பரும், வடமொழியில் வால்மீகியும், இந்தியில் துளசி தாசரும், மலையாளத்தில் எழுத்தச்சனும், அசாமியில் மாதவ் கங்குனியும், ஒரியாவில் பலராம்தாசுவும் இயற்றியுள்ளனர்.

இராமாயணத்தின் கதை பல மட்டங்களில் தொழிற்படுகின்றது. ஒரு மட்டத்தில் இது அக்காலத்துச் சமூகத்தை விவரிக்கின்றது. பரந்த பேரரசுகள், அடுத்த அரசர்களாக வரவிருக்கும் இளவரசர்களின் வாழ்க்கை, தாய்மாருக்கும் மாற்றாந் தாய்களுக்கும் இடையிலான போட்டி, உடன் பிறந்தோருக்கு இடையிலான அன்புப் பிணைப்பும் விசுவாசமும், இளவரசிகளை மணம் முடிப்பதற்கான போட்டிகள் போன்றவை இவற்றுள் அடக்கம். இன்னொரு மட்டத்தில் இது, நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் ஒரு மனிதன், ஒரு தலைவனாக எவ்வாறு நடந்துகொள்கிறான் என்பதையும், நிலைமைகளை ஒன்று போல எதிர்கொண்டு, சமயத்துக்குத் தக்கபடி நடந்து, தனது சொந்தத் துன்பங்கள் முதலியனவற்றுக்கும் அப்பால் குடிமக்களை எவ்வாறு வழிநடத்துகிறான் என்பதையும் காட்டுகிறது. வேறொரு மட்டத்தில் இது, தீமையை ஒழித்து நீதியை நிலை நாட்டுவதற்காக மனிதனாகத் தனது ஏழாவது அவதாரத்தை எடுத்த விஷ்ணுவின் கதையும் ஆகும்.

வால்மீகி இராமாயணம் 24,000 பாடல்களைக் கொண்டது. இவை மொத்தம் ஏழு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை இராமரின் பிறப்பில் இருந்து இறப்பு வரை விளக்குகின்றன. அவை:

பால காண்டம்
ராமன் மற்றும் அவன் சகோதரர்களின் பிறப்பு. ராமனது குழந்தைப் பருவம், அவனது குறும்பான விளையாட்டுக்கள், திருமணம். எதிர்காலத்தில் அவன் சந்திக்க போகும் சோதனைகளின் அடிப்படை போன்றவை இந்த பாலகாண்டத்தில் இருந்துதான் தொடங்குகிறது.

  • ராமாயணத்தின் உருவாக்கம்
  • ராம் பிறப்பு
  • விஸ்வாமித்திரரின் யாகத்தைப் பாதுகாத்தல்
  • ஜனக்புரியில் ராமரும் லட்சுமணனும்
  • ராம் - திருமணம்

அயோத்தியா காண்டம்
ராமாயணத்தின் இரண்டாம் பாகம். ராமன் சீதையை கண்டது. சீதையுடன் திருமணம். இளவரசனாக அயோத்தியில் வாழ்ந்த காலத்தின் சம்பவங்களை ஸ்ரீராமரின் முடிசூட்டுக்கான ஏற்பாடுகள், அரச குடும்பத்தில் ஒருத்தியாக மரியாதை தரப்பட்ட கூனி, அதே அரச குடும்பத்தை பாதகத்தில் தள்ளி, ராமன் காட்டுக்குச் அனுப்பப்பட்ட சம்பவங்ககள் அடங்கும்.

  • ராமர் பிரதிஷ்டை மற்றும் கைகேயியின் இரண்டு ஆசீர்வாதங்களுக்கான ஏற்பாடுகள்
  • ராமரின் வன நடை
  • வன பயணம்
  • அயோத்தியில் கூச்சல்
  • சித்ரகூடத்திற்கு பாரதத்தின் வருகை

ஆரண்ய காண்டம்
ராமாயணத்தின் மூன்றாம் பகுதி. ராமனது வனவாசத்தை காட்டுகிற பகுதி. ராமர், சீதை மற்றும் லட்சுமணன் தண்டகாரண்யத்திற்குள் நுழைகின்றனர்.

  • முனிவர்களுடன் சந்திப்பு
  • களை மாசுபாட்டிற்கு எதிரான போர்
  • மாரிச் மாயை மற்றும் தங்க மான்
  • ராமனிடமிருந்து பிரிந்து சீதையைத் தேடுதல்

கிஷ்கிந்தா காண்டம்
ராமாயணத்தின் நான்காம் பகுதி. ராமனது வனவாசத்தின் போது கடத்திச் செல்லப்பட்ட சீதையைத் தேடி போக, வானரப் படை உருவானதையும், ஸ்ரீ அநுமான் என்கிற மகிமை பொருந்திய வானரரின் நட்பு ராமனுக்கு அமைந்த சம்பவத்தையும்,  வானரர் நாட்டில் இராமன் வாழ்ந்ததையும் சொல்கிற பகுதி. ஸ்ரீ ராமர் - அனுமன் மற்றும் சுக்ரீவரின் சந்திப்பு, சுக்ரீவரின் துக்கத்தைக் கேட்பது, பாலியின் முக்தி, சீதையைத் தேடி அனைவரும் புறப்படுவது மற்றும் ஹனுமானின் வலிமையை நினைவுபடுத்தும் ஜம்வந்த் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

  • ராமர் மற்றும் சுக்ரீவரின் நட்பு
  • குழந்தை படுகொலை
  • குரங்குகளால் சீதையைத் தேடுதல்

சுந்தர காண்டம்
ராமாயணத்தின் ஐந்தாம் பகுதி. சீதையைத் தேடி அனுமன் இலங்கைக்குப் புறப்பட்டது, சுர்சாவின் சந்திப்பு, லங்கானி கொலை, சீதா மற்றும் அனுமன் உரையாடல், இலங்காவை எரித்தல், ஹனுமான் திரும்புதல், ராவணன் - விபீஷண உரையாடல், விபீஷணன் ஸ்ரீ ராமரிடம் தஞ்சம் புகுந்தது மற்றும் கடல் மீது கோபம் வரையிலான நிகழ்வுகள். 

  • அனுமனின் இலங்கைப் பிரவேசம்
  • லங்கா - தஹான்
  • அனுமன் இலங்கையிலிருந்து திரும்புதல்

யுத்த காண்டம்
ராமாயணத்தின் ஆறாம் பகுதி. ராமனுக்கும் ராவணனுக்கும் இடையே நடந்த கடுமையான யுத்தத்தை சொல்கிற பகுதி யுத்தகாண்டம். இலங்கை சம்பவத்தில், நல் நீல் கடலில் பாலம் கட்டியது, அனைவரும் கடல் கடந்தது, அங்கத் - ராவணன் உரையாடல், லக்ஷ்மணன் - மேகநாதர் போர், சஞ்சீவனியை கொண்டுவர செல்லும் அனுமன், கும்பகர்ணனின் எழுச்சி மற்றும் அவரது இறுதி பாதை, மேகநாத் போர், ராமர் - ராவண போர், சீதாவின் அக்னிச் சோதனை, விபீஷணனின் முடிசூட்டு விழா மற்றும் ஸ்ரீ சீதா ராம் அவத் புறப்பாடு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

  • போர் அணிவகுப்பு மற்றும் பாலம் கட்டுமானம்
  • போருக்கான ஆயத்தங்கள் மற்றும் அங்கத் இலங்கைக்கு புறப்பட்டது
  • கடுமையான முன்
  • கும்பகர்ண போர்
  • லட்சுமணன் - மேகநாத் போர்
  • ராமர் - ராவணன் போர்
  • அயோத்தியில் ராமருக்கு முடிசூட்டு விழா

உத்தர காண்டம்
இலங்கை போரில் ராவணன் வீழ்ந்து, ராமன் வெற்றி பெற்று, ராமன் அயோத்திக்கு மீண்டும் அரசனானதும், சீதை மீண்டும் காட்டுக்கு அனுப்பப்பட்டதையும் சொல்கிற சம்பவ பகுதி இது. இப்படியாக ஏழு காண்டங்களை கொண்டது வால்மீகி ராமாயண காவியம்.

இராமாயணத்தின் முக்கிய கதை மாந்தனான இராமன், இந்துக்களின் முதன்மைக் கடவுளரில் ஒருவர். மும்மூர்த்திகளுள் ஒருவரான திருமாலின் 10 அவதாரங்களுள் ஒருவராகப் போற்றி வழிபடப்படுபவர். உலகில் தீமையை ஒழித்து அறத்தை நிலைநாட்டுவதற்காக திருமால் இப் புவியில் தோன்றியதாக இந்துக்கள் நம்புகின்றனர். ஆண்டு தோறும் பலர் இராமர் பயணம் செய்த பாதையைப் பின்பற்றி யாத்திரை செய்கின்றனர். இந்த இதிகாசம், ஒரு இலக்கியமாக மட்டுமன்றி, இந்து சமயத்துடன் இரண்டறக் கலந்துள்ளது. இதனைப் படிப்பவர்களதும், படிக்கக் கேட்பவர்களதும் பாவங்கள் நீங்கி, இறைவன் அருள் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

வால்மீகியினால் இயற்றபட்ட ராமாயணந்தான் சமஸ்கிருத பாஷையின் முதல் இலக்கியமாகும். ஆகவே அது ஆதி காவியம் என்ற புகழையடைந்தது. 
வால்மீகி ராமாயணம் நவாஹ பாராயண முறை.
04-05-14, 15:05 ராமாயண நவாஹ பாராயண விதி.

ஶ்ரீ ராம நவமி புண்ய காலத்தில் ஶ்ரீ மத் ராமாயணத்தை நவாஹ க்ரமத்தில் அதாவது ஒன்பது நாட்கள் , தானோ அல்லது தகுந்த நபர்கள் மூலமாகவோ வீட்டில் பராயணம் செய்யலாம். அல்லது காதால் கேட்கலாம். ஒவ்வொரு நாளும் எந்த கட்டம் வரை பாராயனம் செய்ய வேண்டும்.

  • 1. பாலகாண்டம் ஒன்று முதல் 70 ஆவது ஸர்க்கம் வரை
  • 2. பாலகாண்டம் 71 முதல் அயோத்யா காண்டம் -  64 ஆவது ஸர்க்கம் வரை
  • 3. அயோத்யா கான்டம் 65 முதல் 119 ஆவது ஸர்க்கம் வரை
  • 4. ஆரண்ய கான்டம் ஒன்று முதல் 68 ஆவது ஸர்க்கம் வரை
  • 5. ஆரண்ய காண்டம் 69 முதல் கிஷ்கிந்தா காண்டம் 49 ஆவது ஸர்க்கம் வரை
  • 6. கிஷ்கிந்தா காண்டம் 50 முதல் சுந்தர காண்டம் 57 ஆவது ஸர்க்கம் வரை
  • 7. சுந்தர காண்டம் 58 முதல் யுத்த காண்டம் 50 ஆவது ஸர்க்கம் வரை
  • 8 . யுத்த காண்டம் 51 முதல் 111 ஆவது ஸர்க்கம் வரை
  • 9. யுத்த காண்டம் 112 முதல் 131 ஆவது ஸர்க்கம் வரை

இம்மாதிரி பாராயணம் செய்ய வேண்டும்.

ஶ்ரீ ராம பக்தி கல்பலதா என்னும் நூலில் சிற்சில ஸர்க்க பாரயணத்தின் முடிவில் விசேஷ பொருட்கள் நிவேதனம் செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. 

ஸர்க்கம் எண் முடிவில் செய்ய வேண்டிய நிவேதனம். காண்டம். ஸர்க்கம் எண்.
பால காண்டம்

  • 1. மூன்று தேங்காய்
  • 16. வெல்ல பாயாசம்
  • 18. பால், கல்கண்டு, சுக்கு பொடி போட்டு
  • 30. குங்குப்பூ கலந்த திரட்டுப்பால்
  • 73. ஏதோ ஒன்று சித்ரான்னத்தில்

அயோத்யா காண்டம்

  • 40. வெண்ணை, சக்கரை, கொழுக்கட்டை
  • 50. பல வித பழங்கள்
  • 56. எள்ளு சாதம்
  • 99. நெய் கொழுக்கட்டை
  • 112. பலா. மாதுளை, வாழைப்பழம்
  • 117. நெய் பாயஸம்

ஆரண்ய காண்டம்

  • 30. தேங்காய் சாதத்தில் சக்கரை சேர்த்து
  • 68. திராக்ஷை, தேன்
  • 74. வேக வைத்த கிழங்கு, மாதுளம் பழம்

கிஷ்கிந்தா காண்டம்

  • 3. நெய் வடை
  • 16. பானகம்
  • 22. பயறு சுண்டல்
  • 26. மாம்பழம், எண்ணையில் வறுத்த கடலை

ஸுந்தர காண்டம்

  • 1. தயிரன்னம், ஊறுகாய், வெண்ணை
  • 15. புளி அன்னம், ஊறுகாய், தாம்பூலம்
  • 36, விசேஷ பக்ஷணம், சக்கரை பொங்கல்
  • 66. பயத்தம் பருப்பு பால் பாயஸம்

யுத்த காண்டம்

  • 16. தேங்காய் துருவல் சக்கரை கலந்து
  • 19. நெய்யில் செய்த முறுக்கு
  • 50 . பசும்பால்
  • 67. இளநீர், நாகப்பழம்
  • 74. பால் போளி
  • 91. எள்ளு சாதம், தயிர்
  • 94. சித்ரான்னங்கள்
  • 107. கரும்பு, தேங்காய், நெய் பாயசம்
  • 111. நெய்யில் செய்த அதிரசம்
  • 121. பால் பாயசம் வெண்ணையுடன்

ஶ்ரீ ராமாவதாரம் கர்போத்சவம், ஜனனோத்சவம் என இரு வகையாக கொண்டாடபடுகிறது.

கர்போத்சவம்: அமவாசைக்கு அடுத்த ப்ரதமை முதல் ராம நாமி முடிய கொன்டாடுவது. மஹா விஷ்ணு ஶ்ரீ ராமராக தோன்றி எல்லா அரக்கர்களையும் அழிக்க போகிறார் என அறிந்த ரிஷிகள் கெளசல்யையின் கர்ப வாசத்தை கொண்டாடினார்கள்.

ஜனனோத்ஸவம்: ஶ்ரீ ராமர் பிறந்த நவமி முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடுவது.. ஶ்ரீ ராமாயண பாராயணம், ப்ரவசனத்துடன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்