About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 16 August 2023

லீலை கண்ணன் கதைகள் - 20

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

யசோதைக்கு விஸ்வரூப தரிசனம்|

ஒரு நாள் கிருஷ்ணன் தன் நண்பர்களோடு வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டு இருந்தான். திடீரென்று பலராமன் யசோதையிடம் சென்று, "அம்மா, அம்மா! கிருஷ்ணன் மண்ணைத் தின்று விட்டான்" என்று சொன்னான்.
 

யசோதை இதை நம்பவில்லை. ஆனால் மற்றச் சிறுவர்களும், "ஆமாம், அம்மா! நாங்கள் தடுத்தும் கேளாமல் அவன் எங்கள் எல்லோருக்கும் எதிரில் மண்ணை தின்றான்" என்று சொன்னார்கள். இதை கேட்டு யசோதை கோபம் கொண்டாள். வீட்டில் எத்தனையோ தின் பண்டங்கள் இருக்க, அவன் எதற்காக மண்ணை தின்ன வேண்டும்? அவள் ஓடிப் போய், இடக்கையினால் கிருஷ்ணனை பிடித்துக் கொண்டு வல கையினால் அவனை அடிக்கப் போனாள். "குறும்புக்காரப் பயலே! எதற்காக மண்ணை தின்றாய்! உன் நண்பர்களும் பலராமனும் நீ மண் தின்னதாகச் சொல்லுகிறார்களே!" என்று கேட்டாள்.


"இல்லை, அம்மா நான் மண் தின்னவில்லை. நீ வேண்டுமானால் என் வாயைப் பார்" அவர்கள், எல்லோரும் பொய் சொல்லுகிறார்கள். என்றான் கிருஷ்ணன். ஆனால் அன்னை யசோதை அவன் வாயில் என்ன பார்த்தாள்! அவனுடைய சிறு வாயுக்குள் அவள் அண்டம் முழுவதையும் பார்த்தாள். பூமி, ஆகாயம், சூரியன், சந்திரன், நட்சத்திரம், எல்லாம் அங்கு இருந்தன! எல்லாத் தேவர்களும் தேவதைகளும் அங்கே காணப்பட்டார்கள். ஓர் அபூர்வமான ஒளி வாயில் இருந்தது. உள்ளே கோகுலத்தைக் கண்டாள். கோகுலத்தில் தான் கிருஷ்ணன் வாயைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். தன் மகனின் சிறு வாய்க்குள் இத்தனை பொருள்கள் இருப்பதை அவளால் நம்பவே முடியவில்லை! ஆனால் எல்லாம் அங்கு இருக்கின்றனவே! அவள் ஆச்சரியமும் பயமும் அடைந்தாள். "இது என்ன கனவா? அல்லது ஆண்டவனின் செய்கையா! அல்லது என்னுடைய கற்பனை தானா? அல்லது இந்தச் சிறுவனுக்குத் தான் ஏதோ அதிசிய சக்தி இருக்கிறதா!" என்று பலவாறு நினைத்துப் பார்த்தாள்.


அதற்குப் பிறகு, "இது கனவல்ல. நான் தான் என் கண்களாலேயே பார்த்துக் கொண்டு இருக்கிறேனே! கர்க்க மகரிஷி சொன்னது போல, என் மகனுக்கு ஏதோ தெய்வீக சக்தி இருக்க வேண்டும்" என்று தீர்மானித்தாள். கடைசியில் அவள் இறைவனைச் சரண் அடைந்தாள். தன் குழந்தையைக் காப்பாற்றும்படி இறைவனை வேண்டிக் கொண்டாள். தீர்வு காண முடியாத பிரச்சனைகள் நம்மைத் தாக்கும் போது, பகவானிடம் சரண் அடைந்து, அவரை வேண்டிக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு என்ன இருக்கிறது? அறிவிற் சிறந்த யசோதை இந்த வழியை தான் பின் பற்றினாள். பகவான் கிருஷ்ணர் மாயை என்னும் வலையை அவள் மீது வீசி விட்டு, தாம் மீண்டும் பழைய குழந்தையைப் போல அவள் முன் தோற்றமளித்தார். கனவு உடனே மறைந்து விடுவது போல நடந்த விஷயங்கள் எல்லாம் யசோதைக்கு மறைந்து விட்டன. தாய்ப்பாசம் மேலிடவே குழந்தையைத் தன் மடியில் கிடத்தி, அதைக் கொஞ்ச ஆரம்பித்தாள். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 003 - திருக்கரம்பனூர் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||003. திருக்கரம்பனூர்||
||உத்தமர் கோயில், கதம்ப க்ஷேத்ரம் – திருச்சி||
||மூன்றாவது திவ்ய க்ஷேத்ரம்|| 

||ஸ்ரீ உத்தமர் பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ பூர்வாதேவி தாயார் ஸமேத ஸ்ரீ புருஷோத்தமன் பெருமாள்||
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர் - புருஷோத்தமன்
  • தாயார் மூலவர் - பூர்வா தேவி
  • தாயார் உற்சவர் - பூர்ணவல்லி
  • திருமுக மண்டலம் திசை - கிழக்கு 
  • திருக்கோலம் - புஜங்க ஸயனம்
  • புஷ்கரிணி/தீர்த்தம் - கதம்ப
  • விமானம் - உத்யோக
  • ஸ்தல விருக்ஷம் - கதலீ மரம் (வாழை)
  • ப்ரத்யக்ஷம் - கதம்ப மஹரிஷி, உபரிஸரவஸு, ஸநக ஸநந்தன ஸநத் குமாரர்கள், திருமங்கையாழ்வார்                           
  • ஆகமம் - வைகாநஸம்
  • ஸம்ப்ரதாயம் - தென் கலை
  • மங்களாஸாஸநம் - 1 ஆழ்வார்
  • பாசுரங்கள் - 1

---------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

சிவன், பிச்சாடனாராக வந்து தன் தோஷம் நீங்கப் பெற்ற தலம் என்பதால் இவ்வூர் "பிச்சாண்டார் கோயில்' என்றும், மகாவிஷ்ணு கதம்ப மரமாக நின்ற ஊர் என்பதால் "கதம்பனூர்' என்றும் "கரம்பனூர்' என்றும் அழைக்கப்படுகிறது. கணவனும், மனைவியும் இல்லற வாழ்க்கையில் சேர்ந்து வாழ்வதே உத்தமம். இவ்வாறு ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ்பவர்களை உத்தமர் என்பர். இங்கு மும்மூர்த்திகளும் தம்பதி சமேதராக இருப்பதால் திருமங்கையாழ்வார் இத்தலத்தை "உத்தமர் கோயில்' என்று மங்களாஸாஸநம் செய்துள்ளார். தம்பதியர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் குடும்பம் சிறக்கும் என்பது நம்பிக்கை.

 படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மாவிற்கு பூலோகத்தில் தனக்கென தனியே கோயில் இல்லையே என மனக்குறை இருந்தது. எனவே, மகாவிஷ்ணு அவரை பூலோகத்தில் பிறக்கும் படி செய்தார். பிரம்மா இத்தலத்தில் பெருமாளை வணங்கி தவம் செய்து வந்தார். அவரது பக்தியை சோதிப்பதற்காக மகாவிஷ்ணு, கதம்ப மரத்தின் வடிவில் நின்று கொண்டார். இதையறிந்த பிரம்மா கதம்ப மரத்திற்கு பூஜைகள் செய்து, சுவாமியை வணங்கினார். அவரது பக்தியில் மகிழ்ந்த மகாவிஷ்ணு காட்சி தந்து, "நீ எப்போதும் இங்கேயே இருந்து என்னை வழிபட்டு வா. நீ பெற்ற சாபத்தால் உனக்கு கோயில்கள் இல்லாவிட்டாலும் இங்கு தனியே வழிபாடு இருக்கும்' என்றார். பிரம்மாவும் இங்கேயே தங்கினார். பிற்காலத்தில் இவருக்கும் ஸன்னதி கட்டப்பட்டது. பிரம்மாவுக்கு இடப்புறத்தில் ஞான சரஸ்வதி தனி ஸன்னதியில் தெற்கு நோக்கிய படி இருக்கிறாள். இவள் கைகளில் வீணை இல்லாமல் ஓலைச் சுவடி, ஜெப மாலையுடன் காட்சி தருவது சிறப்பு. பிரம்மாவிற்கு தயிர் சாதம், ஆத்தி இலை படைத்தும், சரஸ்வதிக்கு வெள்ளை வஸ்திரம், தாமரை மலர் மாலை சாத்தியும் வழிபட்டால் ஆயுள் கூடும், கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. குருப் பெயர்ச்சியின் போது பிரம்மாவிற்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. 

விஷ்ணு கிழக்கு பார்த்த படி பள்ளி கொண்ட கோலத்திலும், உற்சவர் பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்திலும் உத்யோக விமானத்தின் கீழ் அருள் பாலிக்கிறார். பூரணவல்லி தாயார் தனி ஸன்னதியில் அருளுகிறாள். இவள் என்றும் உணவிற்கு பஞ்சமில்லா நிலையைத் தரக் கூடியவள். அருகில் மகாலட்சுமிக்கும் தனி ஸன்னதி இருக்கிறது. இவ்விரண்டு தாயார்களது தரிசனம் விசேஷ பலன்களைத் தரக் கூடியது. பெருமாளுக்கு நேர் பின்புறத்தில் சிவன் மேற்கு பார்த்தபடி லிங்க வடிவில் இருக்கிறார். இவர் பிட்சாடனாராக கோஷ்டத்திலும், உற்சவராகவும் இருக்கிறார். சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் தனித்தனி ஸன்னதிகளில் அம்பாள்களுடன் காட்சி தருகின்றனர். ஒரே தலத்தில் மும்மூர்த்திகளையும் தரிசனம் செய்வது அபூர்வம். கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மூவருக்கும் மூன்று திசைகளில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு ஒன்றாக உலா வருகின்றனர். தைப்பூசத் திருவிழாவில் சிவனுக்கும், மாசி மகத்தில் பெருமாளுக்கும் கொள்ளிடத்தில் தீர்த்தவாரி விழா நடக்கிறது. சிவ குரு தெட்சிணாமூர்த்தி, விஷ்ணு குரு வரதராஜர், குரு பிரம்மா, சக்தி குரு சவுந்தர்ய பார்வதி, ஞான குரு சுப்பிரமணியர், தேவ குரு வியாழன், அசுர குரு சுக்ராச்சாரியார் ஆகிய ஏழு குரு சுவாமிகளும் குருவிற்குரிய இடங்களில் இருந்து அருளுகின்றனர். குருப் பெயர்ச்சியின் போது ஏழு குருக்களுக்கும் விசேஷ அபிஷேகங்கள் நடக்கிறது. எனவே இத்தலம் "சப்த குரு தலம்' எனப்படுகிறது.

சிவனைப் போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மாவைக் கண்ட பார்வதி தேவி அவரை தனது கணவன் என நினைத்து பணிவிடை செய்தாள். இதைக் கண்ட சிவன், குழப்பம் வராமல் இருக்க பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கிள்ளி எடுத்தார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததோடு, பிரம்மாவின் கபாளமும் (மண்டை ஓடு) அவரது கையுடன் ஒட்டிக் கொண்டது. சிவன் எவ்வளவோ முயன்றும் அவரால் கபாளத்தை பிரிக்க முடியவில்லை. அவருக்கு படைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும் கபாளமே எடுத்துக் கொண்டது. எவ்வளவு உணவு இட்டாலும் கபாளம் மட்டும் நிறையவேயில்லை. பசியில் வாடிய சிவன், அதனை பிச்சைப் பாத்திரமாக ஏந்திக் கொண்டு பிட்சாடனார் வேடத்தில் பூலோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார். அவர் இத்தலத்திற்கு வந்த போது பெருமாள், சிவனின் பாத்திரத்தில் பிச்சையிடும் படி மகாலட்சுமியிடம் கூறினார். அவளும் கபாளத்தில் பிச்சையிடவே அது பூரணமாக நிரம்பி சிவனின் பசி நீக்கியது. இதனால் தாயார் "பூரணவல்லி' என்ற பெயரும் பெற்றாள்.மகாவிஷ்ணுவும் பள்ளி கொண்ட கோலத்தில் சிவனுக்கு காட்சி தந்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 14 - பெரியாழ்வார் திருமொழி - 1.1.2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 14 - ஆயர்களின் கொண்டாட்டம்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - முதலாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்

ஓடுவார் விழுவார்* உகந்தாலிப்பார்*
நாடுவார் நம்பிரான்* எங்குற்றான் என்பார்*
பாடுவார்களும்* பல்பறை கொட்ட நின்று*
ஆடுவார்களும்* ஆயிற்று ஆய்ப்பாடியே|

  • ஆய்ப்பாடி - திருவாய்பாடியானது
  • ஓடுவார் - ஓடுவார்களும்
  • விழுவார் - சேற்றிலே வழுக்கி விழுபவர்களும்
  • உகந்து ஆலிப்பார் - மகிழ்ந்து கோஷிப்பார்களும்
  • நாடுவார் - பிள்ளையைத் தேடுவார்களும்
  • நம்பிரான் - நம்முடைய கண்ணன்
  • எங்குத்தான் - எங்கே தான்
  • என்பார் - இருக்கிறான் என்பாரும்
  • பாடுவார்களும் - பாடுபவர்களும்
  • பல்பறை - பல வித வாத்தியங்கள்
  • கொட்ட - முழங்க
  • நின்று - அதற்கு ஏற்ப
  • ஆடுவார்களும் - கூத்தாடுவாருமாக
  • ஆயிற்று - ஆயிற்று

கண்ணன் பிறந்ததும், ஆயர்பாடியில் இருந்த அனைவரும் தலை கால் புரியாமல், அவனைக் காண்பதற்காக விரைந்து, நந்தகோபருடைய மாளிகைக்கு ஓடி வந்தனர். அப்பொழுது அவர்கள், மாளிகை முற்றத்தில் இருந்த எண்ணெயும் சுண்ணமும் கலந்த சேற்றில் வழுக்கி விழுந்தனர்; அதையும் அவர்கள் பொருட்படுத்தாது விரைந்து எழுந்து, அவர்களின் தலைவன் எங்கு இருக்கின்றான் என்று மனம் தவிக்க "எங்கே எங்கள் கண்ணன்" என்று ஆரவாரம் செய்து, கண்ணன் பிறந்திருந்த இடத்தைத் தேடிச் சென்றனர்; குழந்தை கண்ணனைக் கண்ட ஆயர்கள் அனைவரும் சிலர் ஆனந்தத்துடன் பாடினார்கள், சிலரோ வாத்தியங்கள் முழங்க மேளம் கொட்ட அதற்கு ஏற்றாற்போல் நடனம் ஆடியும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.14

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.14

தத: ஸ்²வேதைர் ஹயைர் யுக்தே
மஹதி ஸ்யந்த³நே ஸ்தி²தௌ|
மாத⁴வ: பாண்ட³வஸ்² சைவ
தி³வ்யௌ ஸ²ங்கௌ² ப்ரத³த்⁴ மது:||

  • ததஸ்² - அதன் பிறகு 
  • ஸ்²வேதைர் - வெண்மையான 
  • ஹயைர் - குதிரைகள் 
  • யுக்தே - பூட்டிய 
  • மஹதி - மிகச்சிறந்த 
  • ஸ்யந்த³நே - ரதத்தில் 
  • ஸ்தி²தௌ - நிலைபெற்ற 
  • மாத⁴வஃ - கிருஷ்ணர் 
  • பாண்ட³வஸ்² - அர்ஜுனன் (பாண்டுவின் மகன்) 
  • ச - மேலும் 
  • ஏவ - நிச்சயமாய் 
  • தி³வ்யௌ - தெய்வீக 
  • ஸ²ங்கௌ² - சங்குகளை 
  • ப்ரத³த்⁴ மதுஹு – முழங்கினார்

மறுதரப்பில், வெள்ளைக் குதிரைகள் பூட்டிய மிகச் சிறந்த ரதத்தில் அமர்ந்திருந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் அர்ஜுனனும் தங்களது தெய்வீக சங்குகளை முழங்கினர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்