About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 7 August 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

இரண்டாவது வார்த்தை

002. அஹமொழித்து விட்டேனோ விதுரரைப் போலே|

அஹம் என்றால் வீடு என்று ஒரு பொருள், அகங்காரம் என்று ஒரு பொருள்.

விதுரர் திருதராஷ்ட்ரனின் சகோதரர். மற்றும் ஆலோசகராகவும் இருந்தார். மிகவும் விவேகம் உள்ளவர். கிருஷ்ணனிடம் மிகவும் பக்தி கொண்டிருந்தார். 


பதிமூன்று ஆண்டுகள் வனவாசம் முடிந்த பின், பாண்டவர்கள் தங்கள் ராஜ்யத்தை திரும்ப கேட்ட போது, துரியோதனன் அதை கொடுக்க மறுத்துவிட்டார். போரை தவிர்க்க வேண்டும் என்பதற்காக பாண்டவர்களின் தூதுவராக, கௌரவர்களிடம் பேச அவர்களின் தலைநகரான அஸ்தினாபுரத்திற்கு துவாரகையி
ல் இருந்து தன் தேரில் வந்தார் கிருஷ்ணர்.  

அஸ்தினாபுரத்திற்கு வந்த கிருஷ்ணனுக்கு துரியோதனன் மற்றும் அவனுடைய உறவினர்கள் இல்லத்தில் தங்க விருப்பம் இல்லை. சபை மறுநாள்தான் கூடும். அப்போதுதான் பேச்சை ஆரம்பிக்க முடியும். ஆகவே, அன்றிரவை யார் மாளிகையிலாவது கழிக்க வேண்டும். அதனால் எங்கு தங்குவது என்று பார்த்துக் கொண்டே சென்றார். அவருடனேயே பலரும் விதுரர் உட்பட நடந்து வந்து கொண்டே இருந்தனர். அப்போது கண்ணனின் கண்ணில் தென்பட்ட ஒரு மாளிகையைப் பார்த்து கண்ணன்," ஆஹா! இவ்வளவு பெரிதாக உள்ள மாளிகை யாருடையது?" என்கிறார்.

"கண்ணா, இது என் மாளிகை. நீ இங்கேயே தங்கலாம்" எங்கிறார் திருதிராஷ்டிரர்

கண்ணன் மறுத்து, அடுத்து ஒரு மாளிகையைப் பார்த்து' இது யார் மாளிகை?" என வினவ, பீஷ்மர், "கண்ணா, இது என் மாளிகை. நீ இங்கேயே தங்கலாம்" என்கிறார்

கண்ணன் அதையும் மறுத்து, மேலே செல்ல, அடுத்து ஒரு மாளிகையில் இருந்து சங்கீத ஒலி, நடன மாதுக்களின் நடன ஓசை கேட்க, "இது யார் மாளிகை?" என் கிறார்

"கண்ணா, இது என் மாளிகை. உல்லாசமானது. நீ இங்கேயே தங்கலாம்" என்கிறான் துரியோதனன்.

கண்ணன் அதையும் நாசுக்காக மறுத்து மேலே நடக்கத் தொடங்கினார். இப்படி ஒவ்வொரு வீட்டையும் காட்டி இது யாருடையது என்று கிருஷ்ணன் விசாரித்துக் கொண்டே வர, கூட இருந்தவர்கள் ஒவ்வொரு பெயராக சொல்லி கொண்டே வந்தனர். அப்பொழுது விதுரரின் குடில் வந்தது. "மனதிற்கு சாந்தியை ஏற்படுத்தும் இக்குடில் யாருடையது?" என்று கிருஷ்ணன் கேட்க, விதுரர் சட்டென்று "இது தேவரீர் திருமாளிகை, உங்கள் விருப்பம் போல தங்கலாம்" என்றார். 

கிருஷ்ணன் ஆச்சர்யப்பட்டு “இந்த ஊரில் எனக்கு ஒரு மாளிகை இருப்பது எனக்கு தெரியாதே! நாம் எதையும் நம் மாளிகையாக கொண்டதில்லையே அடியார்களின் நெஞ்சகத்தை தான் என் மாளிகையாக இதுவரை கொண்டிருக்கிறேன்” என்று சொன்னார். “அதை தான் நானும் சொன்னேன் கண்ணா. எப்படி பக்தர்களின் இருதயத்தை உனக்கு மாளிகையாக வைத்துக் கொண்டு இருக்கின்றாயோ, அதற்குள் ஒரு இடமாக தான் இதையும் நீ கொள்ள வேண்டும். என் அகம் தான் இந்த அகம். என் அகத்தினுள் நீ ஏற்கனவே இருக்கின்றாய். இது என்னுடையதும் இல்லை வேறோருவருடையதும் இல்லை உன்னுடையது” என்றார் விதுரர். தன்னுடைய அஹத்தை கண்ணனுடையது என்று சொன்னதால் அஹம் ஒழித்து விட்டார் என்று ஒரு பொருள் படும். தன்னுடையது என்ற அகங்காரம் ஒழிந்தால் தானே அப்படி பண்ண இயலும். அதனால் அகங்காரத்தையும் ஒழித்து விட்டார் என்றும் பொருள் படும். 

உலக வழக்கப்படி, குடியிருப்பவர் தான் வாடகைக் கொடுக்க வேண்டும். இதயம் என்ற வீட்டினுள் இறைவனை குடிவைத்தவன், குடியிருப்பவனுக்கு பூவோ, பழமோ கொடுத்தால் போதும். அவர்கள் மனதில் குடியேறி விடுவேன்' என்றவர் கிருஷ்ணர்

அதனால் தான் விதுரர் உன் அகம் என் அகம் என்றார் (அகம் என்றால் வீடு)

வடமொழியில் அகம் எனில் அகங்காரம். இறைவன் மனதில் குடியேறின் இந்த அகம் ஒழிந்துவிடும்.

கௌரவர்களின் அரண்மனையை விட மிகச் சிறிய இடமாக இருந்தாலும் விதுரரின் அன்பினை கண்டு அவர் விதுரர் இல்லத்திலேயே தங்க விரும்பினர். கண்ணன் தன்னுடைய இல்லத்திற்கு வந்ததை எண்ணி விதுரர் அளவு கடந்த சந்தோஷத்தில் ஆழ்ந்தார். உள்ளே சென்று ஒரு மணையை போட்டு அதை துடைத்து துடைத்து, “கல் குத்தி விடுமோ! ஊசி ஏதாவது இருந்து குத்தி விடுமோ!” என்று பார்த்து பார்த்து அத்தனை அன்போடு பார்த்து அமர செய்தார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “விதுரரை போல அப்படி ஏதாவது நான் அஹம் ஒழித்தேனா? இது உன் வீடுன்னு நான் சொல்லலையே! விதுரரை போல பார்த்து பார்த்து நான் எதுவும் பண்ணலையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - அறிமுகம் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

இந்தியாவில் உள்ள ஸ்தலங்களைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம். 

  • 1. ரிஷிகளால் ஏற்படுத்தப்பட்ட ஸ்தலங்கட்கு ஆர்ஷம் என்று பெயர். 
  • 2. புராணங்களில் விரித்துரைக்கப்பட்ட ஸ்தலங்கட்கு ‘பௌராணிகம்’ என்று பெயர். 
  • 3. தானே தோன்றியவைகள் ‘ஸ்வயம் வ்யக்த ஸ்தலம்’ என்றும் அல்லது சைத்தம் என்றும் மொழிவர்.
  • 4. பிரம்மாதி தேவர்களால் தவஞ்செய்து உண்டாக்கப்பட்டவைகளை ‘தைவம்’ என்பர். 
  • 5. மன்னர்களாலும், அடியார்களாலும் பிரதிட்டை செய்யப்பட்டவைகளுக்கு ‘மானவம்’ என்பர். 
  • 6. ஆச்சார்ய புருஷர்களால் அபிமானிக்கப்பட்டதை அபிமான 'ஸ்தலம்’ என்பர். 

இத்தகைய அமைப்பிலோ, அல்லது இதில் குறிப்பிடாதவாறு வேறு வகையில் கட்டப்பட்ட ஸ்தலத்திற்கு ஆழ்வார்களின் பாசுரஞ் சூட்டப்பட்டதாகில் அப்பெருமாள் மங்களாசாசனம் செய்யப்பட்டவராக ஆகிறார். அத்தலம் திவ்ய தேசமாகிறது. அங்கு எம்பெருமான் நித்ய வாசஞ் செய்கிறான். இந்த ஸ்தலங்கள் கிளிகொத்திய மாங்கனியாகத் திகழ்பவைகளாகும். 

எம்பெருமானின் அம்சங்களே ஆழ்வாராக அவதரித்தார்கள். அதாவது எம்பெருமானின் சார்ங்கம் என்னும் வில்லே ஒரு ஆழ்வாராக அவதாரம். பிராட்டியே ஸ்ரீ ஆண்டாளாக அவதாரம் செய்தார். இவ்விதம் எம்பெருமானின் அம்சங்களே ஆழ்வாராக வந்து மங்களாசாசனம் செய்ததால் அத்தலம் திவ்ய தேசமாயிற்று. திவ்யம் என்ற வடசொல்லுக்கு தெய்வத் தன்மை பொலிந்தது என்று பொருள். ஆழ்வார்களின் பாசுரங்கள் பெறப்பட்ட ஸ்தலங்களில் எம்பெருமான் நித்ய ஸான்னித்தியம் கொண்டுள்ளான். அதாவது அங்கேயே வாழ்கிறான் என்று பொருள். திவ்யமான மங்கள அர்ச்சா ரூபம், திவ்ய ப்ரபந்தமென்னும் மங்களாசாசனமாகிய பாமாலையால் கட்டுண்டு திவ்ய தேசமாக ஆகி நம்மையும் (பரம பதத்தில்) வைக்கும் படியான நித்ய சூரியாக ஆக்குகிறது. 

பரமபதத்திலிருந்து வரப்பெற்ற திவ்ய சூரிகளால் அவர்களது திவ்யம் பொருந்திய மொழிகளால் மங்களாசாசனம் செய்யப்பட்டவை திவ்ய ஸ்தலங்களாகும். அணுவிற்குள் அண்டமும், அண்டத்திற்குள் அணுவும் இருப்பதைப் போன்று திவ்ய சூரியே இங்கு வந்து திவ்ய தேசங்களைக் காட்டிச் செல்கிறான். அந்த திவ்யதேசங்களில் ஈடுபட்டே ஒருவன் திவ்ய சூரியாகி விடுகிறான். நாராயண மந்திரம் மூன்று பதங்களாயிருப்பதைப் போல இந்த ஸ்தலங்களை (திவ்ய தேசங்கள் என்று சொல்லப்படும் ஸ்தலங்களை) மூன்று திவ்யங்கள் சூழ்ந்துள்ளன. அதாவது கோவில் திவ்யமாகிறது. பெருமாள் ஒரு திவ்யம், மங்களாசாசனப் பாசுரம் திவ்யப் பிரபந்தமாகிறது. 

நாராயண மந்திரம் எனப்படும் திருமந்திரம் எட்டெழுத்துக்களால் (எட்டிழைகளால் ஆனது) இந்த திவ்ய தேசங்களும் சப்த புண்யங்கள் எனப்படும். ஏழு புண்யங்களுடன், ஆழ்வார்களின் மங்களாசாசனத்தையும் சேர்த்து எட்டெழுத்தான திருமந்திரத்தின் சக்தியைப் பெற்று அஷ்டாச்சர மந்திரத்தின் பலனைத் தரக்கூடிய ஸ்தலங்களாக அமைகிறது. 

ஏழு புண்ணியங்கள் என்பவை – ஷேத்ரம் வநம் நதி ஸிந்து புரம் புஷ்கரிணி ததா விமானம் ஸப்த புண்யஞ்ச யத்ர தேஸ இவ்வேழு புண்ணியங்களும் ஒருங்கே அமையப் பெற்று ஆழ்வார்களின் மங்களாசாசனமும் ஒரு தலத்திற்கு அமையுமாயின் அது அஷ்டாச்சர மந்திரம் நிலை பெற்ற இடமாகும். இத்தனையும் ஒருங்குகூடிய ஸ்தலத்தை திவ்ய தேசமெனச் சொல்வதில் தடையுமுண்டோ. இவ்விதம் இந்தியாவில் ஆழ்வார்கள் பன்னிருவரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள் 108. இம்மட்டுமன்றி, இந்த திவ்யதேசங்கள் அதில் அமைந்துள்ள விமானங்களினாலும் சிறப்பும், மேன்மையும் படைத்தனவாகும். மூலஸ்தானத்திற்கு மேலே (கர்ப்பக் கிரகத்திற்கு மேல்) சிற்ப சாஸ்திர விதிகட்குட்பட்டு அமைக்கப்பட்டுள்ள கோபுரமே விமானமாகும். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - அறிமுகம் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தங்கள் 25 வகைப்படும்

  • 1. திருப்பல்லாண்டு
  • 2. பெரியாழ்வார் திருமொழி
  • 3. திருப்பாவை
  • 4. நாச்சியார் திருமொழி
  • 5. பெருமாள் திருமொழி
  • 6. திருச்சந்த விருத்தம்
  • 7. திருமாலை
  • 8. திருப்பள்ளி எழுச்சி
  • 9. அமலனாதிபிரான்
  • 10. கண்ணிநுண் சிறுத்தாம்பு
  • 11. பெரிய திருமொழி
  • 12. திருக்குறுந்தாண்டகம்
  • 13. திருநெடுந்தாண்டகம்
  • 14. முதல் திருவந்தாதி
  • 15. இரண்டாம் திருவந்தாதி
  • 16. மூன்றாம் திருவந்தாதி
  • 17. நான்முகன் திருவந்தாதி
  • 18. திருவிருத்தம்
  • 19. திருவாசிரியம்
  • 20. பெரிய திருவந்தாதி
  • 21. திருஎழுகூற்றிருக்கை
  • 22. சிறிய திருமடல்
  • 23. பெரிய திருமடல்
  • 24. திருவாய்மொழி
  • 25. இராமாநுச நூற்றந்தாதி

முதலாம் ஆயிரம் - 947 பாசுரங்கள்

  • 1. திருப்பல்லாண்டு - 1 - 12 (12 பாசுரங்கள்) - பெரியாழ்வார்
  • 2. பெரியாழ்வார் திருமொழி - 13 - 473 (461 பாசுரங்கள்) - பெரியாழ்வார் 
  • 3. திருப்பாவை - 474 - 503 (30 பாசுரங்கள்) - ஸ்ரீ ஆண்டாள்
  • 4. நாச்சியார் திருமொழி - 504 - 646 (143 பாசுரங்கள்) - ஸ்ரீ ஆண்டாள்
  • 5. பெருமாள் திருமொழி - 647 - 751 (105 பாசுரங்கள்) - குலசேகர ஆழ்வார்
  • 6. திருச்சந்த விருத்தம் - 752 - 871 (120 பாசுரங்கள்) - திருமழிசை ஆழ்வார்
  • 7. திருமாலை - 872 - 916 (45 பாசுரங்கள்) - தொண்டரடிப்பொடி ஆழ்வார்
  • 8. திருப்பள்ளி எழுச்சி - 917 - 926 (10 பாசுரங்கள்) - தொண்டரடிப்பொடி ஆழ்வார்
  • 9. அமலனாதிபிரான் - 927 - 936 (10 பாசுரங்கள்) - திருப்பாண் ஆழ்வார்
  • 10. கண்ணிநுண் சிறுத்தாம்பு - 937 - 947 (11 பாசுரங்கள்) - மதுரகவி ஆழ்வார்

இரண்டாம் ஆயிரம் – 1134 பாசுரங்கள்

  • 11. பெரிய திருமொழி - 948 - 2031 (1084 பாசுரங்கள்) - திருமங்கை ஆழ்வார்
  • 12. திருக்குறுந்தாண்டகம் - 2032 - 2051 (20 பாசுரங்கள்) - திருமங்கை ஆழ்வார் 
  • 13. திருநெடுந்தாண்டகம் - 2052 - 2081 (30 பாசுரங்கள்) - திருமங்கை ஆழ்வார் 

மூன்றாம் ஆயிரம் - 709 பாசுரங்கள்

  • 14. முதலாம் திருவந்தாதி - 2082 - 2181 (100 பாசுரங்கள்) - பொய்கை ஆழ்வார்
  • 15. இரண்டாம் திருவந்தாதி - 2182 - 2281 (100 பாசுரங்கள்) - பூதத்தாழ்வார்
  • 16. மூன்றாம் திருவந்தாதி - 2282 - 2381 (100 பாசுரங்கள்) - பேயாழ்வார்
  • 17. நான்முகன் திருவந்தாதி - 2382 - 2477 (96 பாசுரங்கள்) - திருமழிசை ஆழ்வார்
  • 18. திருவிருத்தம் - 2478 - 2577 (100 பாசுரங்கள்) - நம்மாழ்வார்
  • 19. திருவாசிரியம் - 2578 - 2584 (7 பாசுரங்கள்) - நம்மாழ்வார்
  • 20. பெரிய திருவந்தாதி - 2585 - 2671 (87 பாசுரங்கள்) - நம்மாழ்வார்
  • 21. திருவெழுகூற்றிருக்கை - 2672 (1 பாசுரம்) - திருமங்கை ஆழ்வார்
  • 22. சிறிய திருமடல் - 2673 - 2712 - (40 சூர்ணிகைகள்) - திருமங்கை ஆழ்வார்
  • 23. பெரிய திருமடல் - 2713 - 2790 - (78 சூர்ணிகைகள்) - திருமங்கை ஆழ்வார்

நான்காம் ஆயிரம் - 1210 பாசுரங்கள்

  • 24. திருவாய்மொழி - 2791 - 3892 (1102 பாசுரங்கள்) - நம்மாழ்வார்
  • 25. இராமாநுச நூற்றந்தாதி - 3893 - 4000 (108 பாசுரங்கள்) - திருவரங்கத்து அமுதனார்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - அறிமுகம் - 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தையின் அத்யாயம் சிறிய விளக்கம் 1

முதல் அத்யாயம் - அர்ஜுன விஷாத யோகம்
பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்ம துடிப்பே விஷாத யோகம். போர்க்களத்துக் காட்சிகளையும், அர்ஜுனன் கவலையால் கடமை மறந்து போரிட மறுத்து கூறும் காரணங்களை விவரிப்பது.

இரண்டாவது அத்யாயம் - ஸாங்க்ய யோகம்
பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது. நிச்சயமான மரணம், நிலையான ஆத்மா, அர்ஜுனனின் கவலைக்கான காரணம் பற்றி விளக்குவது.

மூன்றாவது அத்யாயம் - கர்ம யோகம்
உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம். நாம் செய்கின்ற செயலின் காரணங்களையும், செயலின் முக்கியத்துவம் பற்றி விளக்குவது.

நான்காவது அத்யாயம் - ஞான கர்ம சன்யாச யோகம்
பாவம், புண்ணியங்கள் பற்றிக் கூட கவலைப்படாமல் எதன் மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது. மக்கள் எப்படியெல்லாம் செயல் புரிகிறார்கள் எப்படி எல்லாம் செயல் புரிய வேண்டும் என்று விவரிப்பது.

ஐந்தாவது அத்யாயம் - கர்ம சன்யாச யோகம்
நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது. செயலின் பலனை துறப்பது எப்படி? பலனை துறந்தவன் எப்படி இருப்பான் என்று விளக்குவது.

ஆறாவது அத்யாயம் - ஆத்ம ஸம்யம யோகம்
கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய் விடக்கூடாது. தியானம் எப்படி செய்ய வேண்டும்? ஏன் செய்ய வேண்டும்? அதனால் கிடைக்கும் பலன்களை பற்றி விளக்குவது.

ஏழாவது அத்யாயம் - ஞான விஞ்ஞான யோகம்
இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம் தான். எல்லாமே கடவுள் தான் என உணர்வது. இயற்கையை இயக்கும் இறைவனை அறிந்தவர், மாயையினால் அறியாதவர், வழிபடுவோர் பற்றி விளக்குவது.

எட்டாவது அத்யாயம் - அக்ஷர ப்ரஹ்ம யோகம்
எந்நேரமும் இறைவனைப் பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது. மரண காலம் பற்றியும், மறு பிறவியைத் தவிர்க்க மரண காலத்தில் மனிதன் செய்ய வேண்டியவை பற்றியும் விவரிப்பது.

ஒண்பதாவது அத்யாயம் - ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்
கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத் தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பது தான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உணர்வது. எல்லாமாக உள்ள இறைவனின் செயலை அறிந்த்தவர்கள், அறியாதவர்கள் பற்றி விளக்குவது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்