About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 6 August 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - அறிமுகம் - 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தையில் உள்ளது 18 அத்யாயங்கள்.

முதலில் கீதை பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு அதன் காரணங்கள் ஆன கதை மிகவும் அவசியம். அதன் பிறகு அதன் ஸ்லோகங்கள், அதன் விளக்கம் பற்றி பார்ப்போம். ரொம்ப பேருக்கு, கீதை என்றால் அதன் ஸ்லோகங்கள் பற்றி தான் தெரியும். அதன் முன் கதை பற்றி பல பேருக்கு தெரியாதது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அவதாரம் நோக்கமே ஸ்ரீமத் பகவத் கீதை தான். ஸ்ரீமத் பகவத் கீதையில் உள்ளது 18 அத்யாயங்கள்

ஸ்ரீமத் பகவத் கீதை மகாபாரதத்தில் பீஷ்ம பர்வத்தில் 25ம் அத்யாயம் தொடக்கமாக 42ம் அத்யாயம் முடிய பதினெட்டு அத்யாயங்கள் இடம் பெற்றுள்ளது. ஸ்ரீமத் பகவத் கீதையின் பகுதிகள் 1 முதல் 6 வரை கர்ம யோகமும், 7 முதல் 12 வரை பக்தி யோகமும், 13 முதல் 18 வரை ஞான யோகமும் முக்கியப் பொருளாகப் பேசப் படுகின்றன.


கீதையில் மொத்தம் 700 ஸ்லோகங்கள் உள்ளன. சில பதிப்புகளில் 711 சுலோகங்களும் உண்டு. ஒவ்வொரு பகுதியும் யோகம் என்று அழைக்கப்படுகிறது. பிரபஞ்சவுணர்வுடன் தனிப்பட்ட உணர்வை இணைக்கும் அறி்வே யோகமாகும்.

இவற்றில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்வதாக 574 ஸ்லோகங்கள், அர்ஜுனன் பேசுவது 84, ஸஞ்ஜயன் பேசுவது 41, ஒரே ஒரு ஸ்லோகம். திருதராஷ்டிரன் சொல்வதாக உள்ளது. 

பாரதம் ஐந்தாவது வேதம் (பாரத: பஞ்சமோ வேத:), என்பது வழக்கு. வேதத்தில் கர்ம காண்டம், ஞான காண்டம் என்று இரு பிரிவாகப் பிரிக்கப் படுகிறது. இதில் ஞான காண்டம், ஆத்மாவைக் குறித்த ஆராய்ச்சிகள் இடம் பெரும். ஞான காண்டத்துக்கு உபநிஷத் என்றும் பெயர் உண்டு. அதே போல பாரதத்தில் ஞான காண்டமாக கீதை விளங்குகிறது. கீதையை ஓதினால் உபநிஷதங்கள் அனைத்தையும் கற்ற பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கி.மு 3067 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு உன்னதமான நிகழ்ச்சியை தெரிந்துக் கொள்வதன் மூலம் தர்மத்தின் வழி நடப்பது எவ்வாறு என்பதையும் அதன் உன்னதம் எத்தகையது என்பதையும் அதனால் நாம் எத்தகைய நல்ல உன்னதமான கதியை அடைவோம் என்பது பற்றியும் அறியலாம்.  


ஸ்ரீமத் பகவத் கீதையை ஸ்ரீ கிருஷ்ணரின் மூலம் அர்ஜுனன் தெரிந்து கொண்டான். அதை எழுதி வைத்த வியாச முனிவர் மூலம் நாம் இன்றும் அதை படித்து தெரிந்து கொள்ளும் வாய்ப்பை பெற்று இருக்கிறோம் .

கீதை 18 அத்யாயங்களைக் கொண்டது. இதில் கடவுளை அடையும் 18 முறைகள் சொல்லப்பட்டுள்ளது. இதற்கு ஸ்ரீசங்கரர், ஸ்ரீ ராமனுஜர், ஸ்ரீ மத்வர் போன்ற சமயாச்சார்யார்கள் வியாக்யானம் எழுதியுள்ளனர். 

ஒவ்வொரு மனிதனும் அவசியம் படித்து, தெரிந்திருக்க வேண்டிய நூல் பகவான் கிருஷ்ணர் அருளிய கீதை இந்துக்களின் வேத நூல் ஆகும். 

ஸ்ரீமத் பகவத் கீதையை பகவத் கீதா என்று சொல்வதும் வழக்கம். பகவத் என்றால் இறைவன். கீதா என்றால் நல்ல உபதேசம். இதற்கு இன்னொரு பொருளும் உண்டு. கீதா என்ற சொல்லை வேகமாகச் சொல்லும் போது தாகீ என்று மாறும். தாகீ என்றால் தியாகம். வாழ்வில் வரும் அனைத்து சுகதுக்கங்களையும் இறைவனிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பதும் இதன் பொருள். துறவு கொள்ளுங்கள், எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள் என்பதும் கீதா விற்குரிய ஆழமான பொருளாகும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் – அறிமுகம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

"ஸ்ரீமத் பாகவதம்", பகவானது குணானுபவங்களை வெளியெடுத்துச் சொல்லும் நூலாம். அப்பரம்பொருள் அளவிட முடியாத ஐஸ்வர்யம், வீர்யம், கீர்த்தி, அழகு ஞானம், வைராக்கியம் ஆகிய ஆறு குணங்களின் நிலமாய் இருப்பதால் அவருக்குப் பகவான் என்று பெயர். அவரது ஸ்வரூபத்தின் மென்மையும், அவர் செய்த அவதாரங்களின் சரித்திரத்தையும் சொல்லுவதால், இதற்குப் பாகவதம் என்ற பெயர் வந்தது. இது ஸ்ரீ வேத வியாசரால் அவர் செய்த புராணாதிகளின் இறுதியில் பதினெட்டாவது புராணமாகச் செய்யப்பட்டது. இது கங்கைக் கரையில் பிராயோபவேசம் {அன்ன ஆகாரம் இன்றிப் பட்டினிக் கிடத்தல்} செய்து கொண்டு ஏழாம் நாள் தனக்கு வரப்போகிற மரணத்தை எதிர்பார்த்திருந்த அர்ச்சுனனது பேரனாகிய பரீட்சித்துக்கு வியாசருடைய பிள்ளையும், முற்றுந்துறந்த முழு ஞானியுமான சுகப்ரஹ்மத்தால் சொல்லப்பட்டது. இந்த புராணத்தில் 12 ஸ்கந்தங்களும், 18,000 ஸ்லோகங்களும் உள்ளன. 


ஸ்ரீமத் என்றால் மிக அழகானது, அல்லது மிகச் சிறந்தது, அல்லது புகழ் வாய்ந்தது என்று பொருள். பாகவதம் என்றால் பகவானிடம் இருந்து வருவது அல்லது பகவானுடன் தொடர்புடையது என்று பொருள். எனவே, ஸ்ரீமத் பாகவதம் என்பது “பகவானைப் பற்றிய அழகான புத்தகம்” என்று பொருள்படும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவரது பல்வேறு அவதாரங்கள், மற்றும் அவரது பக்தர்களைப் பற்றிய வரலாற்று நிகழ்ச்சிகள் இதில் அடங்கியுள்ளன. ஸ்ரீமத் பாகவதமானது வேத மெய்யறிவை நல்கும் கற்பக மரம்.

ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரமே ஸ்ரீமத் பாகவதம்
ஒரு கல்லிலோ பளிங்கிலோ பகவான் அவதரிக்கும் போது, அவரை விக்ரஹம் என்கிறோம். அவர் மீனாகத் தோன்றினால் மத்சயர் என்றும், ஆமையாகத் தோன்றினால் கூர்மர் என்றும், பாதி மனிதனாகவும் பாதி சிங்கமாகவும் தோன்றினால் நரசிம்மர் என்றும் அழைக்கின்றோம். அது போலவே, புத்தகத்தின் வடிவில் கிருஷ்ணர் தோன்றினால், அவர் ஸ்ரீமத் பாகவதம் என்று அறியப்படுகிறார்.


ஸ்ரீமத் பாகவதம் தோன்றிய விதம்
நான்கு வேதங்கள், வேதாந்த சூத்திரம், புராணங்கள், மகாபாரதம் போன்றவற்றை தொகுத்து வழங்கிய மாமுனிவரான ஸ்ரீல வியாச தேவரின் மனம், அவ்வாறு தொகுத்த பின்னும் திருப்தி அடையவில்லை. அந்நிலைக்கான காரணத்தை அவர் தனது ஆன்மீக குருவான ஸ்ரீல நாரதரிடம் கேட்டார். அதற்கு நாரதர், “உண்மையில், முழுமுதற் கடவுளின் களங்கமற்ற புகழை நீ வர்ணிக்கவில்லை. பகவானின் தெய்வீகப் புலன்களைத் திருப்தி செய்யாத தத்துவங்கள் பயனற்றவை. அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை விவரமாக விளக்கியுள்ள போதிலும், முழுமுதற் கடவுளான வாசுதேவரின் (கிருஷ்ணரின்) புகழை நீ விளக்கவில்லை. அந்த முழுமுதற் கடவுளின் சேவையில் நமது எல்லா செயல்களையும் அர்ப்பணிப்பதால் மட்டுமே நமது அனைத்து துயரங்களையும் போக்க முடியும். ஆகையால் தயவுசெய்து நீ பகவானின் லீலைகளைப் பற்றி நேரடியாக வர்ணிப்பாயாக. அதுவே கற்றறிந்தவர்களின் ஏக்கத்தை திருப்தி செய்ய வல்லது” என்று வியாசருக்கு உபதேசித்தார். இவ்வாறாக, ஞானத்தின் முதிர்ந்த நிலையில், தனது குருவான நாரதரின் கட்டளைப்படி, வியாச தேவர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் லீலைகளை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவில் நமக்கு அருளினார். நாரத முனிவர் ருக்மணி பிராட்டியாருக்கு வியாசர் அருளிய பாகவதத்தை சொன்னார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - அறிமுகம்l

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

மகாபாரதத்தில் விஷ்ணு ஸஹஸ்ர நாமம் உள்ளது. விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களைக் குறிக்கும். இது மகாபாரதத்தின் அனுஷாசானிகா பர்வத்தில் (அரசர்களுக்கான கட்டளைகள் அல்லது விதிகள் தொடர்பான அத்தியாயம்) காணப்படுகிறது.


பிதாமகன் பீஷ்மர் அர்ஜுநனால் தோற்கடிக்கப்பட்டு படுகாயமடைந்தார். ஆனால் அவர் பெற்ற வரத்தின்படி அவர் இறக்கும் நேரத்தைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதால், அவர் உத்தராயணத்தில் மரணத்தைத் தேர்ந்தெடுத்து சுப காலத்திற்காக காத்திருந்தார். இதற்கிடையில், பஞ்ச பாண்டவர்கள் மற்றும் அபிமன்யுவின் பிறக்காத குழந்தை தவிர அவரது குடும்பத்தில் உள்ள அனைத்து ஆண் உறுப்பினர்களும் மரணத்திற்கு வழிவகுத்தது போர் முடிந்தது. பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரன் ஹஸ்தினாபுரத்தின் அரசரானார், மேலும் பீஷ்மரைத் தவிர வேறு யாருடைய ஆலோசனையைப் பெறுவார். அனுஷாசானிகா பர்வா என்பது யுதிஷ்டிரனுக்கும் பீஷ்மா பிதாமஹாவுக்கும் இடையேயான கேள்விகள் மற்றும் பதில்களின் வடிவத்தில் உள்ளது. சாத்தியமான சிறந்த ஸ்தோத்திரம் எது என்ற கேள்விக்கு, அது விஷ்ணு என்று பீஷ்மர் பதிலளிக்கிறார். ஸஹஸ்ர நாமம் செய்து யுதிஷ்டிரனுக்கு உபதேசிக்கிறார்.

இது ஸஹஸ்ர நாமம் என்று அழைக்கப்பட்டாலும் உண்மையில் அது 901 வித்தியாசமான ஒலிப் பெயர்களை மட்டுமே கொண்டுள்ளது. எண்ணூற்று பதினைந்து பெயர்கள் ஒரு முறையும், எழுபத்தைந்து பெயர்கள் இரண்டு முறையும், ஒன்பது பெயர்கள் மூன்று முறையும், இந்த பெயர்களில் இரண்டு நான்கு முறையும் மீண்டும் மீண்டும் செய்யப்படுகின்றன. ஒரே வார்த்தைக்கு வெவ்வேறு அர்த்தங்களை வெவ்வேறு இடங்களில் கொடுக்க ஆச்சார்யர்கள் முயற்சித்து வெற்றி அடைந்து உள்ளனர்.

விஷ்ணு ஸஹஸ்ர நாமம் பூர்வபாகா அல்லது முன்னுரையுடன் தொடங்குகிறது. இந்த பகுதி இருபத்தி ஒரு வசனங்களைக் கொண்டுள்ளது, பெரும்பாலும் விஷ்ணுவின் ஆசீர்வாதங்களைத் தூண்டுவது மற்றும் அவரது மகத்துவத்தை விளக்கும் வடிவத்தில் உள்ளது. இந்த பகுதி யுதிஷ்டிரருக்கும் பீஷ்மருக்கும் இடையேயான உரையாடல் வடிவில் உள்ளது.

அனைத்து கேள்விகளுக்கும் பீஷ்மர் பதில் அளித்தார். அப்போது பகவான் ஸ்ரீ விஷ்ணு வின் ஆயிரம் பெயர்களையும் கூறினார்.

யுதிஷ்திரரின் கேள்விகள்: -

  • யார் இந்த உலகத்தின் முக்கிய கடவுள்?
  • யாருக்கு செய்கின்ற பிராத்தனை அனைவரின் புகலிடமாக இருக்கிறது?
  • எந்த கடவுளை வனங்குவதன் மூலம் ஒரு மனிதன் அமைதி மற்றும் நல்ல வாழ்க்கை கிடைகிறது?
  • எந்த கடவுளை புகழ்த்து படுவதால் ஒருவனுக்கு சந்தோசம் கிடைக்கும்?
  • உங்களை பொருத்தவரை எது தர்மம், எது நல்ல செயல்?
  • எல்லா ஜீவ ராசிகளும் பிறப்பு இறப்பு சுழலில் இருந்து விடுபட யாரை வணங்க வேண்டும்?

பீஷ்மரின் பதில்:

  • இந்த உலகத்தின் கடவுள் ஸ்ரீ விஷ்ணு.எல்லா கடவுளின் கடவுள். முடிவில்லாதவர். புனிதமானவர். இவருடைய ஆயிரம் நாமங்களை பூஜிப்பதன் மூலன் ஒரு மனிதன் முக்தி அடையலாம்.
  • யார் ஒருவன் அந்த கடவுளை நிலையான புத்தியுடன் பூஜிக்கிறானோ தியானிக்கிரானோ அவன் அழிவை அடைவதில்லை.
  • அப்படிப்பட்ட கடவுளை எவன் ஒருவன் பணிந்து நமஸ்காரம் செய்கிறானோ அவன் அவருடைய அருளை பெறுவான்.
  • ஸ்ரீ விஷ்ணு ஆரம்பம் முடிவு இல்லாதவர். இந்த உலகத்தின் உச்ச கடவுள்.
  • இந்த உலகத்தை முற்றிலும் அறிந்தவர் அவரே. துக்கங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர். அவருடைய நாமத்தை எவன் ஒருவன் தொடர்ந்து பூஜிப்பானோ அவன் எல்லா கட்டுக்களில் இருந்தும் விடுபடுவான்.
  • ஸ்ரீ விஷ்ணு மிகவும் பிரகாசமானவர். அனைத்தையும் கட்டுபடுத்துபவர். அவர் உச்சமான உண்மை. அடையப்பட வேண்டியவர்.
  • அவர் சுத்ததிற்கு எல்லாம் சுத்தமானவர். புனிதத்திற்கு எல்லாம் புனிதம். கடவுளுக்கு எல்லாம் கடவுள். அனைத்து ஜீவ ராசிகளின் தந்தை. அவர் தான் ஸ்ரீ விஷ்ணு பகவான்.

ஸ்ரீ விஷ்ணுவின் அருள் பெறுவதற்கு பீஷ்மர் கொடுத்த அறிவுரை:
ஸ்ரீ விஷ்ணு தான் முதன்மை கடவுள். அவருடைய ஆயிரம் நாமங்களை பூஜிப்பதன் மூலம் பயத்திலிருந்தும் பாவத்திலிருந்தும் விடுதலை பெறலாம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - அறிமுகம்l

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

நவ திருப்பதிகளில் ஒன்றான, மதுரகவி ஆழ்வாரால் பெருமை பெற்ற திவ்ய தேசமான திருக்கோளூரில் ஒரு பெண் வாழ்ந்து வந்தாள். அந்த பெண் மதுரகவி ஆழ்வாருடைய நிஷ்டை படைத்தவள். வைத்த மாநிதி பெருமானுடைய அனுக்ரஹம் பெற்றவள். நம்மாழ்வாருடைய பாசுரத்திலே திளைத்தவள். அப்படிப்பட்ட அப்பெண் எந்த காரணத்தாலோ அவ்வூரை விட்டு வெளியேறி போய்க் கொண்டிருந்த அதே சமயம், ஸ்வாமி ராமானுஜர் பல திவ்ய தேசங்களுக்கு யாத்திரையாக வருகிறார். அப்படி ஒவ்வொரு ஊராக போய்க் கொண்டிருந்த அவர் திருக்கோளூருக்குள் சென்று கொண்டிருந்தார். ராமாநுஜருக்கு நம்மாழ்வாரிடத்தில் தனி ப்ரீதியும் பக்தியும் இருந்தது. காரணம், தாம் இருந்த இடத்தில் இருந்தபடியே பல திவ்ய தேச பெருமாள்களின் தரிசனம் கிடைக்கப் பெற்று,  மங்களாஸாஸநம் செய்த பெருமைக்கு உரியவர் நம்மாழ்வார் மட்டுமே! அவர் அவதரித்த ஆழ்வார் திருநகரி திருத்தலத்தை தரிசித்து வணங்கிய பின்னர், ராமாநுஜர், 'எல்லோரும் விரும்பிப் புகும் ஊர்’ என்று நம்மாழ்வாரால் போற்றப் பெற்ற திருக்கோளூருக்குச் செல்கிறார். அந்த திவ்ய தேசத்தின் புறநகரில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். ஸ்வாமியை பார்த்த அப்பெண் மிகுந்த பக்தியோடு அவருக்கு தெண்டன் சமர்ப்பிகிறாள். அப்போது ஸ்வாமி அவளை பார்த்து "எங்கிருந்து வருகிறாய்" என்று வினவினார். அதற்கு அப்பெண் திருக்கோளூரை விட்டு வெளியேறுவதாக கூறினாள். அதை கேட்டு ஆச்சர்யம் அடைந்த ஸ்வாமி, ‘‘அம்மா, உனக்குக் குறை தான் என்ன?’’ ஏழு பேராக ஒரே துணியை அணிந்து கொண்டாலும், எது கிடைத்தாலும் சாப்பிட்டு கொண்டு, திருக்கோளூரிலேயே இருக்க வேண்டும் என்று அனைவர்க்கும் புகு ஊராக இருக்கும் இவ்வூர் உமக்கு மட்டும் ஏன் போகும் ஊரக இருக்கிறது? நாங்கள் எல்லோரும் இந்த ஊர் கிடைக்குமா என்றெண்ணி உள்ளே புகுர்கிறோம் நீர் ஏன் வெளியே வந்தீர்? என்று வினவ, அதற்கு அந்த பெண், “எனக்கு என்ன யோகியதை இருக்கிறது இந்த ஊரில் இருக்க? எனக்கு எந்த யோகியதையும் இல்லை. காலந்தோறும் தோன்றிய திருமாலடியார்கள் போல், தான் எதனையும் சாதித்து விடவில்லை என்றும், எந்த பெரியவரை போலவும் நான் நடந்துக் கொள்ளவில்லையே. அவர்களை போல நான் வாழ்ந்து காட்ட வில்லையே! அதனால் தான் இந்த ஊரில் இருப்பதே தவறு என்று எண்ணி ஊரை விட்டு புறப்படுகிறேன்” என்று கூறி, அவர்களுடைய செயற்கரிய செயல்களைப் பட்டியலிட்டுக் கூறினாள். 


இராமாயணம், மகாபாரதம், பாகவதம், ஆழ்வார்களின் வரலாறுகள் ஆகியவற்றில் குறிப்பிடப்படும் சான்றோர்கள் செய்த எண்பத்தோரு அருஞ்செயல்களைக் கூறினாள். அத்தகைய சான்றோர்கள் செய்தது போன்ற செயல்கள் எதனையும் தான் செய்யவில்லையே என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தினாள். மிகச் சிறந்த திருத்தலமாகிய திருக்கோளூரில், தான் தொடர்ந்து வசிக்கத் தகுதியற்றவள் என்று குறிப்பிட்ட அப்பெண்மணி, அடியேன் அவர்களைப் போல் ஞானமும் அன்பும் பக்தியும் கொண்டிருந்தேன் என்றால் நானும் இவ்வூரில் தங்கலாம். ஆனால் அவர்களைப் போல் ஞானம் கொன்டவள் இல்லை. அழகிய மரமாகும் திறன் இல்லா விதை வயலில் இருந்தால் என்ன பாலைவனத்தில் இருந்தால் என்ன? இரண்டும் அதற்கு ஒன்று தானே. அடியேன் கூறிய நற்காரியங்கள் ஏதும் செய்திராமல், எவ்வாறு நான் இந்த ஊரில் வசிப்பதற்குத் தகுதியானவளாக இருக்க முடியும்? என்னுடைய இருப்பின் காரணமாக திருக்கோளூர் தன் புனிதத்தை இழந்து விடக்கூடாது. அதனால் தான் அவ்வூரை விட்டு வெளியேறுவதாகக் கூறினாள். வயலில் கிடக்கும் முயல் புழுக்கையைப் போல், தான் திருக்கோளூரில் பயனற்றவளாக இருப்பதாகக் கூறினாள்.

அத்தனையும் பொறுமையாக கேட்ட ஸ்வாமி ராமானுஜர், இந்த ஊரில் இருப்பதற்கு யோகியதை இல்லை என்று சொல்பவளே இந்த பேச்சு பேசுகிறாளே! சாதாரணப் பெண்மணிக்கே இவ்வளவு ஞானம் இங்கு உள்ளதே என வியந்தார். அப்படியானால் இந்த ஊரில் இருப்பவர்கள் எப்படி பட்டவர்களாக இருப்பார்கள் என்று நினைத்து ஆனந்தப்பட்டு ஆச்சர்யப்பட்டு போனார். அவள் சொன்ன அத்தனையையும் யாராலும் இருந்து விட முடியாது. யாரோ சில புருஷர்கள் ஸ்திரீகள் இருந்திருக்கிறார்கள். அவர்களை போல என்னால் இருக்க முடியவில்லையே என்று கூறினாள். இராமானுஜரும் திருக்கோளூர்ச் சான்றோர்களும் அப்பெண்மணியின் ஞானத்தையும், பணிவையும் கண்டு வியந்தனர். அதை கேட்ட ஸ்வாமி, "பெண்ணே! "ஸ்ரீ வைஷ்ணவத்தின் முழு சரித்திரத்தையும், அதன் கொள்கைகளையும் எண்பத்தி ஒன்று வரிகளில் அசாதாரணமாக விளக்கிய உன்னை விட இவ்வூரில் வாழ தகுதியானவர் எவர் இருக்க முடியும்?!" உனக்கு தான் இந்த ஊரில் இருக்க யோகியதை, நான் சொல்கிறேன் வா என்று சொல்லி அப்பெண்மணியை இராமானுஜர் தன்னுடன் அழைத்துச் சென்று, வைத்தமாநிதிப் பெருமாளைச் சேவிக்கச் செய்தார். ஊருக்குள் அழைத்து சென்று அவள் இல்லத்தில் தங்கி அவளை தளிகை பண்ண சொல்லி பெருமாளுக்கு கண்டருளப் பண்ணி அமுது பண்ணினார். ஸ்வாமி எந்த இடத்திலும் சாப்பிடுவது கிடையாது. கிடாம்பியாச்சான் ஒருவர் தொட்டு மட்டும் தான் சாப்பிடுவார். கிடாம்பியாச்சானின் மடப்பள்ளி மடத்தில் மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்று அவருடைய அசார்யர்களில் ஒருவரான திருகோட்டியூர் நம்பியின் ஆணை. நிச்சயம் ஸ்வாமி அதை மீறி நடக்க மாட்டார். இருந்தும் அந்த பெண் தொட்டு ஸ்வாமி சாப்பிடுகிறார் என்றால் அந்த பெண்ணிடத்தில் நிச்சயமாக ரொம்ப உசந்த லக்ஷணங்கள் நிறைந்த குணம் இருக்கிறது என்று தானே அர்த்தம். அவள் குறிப்பிட்ட ஒவ்வொன்றும் வைணவத்தைச் சாறு பிழிந்து கூறுவது போல இருந்தது. அவற்றை சுருங்கச் சொல்லி விளங்கவைத்தது, அப்பெண்ணின் ஞான அறிவைக் கூறுகிறது. அதனால் தான் அவள் சொன்ன அந்த காரணங்கள் "பெண்பிள்ளை ரஹஸ்யம்" என்று ஏட்டில் பதித்து வைத்து எல்லா அசார்யர்களும் ஆசையோடு ஆதரித்து வந்திருக்கிறார்கள். திருமாலடியார்களின் செயற்கரிய செய்லகளை இரண்டிரண்டு அடிகளில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அவற்றுள் இதிகாச புராண வரலாறுகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு வரலாற்றிலும் ஒவ்வொரு ரகசியம் (மறை பொருள்) அடங்கியுள்ளது.

அவள் சொல்லும் காரணங்களை தான் “திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள்” என்று நமக்கு தொகுத்து கொடுத்துள்ளர்கள். ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு வரி தான். ஆனால் அதில் உள்ள கதைகள், அதன் அர்த்தங்களை நாம் புரிந்து கொண்டோமேயானால் பல பெரியவர்கள் எப்படியெல்லாம் நடந்துக் கொண்டார்கள் என்பதையும், பல சம்ப்ரதாய விஷயங்களையும் நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த வார்த்தைகள் நம் மனதில் சட்டென்று பதிந்து அதை கடை பிடிக்க வேண்டும் என்ற வைராகியத்தையும் கொடுக்க கூடியதாக சிறப்புற்று விளங்குகிறது. இதன் மூலம் பல பெரியவர்கள் எப்படி நடந்துக் கொண்டார்கள் என்பதை விளக்கமாகவும் தெரிந்து கொள்கிறோம்.

அதை ஒவ்வொரு வார்த்தையாக விளக்கத்தோடு இப்போது நாம் பார்க்கலாம். முதலில் என்னென்ன வார்த்தைகள் சொன்னாள் என்பதை பார்க்கலாம். அடுத்தடுத்து ஒவ்வொரு வார்த்தைக்குரிய கதையையும் அதிலுள்ள கருத்தினையும் பார்க்கலாம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்