About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 15 July 2023

3. பேயாழ்வார்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

  • அம்சம் - நாந்தகம் (வாள்)
  • அவதார ஸ்தலம் - மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் குளத்தில் செவ்வல்லி மலரில் - அயோநிஜர் (சுயம்பு)
  • காலம் - கி.பி. 7ம் நூற்றாண்டு
  • வருடம் - சித்தார்த்தி
  • மாதம் - ஐப்பசி
  • திரு நக்ஷத்திரம் - சதயம்
  • திதி - வளர்பிறை தசமி
  • கிழமை - வியாழன்
  • ஆசார்யன் - ஸேனை முதலியார்
  • அருளிச் செய்தவை - 1. மூன்றாம் திருவந்தாதி - மூன்றாம் ஆயிரம் - 2282-2381 
  • பாசுரங்கள் - 100

----------
மங்களாஸாஸநம் செய்த திவ்ய தேச 
ஸ்தலங்கள் - 15; பாசுரங்கள் - 44

  • திருவரங்கம் - 2 
  • திருக்குடந்தை - 2 
  • திருவிண்ணகரம் - 2 
  • திருக்கச்சி - 1 
  • திருஅஷ்டப்புஜகரம் - 1  
  • திருவேளுக்கை - 3 
  • திருப்பாடகம் - 1 
  • திருவெஃகா - 4 
  • திருவல்லிக்கேணி - 1  
  • திருக்கடிகை - 1 
  • திருமாலிருஞ்சோலை - 1 
  • திருக்கோஷ்டியூர் - 1 
  • திருவேங்கடம் - 19  
  • திருப்பாற்கடல் - 4  
  • திரு பரமப்பதம் - 1 

----------
பிற பெயர்கள்
கைரவ முனி, மஹாதாஹ்வாயா, ஓடித் திரியும் யோகிகள்
----------
சிறுவயது முதல் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். அவர் மனம் எப்போதும் பரமனின் திருவடியையே நாடி நின்றது. திருமாலின் திருப்புகழை பாமாலையாக்கி நாள்தோறும் தொடுப்பார் இவர். அப்பொழுது இவர் கண்களில் ஆனந்த வெள்ளம் கரை புரண்டோடும். திருமாலின் திருப்பாதம் பணியுங்கள். உங்கள் வினைகள் ஓடிப் போகும். அத்துடன் மீண்டும் உங்களை தொடாது. முதலாழ்வார்கள் எனப்பட்ட பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வாரில் இவர் தான் அதிகமான ஸ்தலங்களைப் பாடி உள்ளார். திருக்கோவிலூரில் உள்ள ஒரு வைணவரின் வீட்டில் விளக்கு வெளிச்சத்தில் நாராயணன் நிற்பது முதலில் பேயாழ்வாருக்கு தான் தெரிந்தது. இப்படி பரமனைக் கண்ட பரவசத்தில் திருக்கண்டேன். பொன்மேனி கண்டேன் என்று துவங்கி நூறு பாடல்களை பாடினார். மேலும் திருவேங்கடம் சென்ற இவர் பெருமானை சிவனும், விஷ்ணுவும் கலந்த உருவாக கண்டார். பெருமாள் மேல் ஆராக்காதல் கொண்டு வேறு எதையும் நினைக்காமல் வாழ்ந்தார். பக்தி பரவசத்தில் அதுவே ஒரு வெறிபோல் தோன்றும்படி அவர் அழுவார். தொழுவார். ஆடிக் காண்பார். இறை பக்தியில் தன்னை முழுதும் மறந்து போனதால் இவர் பேயர் போலும் பித்தர் போலும் திரிந்தார். இதனாலேயே இவர் பேயாழ்வார் என் அழைக்கப் பட்டார்.  

உபயவிபூதி நாயகன் ஸ்ரீயுடன் கூடினவன் என்று பக்தியால் பகவானை அநுபவித்தபடி பேசுகிறார். அவன் திருவடிகளை சேவித்த அளவில் எல்லை இல்லாமல் வளரும் பிறவிகளைப் போக்கினேன். கொடியதான நரக வாஸத்திலிருந்து என்னை மீட்பதற்கு அவனே அருமருந்தாக திகழ்கிறான். என் மனதில் குடியேறிய அவனது திருப் பாதங்களே நான் பெற்ற பெரும் செல்வமும் அமிர்தமும் ஆகும். திருவனந்தாழ்வான் ஆகிற மெத்தென்ற பஞ்ச சயனத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்வாமி, அதை விட்டு என் மனமாகிற மலரணையில் பள்ளி கொண்டான் என்று அனுபவிக்கிறார். அவன் புகழை பேச வல்லவர்களும் பூரணமாக பேசி முடித்துவிட முடியுமா? முடியவே முடியாது. என் வாக்கு ஸதா ஸர்வ காலமும் அவனையே மங்களாசாசனம் செய்ய வேண்டும். தியானம் செய்வோரின் மனதில் அவன் அகலாது பொருந்தியுள்ளான் என்று உறுதி கொள் என்று தன் நெஞ்சை விளித்துக் கூறுகிறார். தவம் புரிவதற்காக மலைகளில் நிற்கவோ தடாகங்களில் மூழ்கவோ பஞ்சாக்னியில் வாடவோ தேவையில்லை. பயனை எதிர் பார்க்காமல் அன்புடன் அவன் திருவடிகளில் மலர்களை இட்டு அஞ்சலி செய்தாலே பாவங்கள் தான் இருக்க தகுந்த இடம் இதுவல்ல என்று ஓடிப் போய்விடும் என்கிறார். தேன் மிகுந்த தாமரை மலரில் நித்யவாஸம் புரியும் ஸ்ரீமகாலட்சுமியை அநுபவித்தபடியே பிரபந்தத்தைத் தலைக்கட்டுகிறார்.
----------
தனியன் 1
துலா ஸ²த அபி⁴ஷக் ஜாதம் 
மயூர புரி கைர வாத்| 
மஹந்தம் மஹதா யாதம் 
வந்தே³ ஸ்ரீநந்த³ காம்ஸ²கம்||

தனியன் 2
த்ருஷ்ட்வா ஹ்ருஷ்டம் ததா 
விஷ்ணும் ரமயா மயிலாதிபம்|
கூபே ரக்தோத் பலே ஜாதம் 
மஹதாஹ்வயம் ஆச்ரயே||

தனியனின் விளக்கம்
திருமயிலைத் தலைவர், கிணற்றில் செவ்வல்லிப் பூவில் அவதரித்த ஸ்ரீமந் நாராயணனைக் கண்ட திவ்ய சக்ஷுஸ் பெற்ற பேயாழ்வார் திருவடிகளை வணங்குகிறேன்.

வாழி திருநாமம்
திருக்கண்டேன் என நூறும் செப்பினான் வாழியே|
சிறந்த ஐப்பசியில் சதயம் சனித்த வள்ளல் வாழியே|
மருக் கமழும் மயிலை நகர் வாழ வந்தோன் வாழியே|
மலர்க்கரிய நெய்தல் தனில் வந்து உதித்தான் வாழியே|
நெருக்கிடவே இடை கழியில் நின்ற செல்வன் வாழியே|
நேமி சங்கன் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே|
பெருக்கமுடன் திருமழிசைப் பிரான் தொழுவோன் வாழியே|
பேயாழ்வார் தாளிணை இப்பெரு நிலத்தில் வாழியே||

திருநாள் பாட்டு
1. ஐப்பசியில் ஓணம்* அவிட்டம் சதயம் இவை*
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர்* 
எப்புவியும் பேசு புகழ்* பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்*
தேசுடனே தோன்று சிறப்பால்!

2. மற்றுள்ள ஆழ்வார்களுக்கு* முன்னே வந்துதித்து*
நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த* 
பெற்றிமையோர் என்று* 
முதலாழ்வார்கள் என்னும் பெயரிவர்க்கு*
நின்றது உலகத்தே நிகழ்ந்து*

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

2. பூதத்தாழ்வார்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

  • அம்சம் - கௌமோதகம் (கதை)
  • அவதார ஸ்தலம் - திருக்கடல்மல்லை (மகாபலிபுரம்) தலசயனப் பெருமாள் கோவிலில் மல்லிகை புதர்களுக்கிடையே நீலோத்பவ மலரின் நடுவில் - அயோநிஜர் (சுயம்பு)
  • காலம் - கி.பி. 7ம் நூற்றாண்டு 
  • வருடம் - சித்தார்த்தி
  • மாதம் - ஐப்பசி
  • திரு நக்ஷத்திரம் - அவிட்டம்
  • திதி - ஐப்பசி வளர்பிறை நவமி
  • கிழமை - புதன்
  • ஆசார்யன் - ஸேனை முதலியார்
  • அருளிச் செய்தவை - 1. இரண்டாம் திருவந்தாதி - மூன்றாம் ஆயிரம் - 2182-2281
  • பாசுரங்கள் - 100 

----------
மங்களாஸாஸநம் செய்த திவ்ய தேச 
ஸ்தலங்கள் - 13; பாசுரங்கள் - 30

  • திருவரங்கம் - 4  
  • திருக்குடந்தை - 2  
  • திருத்தஞ்சை மாமணிக் கோயில் - 1  
  • திருக்கோவிலூர் - 1  
  • திருக்கச்சி - 2  
  • திருப்பாடகம் - 1  
  • திருநீர்மலை - 1  
  • திருக்கடல் மல்லை - 1  
  • திருத்தங்கல் - 1  
  • திருமாலிருஞ்சோலை - 3  
  • திருக்கோஷ்டியூர் - 2  
  • திருவேங்கடம் - 9  
  • திருப்பாற்கடல் - 2 

----------
பிற பெயர்கள்
பூத யோகி, ஓடித் திரியும் யோகிகள்
----------
உபய விபூதி நாயகனான ஸ்ரீமந் நாராயணனை தம் பக்தியால் தியானித்து, பக்தி பரவசத்தால் பக்குவம் அடைந்து, உண்மை அறிவை உபதேசிக்கிறார். ஞான ஸ்வரூபமான ஆத்மா, அவனிடம் கொண்ட பக்தியில் உருகி கரைந்து, தான் பகவானுக்கு தாஸபூதன் என்று அறியாமல் போனாலும், அவனை நம் மனதில் ஸ்திரமாக குடியேறும் படி செய்வதே நமக்கு சகல இஷ்டங்களையும் அருளும். மேட்டு நிலத்தை தடாகமாக்கி மழை நீரை சேமிக்க தகுந்த பாத்திரமாகச் செய்ய வேண்டும் என்பதை நமக்கு காட்டி தருகிறார்.

வேதத்தின் பொருளை அறியாதவர்கள் கலங்க வேண்டாம். புருஷோத்தமனான பகவானின் திருநாமத்தை துதிப்பதே வேதத்தின் ஸாரமான பொருள் என்பதை அறிவீர் என்று உபதேசிக்கிறார். ஆதிமூல காரணமான பகவானின் திருவடிகளில் மன்னிக்கிடப்பவர்களின் பாதங்களை தொழுவதே தன் கரங்களின் உயர்ந்த செயலாக கருதுகிறார். கண்ணனே நம் பாவங்களுக்கு சத்ரு என்ற திட நம்பிக்கை கொண்டு வணங்குவோம் என்று உபதேசிக்கிறார்.
----------
தனியன் 1
துலா த⁴நிஷ்ட² ஸம்பூ⁴தம் 
பூ⁴தம் கல்லோல மாலிநம்|
தீரே பு²ல்லோத் பலே 
மல்லாபுர்ய மீடே³ க³தா³ம் ஸ²கம்||

தனியன் 2
மல்லாபுர வராதீஸ²ம் 
மாதவீ குஸுமோத் பவம்|
பூதம் நமாமி யோ விஷ்ணோர் 
ஜ்ஞாந தீபம் அகல் பயத்||
 
தனியனின் விளக்கம்
திருக்கடல்மல்லைத் தலைவர், மாதவிப் பூவில் அவதரித்தவர், தம் ஞான திருஷ்டியால் நாராயணனைக் கண்டுகளிக்க ஞான தீபம் ஏற்றியவரான பூதத்தாழ்வாரை வணங்குகிறேன்.

வாழி திருநாமம் 
அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே|
ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே|
நன்புகழ் சேர் குருக்கத்தி நாண் மலரோன் வாழியே|
நல்ல திருக்கடல்மல்லை நாதனார் வாழியே|
இன்புருகு சிந்தை திரி இட்ட பிரான் வாழியே|
எழில் ஞானச் சுடர் விளக்கை ஏற்றினான் வாழியே|
பொன் புரையும் திருவரங்கர் புகழ் உரைப்போன் வாழியே|
பூதத்தார் தாளிணை இப்பூதலத்தில் வாழியே||

திருநாள் பாட்டு
1. ஐப்பசியில் ஓணம்* அவிட்டம் சதயம் இவை*
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர்* 
எப்புவியும் பேசு புகழ்* பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்*
தேசுடனே தோன்று சிறப்பால்!

2. மற்றுள்ள ஆழ்வார்களுக்கு* முன்னே வந்துதித்து*
நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த* 
பெற்றிமையோர் என்று* 
முதலாழ்வார்கள் என்னும் பெயரிவர்க்கு*
நின்றது உலகத்தே நிகழ்ந்து*

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

1. பொய்கை ஆழ்வார்

 ||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

  • அம்சம் - பாஞ்சசன்னியம் (சங்கு)
  • அவதார ஸ்தலம் - காஞ்சீபுரம் திருவெஃகா யதோக்தகாரி கோயிலில் பொற்றாமரை பொய்கையில் தாமரை மலரில் - அயோநிஜர் (சுயம்பு)
  • காலம் - கி.பி. 7ம் நூற்றாண்டு 
  • வருடம் – சித்தார்த்தி (த்வாபர யுக கலியுக சந்தி)
  • மாதம் - ஐப்பசி
  • திரு நக்ஷத்திரம் - திருவோணம்
  • திதி - வளர்பிறை அஷ்டமி
  • கிழமை - செவ்வாய்
  • ஆசார்யன் - ஸேனை முதலியார்
  • அருளிச் செய்தவை - 1. முதலாம் திருவந்தாதி - மூன்றாம் ஆயிரம் - 2082-2181 
  • பாசுரங்கள் - 100

----------
மங்களாஸாஸநம் செய்த திவ்ய தேச 
ஸ்தலங்கள் – 6; பாசுரங்கள் - 17 

  • திருவரங்கம் - 1
  • திருக்கோவிலூர் - 2
  • திருவெஃகா - 1
  • திருவேங்கடம் - 10
  • திருப்பாற்கடல் - 1
  • திரு பரமப்பதம் - 2
----------
பிற பெயர்கள்
சரோ யோகி, பொய்கை பிரான், பத்ம முனி, காவினிய போரேயர், கிரக முனி, மகாதேவயார், தமிழ் தலைவன் 
----------
வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் முதலாழ்வார் ஆவார். பொய்கையில் தோன்றியதால் பொய்கையாழ்வார் என்று அழைக்கப்படுகிறார். இவரே திருமாலின் பத்து அவதாரங்களையும் முதலில் சிறப்பித்துப் பாடியவர் ஆவார். இவர் கவிஞர் தலைவன் என்று வைணவர்களால் சிறப்பிக்கப்படுகிறார். இவரால் அந்தாதியாகப் பாடப்பட்ட நூறு பாடல்களும் முதல் திருவந்தாதி எனப் போற்றப்படுகிறது. ஒரு சமயம் பொய்கையாழ்வார் மழையின் காரணமாக திருக்கோவிலூர் மிருகண்டு முனிவரது ஆசிரமத்துக்கு சென்றார். அங்கு பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும் வந்தனர். இவர்கள் மூவரும் நெருக்கியடித்து நிற்க அங்கு திருமால் மூவருக்கும் காட்சியளித்தார். முதன்முதலில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் பாடியவர்.

பரமபதத்திற்கும் இம்மண்ணுலகத்திற்கும் ஒரே நாதனாக ஒப்பற்ற ஸ்வாமியாக விளங்குபவன் ஸ்ரீமன் நாராயணன் என்பதை தன் ஞானத்தால் உணர்ந்தார். உபய விபூதியையும் தியானத்து, பிறந்த ஞானத்தாலே, அவரவர் தாம் தாம் அறிந்தவாறு தந்தமக்கு விருப்பமான உருவம், பெயர் வைத்து பரம்பொருளான அவனைத் தொழுதாலும், கருணைக் கடலான அவன் அருள் புரிவது திண்ணம் என்று உலகோருக்கு அவனது எளிமையை எடுத்துக் கூறுகிறார். மூவரான மும்மூர்த்திகளில் முதல்வனானவன் கடல்நிற வண்ணன் எம்பெருமான். திருநாபியில் பிரமனுக்கு இடம் அளித்து வேதத்தை ஓதுவிக்குமாறு உபதேசித்த அந்த எம்பெருமானை மனதால் சிந்தனை செய்யாமல் கர்மானுஷ்டானங்கள் செய்வதால் ஒரு பயனும் இல்லை. மனத்தூய்மையுடன் வாயினால் பாடி, தூ மலர் கொண்டு தொழுதால் தீராத பாவ வினைகளும் அணுகாமல் பரம பக்தியாகிற செல்வம் வளர பெறுவோம் என்று நாம் உய்ய மிகவும் சுலபமான வழியைக் காட்டித் தருகிறார்.
----------
தனியன் 1
துலாயாம் ஸ்²ரவணே ஜாதம் 
காஞ்ச்யாம் காஞ்சந வாரிஜாத்| 
த்³வாபரே பாஞ்ச ஜந்யாம்ஸ²ம் 
ஸரோ யோகி³நம் ஆஸ்²ரயே|| 

தனியனின் விளக்கம்
த்வாபர யுகத்தில், ஐப்பசி மாஸ ஸ்ரவண நக்ஷத்ரத்தில், காஞ்சீபுரியில், பொற்றாமரையில், பாஞ்ச ஜந்ய அம்ஸமாகத் தோன்றிய பொய்கை ஆழ்வாரை வணங்குகிறேன்.

தனியன் 2
காஞ்ச்யாம் ஸரஸி ஹேமாப்ஜே 
ஜாதம் காஸார யோகிநம்|
கலயே ய: ஸ்ரிய:பதி 
ரவிம் தீபம் அகல்பயத்|

தனியனின் விளக்கம்
காஞ்சித் திருவெஃகாத் திருக்குளத்தில் தங்கத்  தாமரைப் பூவில் அவதரித்த, தம் திவ்ய ஞான ஒளியால் ஸூர்ய தேஜஸ்ஸில் ஸ்ரீமந் நாராயணனைக் கண்ட பொய்கை ஆழ்வாரைத்  துதிக்கிறேன்.

வாழி திருநாமம் 
செய்ய துலா ஓணத்தில் செகத்து உதித்தான் வாழியே|
திருக்கச்சி மாநகரம் செழிக்க வந்தோன் வாழியே|
வையந் தகளி நூறும் வகுத்து உரைத்தான் வாழியே|
வனச மலர்க் கருவதனில் வந்து அமைந்தான் வாழியே|
வெய்ய கதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே|
வேங்கடவர் திருமலையை விரும்பும் அவன் வாழியே|
பொய்கை முனி வடிவழகும் பொற்பதமும் வாழியே|
பொன் முடியும் திருமுகமும் பூதலத்தில் வாழியே||

திருநாள் பாட்டு
1. ஐப்பசியில் ஓணம்* அவிட்டம் சதயம் இவை*
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர்* 
எப்புவியும் பேசு புகழ்* பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்*
தேசுடனே தோன்று சிறப்பால்!

2. மற்றுள்ள ஆழ்வார்களுக்கு* முன்னே வந்துதித்து*
நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த* 
பெற்றிமையோர் என்று* 
முதலாழ்வார்கள் என்னும் பெயரிவர்க்கு*
நின்றது உலகத்தே நிகழ்ந்து*

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

பன்னிரு ஆழ்வார்கள்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனான எம்பெருமான் ஸாதுக்களைக் காக்கவும் துஷ்ட செயல்களை கண்டிக்கவும் ஸ்ரீ க்ருஷ்ணராக அவதரித்து அர்ஜுனனை காரணமாக்கி ஸ்ரீமத் பகவத் கீதையை உபதேசித்தான். ஜீவாத்மாக்கள் எம்பெருமானை தன்னை ஒத்த மனிதனாகவே எண்ணி உபதேசங்களுக்கு இசையாமல் நிற்கவே, கருணா மூர்த்தியான பகவான் அநந்த, கருட, விஷ்வக்ஸேநர், முதலிய நித்ய ஸூரிகளை கொண்டு ஜீவ கோடிகளைக் கரையேற்ற திருவுள்ளம் கொண்டான். லீலா விபூதியில் நித்யசூரிகளை அவதரிப்பித்து ஜீவாத்மாக்களை பக்தி மார்க்கத்தில் மூட்டி உய்வடையும்படி செய்யுமாறு பகவான் நியமித்தான். அவன் நியமனத்தை தலைமேற் கொண்டு பூவுலகில் அவதரித்தவர்கள் ஆழ்வார்கள்.


திருமாலாகிய பேரெழில் பொய்கையில் ஆழ மூழ்கி கவி பாடியவர்கள் ஆழ்வார்கள். உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்னும்படி பகவத் அனுபவத்தில் திளைத்தவர்கள், ஆதலால் ஆழ்வார்கள் எனக் கொண்டாடப் படுகின்றனர். அவர்கள் அருளி செய்த பாசுரங்களே வேதங்களுக்கு இணையாக திவ்ய பிரபந்தம் என்று போற்ற படுகின்றன.

வைணவ சமயத்தின் முதன்மைத் தெய்வமாகிய திருமாலைப் போற்றித் தமிழ்ச் செய்யுட்களால் பாடியவர்கள் ஆழ்வார்கள் ஆவர். வைணவத்தில் பெருமாளுக்கு இணையாக பார்க்கப் படுபவர்கள் ஆழ்வார்கள். பெருமாளே கதியென்று அவரை சரணடைந்து, தீராத பக்தி கொண்டு, தமிழ் செய்யுளால் பெருமாளை பாடியவர்கள் இந்த ஆழ்வார்கள். ஆழ்வார்களின் பேச்சுக்கு பெருமாளே கட்டுப்பட்டதாகவும், ஆழ்வார்கள் எங்கு சென்றாலும் பெருமாளும் அந்த இடத்திற்கு தேடி செல்வார் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு ஆழ்வார்களை பெருமாள் ஆட்கொண்ட கதைகளே உதாரணமாக உள்ளன. தென் மொழியாம் தமிழ் மொழியில் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (அல்லது) ஆழ்வார் அருளிச்செயல் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர். அவர்களுள், இறைவனை இறைவனாகக் காணாது, இறைவனோடு உறவுமுறையில் வாழ்ந்ததால் ஆண்டாளையும், இறைவனைப் பாடாது ஆசானைப் பாடினார் என்பதால் மதுரகவியாழ்வாரையும் வேறு வரிசையில் தொகுத்து, ஆழ்வார்கள் பதின்மர் 10 பேர் மட்டுமே எனக் காட்டுவாரும் உண்டு. இவர்கள் 5 முதல் 9 நூற்றாண்டுக் கால அளவில் வாழ்ந்தவர்கள்.

மரபுப்படி இறைவனின் குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர்களை ஆழ்வார்கள் என்று சொற்பொருள் கூறுவர். ஆயினும் இந்தச் சொல் ஆள்வார் என்றும் வழங்கினதாகவும் பிறகு ஆழ்வார் என்று ஆனதாகவும் பன்னிரு ஆழ்வார்களின் நூல்களே வைணவப் பக்தி இலக்கியங்களாகும். நம்மாழ்வாரின் திருவாய்மொழி, தமிழ் வேதம்/ திராவிட வேதம் என்றும் போற்றப்படுகின்றது. 

இந்த 108 திவ்ய தேசத் திருத்தலங்களுக்குச் சென்று நம் பெருமானைச் சேவிக்கு முன் அவனைப் போற்றி, சரணடைந்து, அவனே கதியென்று வாழ்ந்த பன்னிரண்டு ஆழ்வார்களைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. இந்த ஆழ்வார்கள் வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்திருந்தாலும், அவர்கள் போற்றிப் பணிந்ததெல்லாம் ஒரே பரமனைத்தான். இந்த ஆழ்வார்கள் திருமாலின் அம்சமாகவே கருதப் படுகின்றனர். பெருமானைப் போற்றுவதும், மங்களாசாஸனம் செய்வதுமே அவர்களின் வாழ்க்கை முறையாக அமைந்தது. 

  • 1) பொய்கை ஆழ்வார்
  • 2) பூதத்தாழ்வார்
  • 3) பேயாழ்வார்
  • 4) திருமழிசை ஆழ்வார்
  • 5) நம்மாழ்வார்
  • 6) திருமங்கையாழ்வார்
  • 7) தொண்டரடிப் பொடி ஆழ்வார்
  • 8) பெரியாழ்வார்
  • 9) ஸ்ரீ ஆண்டாள்
  • 10) குலசேகர ஆழ்வார்
  • 11) மதுரகவி ஆழ்வார்
  • 12) திருப்பாணாழ்வார்

இவர்களுள் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார் மூவரையும் முதல் ஆழ்வார்கள் என்று குறிப்பது வழக்கம்.

பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ் மழிசை
அய்யன் அருள்மாறன் சேரலர் கோன் துய்ய பட்ட
நாதனன் பர்த்தாள் தூளி நற்பாணன் நல் கலியன்
ஈதிவர் தோற்றத் தடைவாம் இங்கு

இதில் ஆண்டாள், மதுரகவி ஆழ்வார் ஆகியோர் சேர்க்கப்படவில்லை. ஆழ்வார்கள் பத்துபேர் என்று சொல்வதே பழைய மரபு. ஆண்டாளும் மதுரகவி ஆழ்வாரும் அதற்குப்பின் சேர்க்கப்பட்டனர்.

ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார் இறைவனைப் பாடாமல் தன்னுடைய குருவான நம்மாழ்வாரைப் பற்றிய பாசுரங்கள் மட்டுமே பாடினார்.  ஆழ்வார்களில் ஆண்டாள் மட்டுமே பெண்.

  • பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் அயோநிஜர்கள்‘ என்று விவரிக்கப்படுகிறார்கள், அதாவது, இவர்கள் கண்டெடுக்கப்பட்டவர்கள் என்பதும், பிற்பாடு ரிஷிகளாக இருந்தார்கள் என்பதும் தெரிகிறது.
  • திருமழிசையாழ்வார் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் என்பது அவரது பாட்டிலிருந்தே தெரிகிறது. “குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்” (நா. தி.பி – 841) என்று அவரே கூறுகிறார்.
  • பெரியாழ்வார் அந்தணர். அவரது துளசித்தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தை கோதை எனும் ஆண்டாள்.
  • திருமங்கையாழ்வார் கள்ளர் குலத்தைச் சார்ந்தவர்.
  • குலசேகர ஆழ்வார் சேர நாட்டு மன்னர் குலத்தைச் சேர்ந்தவர்.
  • திருப்பாணாழ்வார் ‘அந்திம வம்சம் பஞ்சம குலம்‘ எனப்பட்ட பாண வம்சத்தில் பிறந்தவர்.
  • தொண்டரடிப்பொடியாழ்வார் ஒரு பிராமணர்.
  • நம்மாழ்வார் வெள்ளாள சிற்றரசர் வம்சத்தைச் சேர்ந்தவர்.
  • அவரது சிஷ்யர் மதுரகவியாழ்வார் பிராமணர். 
இவ்வாறு எல்லாக்குலங்களிலும் ஆழ்வார்கள் இருந்திருக்கிறார்கள்.

  • சேர நாடு - குலசேகர ஆழ்வார்
  • சோழ நாடு - திருமங்கை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார்
  • பாண்டிய நாடு - நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், மதுரகவி ஆழ்வார்
  • தொண்டை நாடு - பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார்

பன்னிரு ஆழ்வார்கள் வாழித் திருநாமங்கள்

போத மிகும் பொய்கையார் பூதத்தார் வாழியே|
புகழ் பேயார் மழிசையர் கோன் புத்தூரன் வாழியே|
நாதமுனி தொழுங் குருகை நாவீறன் வாழியே|
நற்பாணன் கொல்லி நகர் நாதனார் வாழியே|
ஆதரிக்குந் தொண்டரடிப்பொடி தாள்கள் வாழியே|
அருட்கலியன் மதுரகவி ஆண்டாளும் வாழியே|
ஏதமற்ற நாலாயிரப் பனுவல் வாழியே|
இவர் உதித்த நாள் மாதம் எழிற் பதியும் வாழியே||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்