||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||037. திருமணிக்கூடம்||
||திருநாங்கூர்||
||முப்பத்தி ஏழாவது திவ்ய க்ஷேத்ரம்||
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10
திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1288 - பெரிய திருமொழி - 4.5.1
தூம்பு உடைப் பனைக் கை வேழம்* துயர் கெடுத்தருளி*
மன்னும் காம்பு உடைக் குன்றம் ஏந்திக்* கடு மழை காத்த எந்தை*
பூம் புனல் பொன்னி முற்றும்* புகுந்து பொன் வரன்ட எங்கும்*
தேம் பொழில் கமழும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே|
002. திவ்ய ப்ரபந்தம் - 1289 - பெரிய திருமொழி - 4.5.2
கவ்வை வாள் எயிற்று வன் பேய்க்* கதிர் முலை சுவைத்து*
இலங்கை வவ்விய இடும்பை தீரக்* கடுங் கணை துரந்த எந்தை*
கொவ்வை வாய் மகளிர் கொங்கைக்* குங்குமம் கழுவிப் போந்த*
தெய்வ நீர் கழும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே|
003. திவ்ய ப்ரபந்தம் - 1290 - பெரிய திருமொழி - 4.5.3
மாத் தொழில் மடங்கச் செற்று* மருது இற நடந்து*
வன் தாள் சேத் தொழில் சிதைத்துப்*
பின்னை செவ்வித் தோள் புணர்ந்த எந்தை*
நாத் தொழில் மறை வல்லார்கள்* நயந்து அறம் பயந்த வண் கைத்*
தீத் தொழில் பயிலும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே|
004. திவ்ய ப்ரபந்தம் - 1291 - பெரிய திருமொழி - 4.5.4
தாங்கு அரும் சினத்து வன் தாள்* தடக் கை மா மருப்பு வாங்கி*
பூங் குருந்து ஒசித்து புள் வாய் பிளந்து* எருது அடர்த்த எந்தை*
மாங்கனி நுகர்ந்த மந்தி* வந்து வண்டு இரிய*
வாழைத் தீங் கனி நுகரும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே|
005. திவ்ய ப்ரபந்தம் - 1292 - பெரிய திருமொழி - 4.5.5
கரு மகள் இலங்கையாட்டி* பிலங் கொள் வாய் திறந்து*
தன் மேல் வரும் அவள் செவியும் மூக்கும்* வாளினால் தடிந்த எந்தை*
பெரு மகள் பேதை மங்கை* தன்னொடும் பிரிவு இலாத*
திருமகள் மருவும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே|
006. திவ்ய ப்ரபந்தம் - 1293 - பெரிய திருமொழி - 4.5.6
கெண்டையும் குறளும் புள்ளும்* கேழலும் அரியும் மாவும்*
அண்டமும் சுடரும் அல்லா* ஆற்றலும் ஆய எந்தை*
ஒண் திறல் தென்னன் ஓட* வட அரசு ஓட்டம் கண்ட*
திண் திறலாளர் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே|
007 .திவ்ய ப்ரபந்தம் - 1294 - பெரிய திருமொழி - 4.5.7
குன்றமும் வானும் மண்ணும்* குளிர் புனல் திங்களோடு*
நின்ற வெம் சுடரும் அல்லா* நிலைகளும் ஆய எந்தை*
மன்றமும் வயலும் காவும்* மாடமும் மணங் கொண்டு*
எங்கும் தென்றல் வந்து உலவும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே|
008. திவ்ய ப்ரபந்தம் - 1295 - பெரிய திருமொழி - 4.5.8
சங்கையும் துணிவும் பொய்யும்* மெய்யும் இத் தரணி ஓம்பும்*
பொங்கிய முகிலும் அல்லாப்* பொருள்களும் ஆய எந்தை*
பங்கயம் உகுத்த தேறல்* பருகிய வாளை பாய*
செங் கயல் உகளும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே|
009. திவ்ய ப்ரபந்தம் - 1296 - பெரிய திருமொழி - 4.5.9
பாவமும் அறமும் வீடும்* இன்பமும் துன்பம் தானும்*
கோவமும் அருளும் அல்லாக்* குணங்களும் ஆய எந்தை*
மூவரில் எங்கள் மூர்த்தி* இவன் என முனிவரோடு*
தேவர் வந்து இறைஞ்சும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே|
010. திவ்ய ப்ரபந்தம் - 1297 - பெரிய திருமொழி - 4.5.10
திங்கள் தோய் மாட நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானை*
மங்கையர் தலைவன் வண் தார்க்* கலியன் வாய் ஒலிகள் வல்லார்*
பொங்கு நீர் உலகம் ஆண்டு* பொன் உலகு ஆண்டு*
பின்னும் வெம் கதிர்ப் பரிதி வட்டத்து ஊடு போய்* விளங்குவாரே|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment