||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
சித்திரை நக்ஷத்திரம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார்
பன்னிரு ஆழ்வார்கள் வரிசையில் ஆறாவதாக மதுரகவி கருதப்படுகிறார். பன்னிரண்டு ஆழ்வார்களில் தலை சிறந்தவராகக் கருதப்படும் நம்மாழ்வாரின் சீடரான இவர், நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் உள்ள 4000 ஸ்லோகங்களில் 11 பாடல்கள். மதுரகவி நம்மாழ்வாரின் திருவாய்மொழி (1102 செய்யுள்கள்) ஆகிய நூல்களை பதிவு செய்து தொகுத்ததாக நம்பப்படுகிறது.
இவர் தமிழ் மொழியிலும், வடமொழியிலும் சிறந்த புலமை பெற்று, சிறந்த ஒழுக்கம், திருமாலிடம் அன்பு, அருள் முதலியன தம்மிடம் வாய்க்கப்பெற்றவராயிருந்தார். தமிழ் மொழியில் மதுரமான கவிதைகளைப் பாடிய காரணம்பற்றி இவருக்கு மதுரகவிராயர் என்னும் பெயர் அமைந்துள்ளது.
மதுரகவியாழ்வார், புண்ணியப் பதிகள் என வழங்கும் 1. அயோத்தி, 2. மதுரை, 3. கயை, 4. காசி, 5. காஞ்சி, 6. அவந்தி, 7. துவாரகை என்னும் ஏழையும் சென்று சேவித்து, மறுபடியும் அயோத்தியை அடைந்து, அங்கு அர்ச்சாவதார வடிவாய் எழுந்தருளியிருக்கின்ற இராமபிரானையும், பிராட்டியையும் சேவித்துத் திருவடி தொழுதுகொண்டு அங்கு வசிக்கலானார்.
ஒரு நாளிரவில் இவர் திருக்கோரூர் எம்பெருமானைத் திசை நோக்கித் தொழக் கருதித் தென்திசையில் கண் செலுத்திய பொழுது, அப்பாக்கத்திலே வானுற வளர்ந்து விளங்கிய ஒரு திவ்யமான பேரொளியைக் காணுற்று, அஃது இன்னதென்றறியாமல், 'கிராம நகரங்கள் வேகின்றனவோ? காட்டுத் தீயோ?'என ஐயுற்றுத் திகைத்து நின்றார். இங்ஙனமே அடுத்த இரண்டு மூன்று நாட்களிலும் கண்டு, அச்சுடர்த்திரள் முச்சுடரொளியிலும் மிக்கு விளங்கியதானால் பெருவியப்புற்ற அவர், அதனைக் காணும் அவாவினராய்ப் புறப்பட்டு அச்சோலையைக் குறியாகக் கொண்டு நெடுவழி கடந்து நடந்து திருக்குருகூரை அடைந்தார். அவ்வொளி அப்பகுதியில் பொலிந்து நின்ற பிரான் திருக்கோயிலுக்குட்புக்கு மறைந்துவிட்டது. மதுரகவியார் அவ்வூரிலுள்ளாரைப் பார்த்து, 'இங்கு ஏதேனும் சிறந்த செய்தி உண்டா?'என வினவ அவர்கள் ஆழ்வாரது வரலாற்றைக் கூறினார்கள். மதுரகவியார் அவ்வரலாற்றைக் கேட்டுக் கோயிலினுள்ளே சென்று முன் நம்மாழ்வார் வரலாற்றிற் கூறியபடி, ஆழ்வார் அருளைப் பெற்று, அவர் அருளிச் செயல்களைப் பட்டோலையில் எழுதினார். மதுரகவியாழ்வாருக்கு நம்மாழ்வார் பாசுரங்களில் பற்று ஏற்பட்டது. மதுரகவியார் நம்மாழ்வாரையே பதினாரு பாசுரங்களால் ஆன பாமாலை ஒன்றாற் பாடினார். அப்பாமாலையின் முதற்பா 'கண்ணிநுண் சிறுத்தாம்பு'என்பது பெயராயிற்று. நம்மாழ்வார் திருநாட்டை அலங்கரித்தபின்னர், அவர்அர்ச்சை வடிவினரான ஆழ்வாரின் உருவத்தைத் திருக்குருகூர் நகரில் எழுந்தருளச் செய்தார்.
மதுரகவியார் ஆழ்வாருக்கு நித்யம் நைமித்திக விழாக்களையெல்லாம் சிறப்புற நடத்தி வந்தார். அத்திருவிழாக்களில் 'வேதந்தமிழ் செய்த மாறர் வந்தார்', திருமாலுக்குரிய தெய்வப் புலவர் வந்தார்' 'அளவிலா ஞானத்து ஆரியர் வந்தார்'என்பவை முதலாகப் பல விருதுகளைக் கூறித் திருச்சின்னம் முழங்கினார். இதனைக் கேள்வியேற்ற மதுரைச் சங்கத்தாரது மாணாக்கர்கள் எதிரிட்டு, 'உங்கள் ஆழ்வார் பக்தரேயன்றிப் பகவானல்லரே. இவர் சங்கமேறிய புலவரோ? இவர் பாடிய திருவாய்மொழி சங்கமேறிய செய்யுளன்று. இவரை வேதந்தமிழ் செய்தவரென்று புகழ்வது தகுதியோ?'என்று பலவாறு பேசி விருதுகளைத் தடுத்திட்டனர். அதற்கு மதுரகவிகள் மனம் பொறாமல் வருந்தி, 'இவர்கட்கு கர்வபங்கமாகும்படி தேவரீர் செய்தருளவேண்டும்'என்று துதித்தார். சடகோபர் ஒரு கிழப் பார்ப்பனர் வடிவத்தோடு வந்து "திருவாய்மொழியில் 'கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்!எண்ணுந் திருநாமம் திண்ணம் நாரணமே'என்ற பாசுரத்தின் முதலடியை ஒரு சிற்றேட்டில் எழுதிக்கொண்டு சென்று, சங்கப் பலகையின்கண் வைத்தால் அவர்கள் செருக்கு அடங்கும்"என்று கூறியருளினார். அங்ஙனமே மதுரகவி ஆழ்வார் கண்ணன் சுழலிணையை எழுதிய ஏட்டை எடுத்துப் பலகை பொற்றாமரைப் பொய்கையில் மூழ்கி, தன் மேலிருந்த புலவர்களையெல்லாம் நீரில் வீழ்த்தி, உடனே மேலெழுந்து தன்மீது வைத்த சிறு முறியை மாத்திரம் ஏந்திக்கொண்டு மிதந்தது.
அப்பொழுது நீரில் விழுந்து அமிழ்ந்து தடுமாறியெழுந்து மெல்ல நீந்திக் கரை சேர்ந்த சங்கப் புலவர்கள் வேதம், வேதத்தின் முடிவுப் பொருள்கள் முதலான யாவற்றையும் பிறரால் கற்பிக்கப்படாமல் தாமேயுணர்ந்த நம்மாழ்வாரது இறைமை எழில் பொருந்திய வித்தகத் திறனைத் தெரிந்துகொண்டு செருக்கொழிந்தனர். மதுரகவி ஆழ்வார் தமது ஆசிரியராகிய நம்மாழ்வாருக்குப் பலவகை விழாக்களையும் ஆராதனைகளையும் நடத்தி வந்ததோடு, ஆழ்வாரது அருந்தமிழ் மறைகளின் பொருள்களைப் பலரும் உணரும்படி உரைத்துச் சிலகாலம் எழுந்தருளியிருந்து, பின்பு சிந்தையும் மொழியுஞ் செல்லா நிலைமைத்தான பேரின்பப் பெருவீட்டை அடைந்தார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||


No comments:
Post a Comment