||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||திவ்ய ப்ரபந்தம் - 131 – அமரர் கோமான் கண்ணன்||
||பெரியாழ்வார் திருமொழி||
||இரண்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - நான்காம் பாசுரம்||
கஞ்சன் தன்னால் புணர்க்கப்பட்ட*
கள்ளச் சகடு கலக்கு அழிய*
பஞ்சி அன்ன மெல் அடியால்*
பாய்ந்த போது நொந்திடும் என்று*
அஞ்சினேன் காண் அமரர் கோவே!*
ஆயர் கூட்டத்து அளவு அன்றாலோ*
கஞ்சனை உன் வஞ்சனையால்*
வலைப்படுத்தாய்! முலை உணாயே|
- அமரர் கோவே - தேவர்களுக்குத் தலைவனே! நீ
- கஞ்சன் தன்னால் - கம்ஸனால்
- புணர்க்கப்பட்ட - உன்னைக் கொல்வதற்காக ஏவப்பட்ட
- கள்ளச் சகடு - வஞ்சனைமிக்க சகடமானது
- கலக்கு அழிய - கட்டுக் குலைந்து உருமாறி தவிடு பொடியாகும்படி
- பஞ்சி அன்ன - பஞ்சைப் போன்ற
- மெல்லடியால் - மிருதுவான உன் பாதங்களினால்
- பாய்ந்த போது - பாய்ந்து உதைத்த போது
- நொந்திடும் என்று - உன் பாதங்களுக்கு வலிக்கும் என்று
- அஞ்சினேன் காண் - அச்சப்பட்டேன் பார்
- ஆயர் கூட்டத்து - இடையர் மக்கள் கூட்டம்
- அளவன்றாலோ! - எதற்கும் பயப்படமாட்டார்கள்
- கஞ்சனை - உன்னைக் கொல்வதற்காக மிக்க வஞ்சனைகளைச் செய்த கம்ஸனை
- உன் வஞ்சனையால் - உன்னுடைய சாமர்த்தியத்தால்
- வலைப் படுத்தாய்! - உன் கையில் சிக்கும்படி வலையில் பிடித்து முடித்தவனே!
- முலை உணாயே - தாய்ப்பாலை உண்ணாயோ
தேவர்களின் தலைவனே! கம்சனால் ஏவப்பட்ட சகடத்தை, உன்னுடைய பிஞ்சு கால்களால் உதைத்து உரு குலையச் செய்த போது, உன் மிருதுவான கால்களுக்கு வலி ஏற்பட்டிருக்குமோ என ஆயர் கூட்டமே அஞ்சியது, அதைக் காட்டிலும் பெரிய அளவில் அஞ்சியவளாக நான் இருந்த போது, நய வஞ்சகனான கம்சனையும் சூழ்ச்சியால் கொன்ற கண்ணா! என் முலையின் பாலை உண்பாயாக என்கிறாள் யசோதை.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment