||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||001. திருவரங்கம்||
||ஸ்ரீரங்கம் - திருச்சி||
||முதலாவது திவ்ய க்ஷேத்ரம்||
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 247 - 13
பூதத்தாழ்வார்
224. திவ்ய ப்ரபந்தம் - 2209 - இரண்டாம் திருவந்தாதி - 3.8 (28)
மனத்து உள்ளான் வேங்கடத்தான்* மா கடலான்,*
மற்றும் நினைப்பு அரிய* நீள் அரங்கத்து உள்ளான்,*
எனைப் பலரும் தேவாதி தேவன்* எனப்படுவான்,*
முன் ஒரு நாள் மா வாய் பிளந்த மகன்|
225. திவ்ய ப்ரபந்தம் - 2227 - இரண்டாம் திருவந்தாதி - 5.6 (46)
பயின்றது அரங்கம் திருக்கோட்டி,*
பல் நாள் பயின்றதுவும்* வேங்கடமே பல் நாள்,*
பயின்றது அணி திகழும் சோலை* அணி நீர் மலையே*
மணி திகழும் வண் தடக்கை மால்|
226. திவ்ய ப்ரபந்தம் - 2251 - இரண்டாம் திருவந்தாதி - 7.10 (70)
தமர் உள்ளம் தஞ்சை* தலை அரங்கம் தண்கால்,*
தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை,*
தமர் உள்ளும் மாமல்லை கோவல்* மதிள் குடந்தை என்பரே,*
ஏ வல்ல எந்தைக்கு இடம்|
227. திவ்ய ப்ரபந்தம் - 2269 - இரண்டாம் திருவந்தாதி - 9.8 (88)
திறம்பிற்று இனி அறிந்தேன்* தென் அரங்கத்து எந்தை,*
திறம்பா வழிச் சென்றார்க்கு அல்லால்,*
திறம்பாச் செடி நரகை நீக்கி* தாம் செல்வதன் முன்,*
வானோர் கடி நகர வாசல் கதவு|
பேயாழ்வார்
228. திவ்ய ப்ரபந்தம் - 2342 - மூன்றாம் திருவந்தாதி - 7.1 (61)
பண்டு எல்லாம் வேங்கடம்* பாற்கடல் வைகுந்தம்,*
கொண்டுஅங்கு உறைவார்க்கு கோயில் போல்,*
வண்டு வளம் கிளரும் நீள் சோலை* வண் பூங் கடிகை,*
இளங்குமரன் தன் விண்ணகர்| (2)
229. திவ்ய ப்ரபந்தம் - 2343 - மூன்றாம் திருவந்தாதி - 7.2 (62)
விண்ணகரம் வெஃகா* விரி திரை நீர் வேங்கடம்,*
மண் நகரம் மாமாட வேளுக்கை,*
மண்ணகத்த தென்குடந்தை* தேன் ஆர் திருவரங்கம் தென்கோட்டி,*
தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு|
திருமழிசையாழ்வார்
230. திவ்ய ப்ரபந்தம் - 2384 - நான்முகன் திருவந்தாதி - 1.3 (3)
பாலில் கிடந்ததுவும்* பண்டுஅரங்கம் மேயதுவும்*
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார்*
ஞாலத்து ஒரு பொருளை* வானவர்தம் மெய்ப்பொருளை*
அப்பில் அரு பொருளை யான் அறிந்த ஆறு?
231. திவ்ய ப்ரபந்தம் - 2411 - நான்முகன் திருவந்தாதி - 3.10 (30)
அவன் என்னை ஆளி* அரங்கத்து அரங்கில்*
அவன் என்னை எய்தாமல் காப்பான்*
அவன் என்னது உள்ளத்து* நின்றான் இருந்தான் கிடக்குமே*
வெள்ளத்து அரவு அணையின் மேல்|
232. திவ்ய ப்ரபந்தம் - 2417 - நான்முகன் திருவந்தாதி - 4.6 (36)
நாகத்து அணைக் குடந்தை* வெஃகா திரு எவ்வுள்*
நாகத்து அணை அரங்கம் பேர் அன்பில்*
நாகத்து அணைப் பாற்கடல் கிடக்கும்* ஆதி நெடுமால்*
அணைப்பார் கருத்தன் ஆவான்| (2)
233. திவ்ய ப்ரபந்தம் - 2441 - நான்முகன் திருவந்தாதி - 6.10 (60)
ஆள் பார்த்து உழி தருவாய்* கண்டு கொள் என்றும்*
நின் தாள் பார்த்து உழி தருவேன்* தன்மையை*
கேட்பார்க்கு அரும் பொருளாய் நின்ற* அரங்கனே*
உன்னை விரும்புவதே* விள்ளேன் மனம்|
திருமங்கையாழ்வார்
234. திவ்ய ப்ரபந்தம் – 2706 - சிறிய திருமடல் - 4.4 (34)
நான் அவனைக் கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய் *
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவலூரே* (2)
மதிள் கச்சி ஊரகமே பேரகமே*
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெஃகாவே*
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்*
ஆராமம் சூழ்ந்த அரங்கம்* கணமங்கை| (2)
235. திவ்ய ப்ரபந்தம் – 2773 - பெரிய திருமடல் - 7.1 (61)
மா மலர்மேல் அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி*
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை*
கன்னி மதிள் சூழ் கண மங்கைக் கற்பகத்தை*
மின்னை, இரு சுடரை, வெள்ளறையுள் கல் அறை மேல் பொன்னை*
மரதகத்தை புட்குழி எம் போர் ஏற்றை*
மன்னும் அரங்கத்து எம் மா மணியை|
நம்மாழ்வார்
236. திவ்ய ப்ரபந்தம் - 2505 - திருவிருத்தம் - 3.8 (28)
தண் அம் துழாய்* வளை கொள்வது யாம் இழப்போம்*
நடுவே வண்ணம் துழாவி* ஓர் வாடை உலாவும்*
வள் வாய் அலகால் புள் நந்து உழாமே பொரு நீர்த் திருவரங்கா* அருளாய்*
எண்ணம் துழாவுமிடத்து* உளவோ பண்டும் இன்னன்னவே?
237. திவ்ய ப்ரபந்தம் - 3464 - திருவாய்மொழி - 7.2.1
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்* கண்ண நீர் கைகளால் இறைக்கும்*
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்* தாமரைக் கண் என்றே தளரும்*
எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு? என்னும்* இரு நிலம் கை துழா இருக்கும்*
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்!* இவள் திறத்து என் செய்கின்றாயே?
238. திவ்ய ப்ரபந்தம் - 3465 - திருவாய்மொழி - 7.2.2
என் செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா? என்னும்*
கண்ணீர் மல்க இருக்கும்*
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்? என்னும்*
வெவ்வுயிர்த்து உயிர்த்து உருகும்:*
முன் செய்த வினையே! முகப்படாய் என்னும்*
முகில்வண்ணா! தகுவதோ? என்னும்*
முன் செய்து இவ் உலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய்*
என் கொலோ முடிகின்றது இவட்கே?
239. திவ்ய ப்ரபந்தம் - 3466 - திருவாய்மொழி - 7.2.3
வட்கு இலள் இறையும் மணிவண்ணா! என்னும்*
வானமே நோக்கும் மையாக்கும்*
உட்கு உடை அசுரர் உயிர் எல்லாம் உண்ட* ஒருவனே! என்னும் உள் உருகும்*
கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்* காகுத்தா! கண்ணனே! என்னும்*
திண் கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்!* இவள் திறத்து என் செய்திட்டாயே?
240. திவ்ய ப்ரபந்தம் - 3467 - திருவாய்மொழி - 7.2.4
இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும்* எழுந்து உலாய் மயங்கும் கை கூப்பும்*
கட்டமே காதல்! என்று மூர்ச்சிக்கும்* கடல் வண்ணா! கடியை காண் என்னும்*
வட்ட வாய் நேமி வலங்கையா! என்னும்* வந்திடாய் என்று என்றே மயங்கும்*
சிட்டனே செழு நீர்த் திருவரங்கத்தாய்* இவள் திறத்து என் சிந்தித்தாயே?
241. திவ்ய ப்ரபந்தம் - 3468 - திருவாய்மொழி - 7.2.5
சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்*
திருவரங்கத்துள்ளாய்! என்னும் வந்திக்கும்*
ஆங்கே மழைக் கண் நீர் மல்க* வந்திடாய் என்று என்றே மயங்கும்*
அந்திப் போது அவுணன் உடல் இடந்தானே* அலை கடல் கடைந்த ஆர் அமுதே*
சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த* தையலை மையல் செய்தானே|
242. திவ்ய ப்ரபந்தம் - 3469 - திருவாய்மொழி - 7.2.6
மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே! என்னும்* மா மாயனே! என்னும்,*
செய்ய வாய் மணியே! என்னும்*
தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய்! என்னும்,*
வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும்* விண்ணோர் முதல்! என்னும்,*
பை கொள் பாம்பு அணையாய்! இவள் திறத்து அருளாய்*
பாவியேன் செயற்பால் அதுவே|
243. திவ்ய ப்ரபந்தம் - 3470 - திருவாய்மொழி - 7.2.7
பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!* பற்றிலார் பற்ற நின்றானே*
கால சக்கரத்தாய்! கடல் இடம் கொண்ட* கடல் வண்ணா! கண்ணனே! என்னும்*
சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய்! என்னும்*
என் தீர்த்தனே என்னும்*
கோல மா மழைக் கண் பனி மல்க இருக்கும்*
என்னுடைக் கோமளக் கொழுந்தே|
244. திவ்ய ப்ரபந்தம் - 3471 - திருவாய்மொழி - 7.2.8
கொழுந்து வானவர்கட்கு என்னும்*
குன்று ஏந்தி கோ நிரை காத்தவன்! என்னும்*
அழும் தொழும் ஆவி அனல எவ்வுயிர்க்கும்* அஞ்சன வண்ணனே! என்னும்*
எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்*
எங்ஙனே நோக்குகேன்? என்னும்*
செழும் தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய்!* என் செய்கேன் என் திருமகட்கே?
245. திவ்ய ப்ரபந்தம் - 3472 - திருவாய்மொழி - 7.2.9
என் திருமகள் சேர் மார்வனே! என்னும்* என்னுடை ஆவியே! என்னும்*
நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட* நிலமகள் கேள்வனே! என்னும்*
அன்று உரு ஏழும் தழுவி நீ கொண்ட* ஆய்மகள் அன்பனே! என்னும்*
தென் திருவரங்கம் கோயில்கொண்டானே!*
தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே| (2)
246. திவ்ய ப்ரபந்தம் - 3473 - திருவாய்மொழி - 7.2.10
முடிவு இவள் தனக்கு ஒன்று அறிகிலேன் என்னும்* மூவுலகு ஆளியே என்னும்*
கடி கமழ் கொன்றைச் சடையனே என்னும்* நான்முகக் கடவுளே என்னும்*
வடிவு உடை வானோர் தலைவனே என்னும்* வண் திருவரங்கனே என்னும்*
அடி அடையாதாள் போல் இவள் அணுகி அடைந்தனள்*
முகில்வண்ணன் அடியே|
247. திவ்ய ப்ரபந்தம் - 3474 - திருவாய்மொழி - 7.2.11
முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன்*
மொய் புனல் பொருநல்*
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன்*
வண் பொழில் சூழ் வண் குருகூர்ச் சடகோபன்*
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை*
ஆயிரத்து இப் பத்தும் வல்லார்*
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர்* பேரின்ப வெள்ளத்தே| (2)
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment