About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 1 April 2024

திவ்ய ப்ரபந்தம் - 108 - பெரியாழ்வார் திருமொழி - 1.9.1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 108 - கோவிந்தன் என்னை கட்டிக் கொள்வான்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - முதலாம் பாசுரம்

வட்டு நடுவே* வளர்கின்ற* 
மாணிக்க மொட்டு நுனையில்* 
முளைக்கின்ற முத்தே போல்* 
சொட்டுச் சொட்டு என்னத்* துளிக்கத் துளிக்க* 
என் குட்டன் வந்து என்னைப் புறம் புல்குவான்* 
கோவிந்தன் என்னைப் புறம் புல்குவான்| (2)

  • என் குட்டன் - என் பிள்ளை
  • வட்டு நிடுவே - இரண்டு நீல ரத்ந வட்டுகளின் நிடுவே
  • வளர்கின்ற - வளர்த்துக் கொண்டிருப்பதான
  • மாணிக்கம் - இந்திர நீலமயமான 
  • மொட்டு - அரும்பினுடைய
  • நுனையில் - நுனியில்
  • முளைக்கின்ற - உண்டாகின்ற
  • முத்தே போல் - முத்துக்கள் போன்று
  • சொட்டு சொட்டு என்ன - அம்மாணிக்க மொட்டு சொட்டுச் சொட்டென்ற ஓசை உண்டாகும்படி
  • துளிர்க்க துளிர்க்க - பல தரம் துளியா நிற்க
  • வந்து - ஓடி வந்து
  • என்னை - என்னுடைய
  • புறம் - முதுகை
  • புல்குவான் - கட்டிக் கொள்வான்
  • கோவிந்தன் - கண்ணன்
  • என்னைப் என்னுடைய
  • புறம் புல்குவான்! - முதுகை கட்டிக் கொள்வான்

ஒரு மாணிக்க மொட்டின் நுனியில் முத்துக்கள் முளைப்பது போல் குழந்தையான கண்ணனின் குறியிலிருந்து சொட்டு சொட்டாக சிறுநீர் துளிர்க்கிறதாம்! இந்த நிலையிலேயே கண்ணன் என் பின்னால் வந்து என்னைக் கட்டிக் கொள்வான்! கோவிந்தன் கண்ணன் என்னைப் பின்புறம் வந்து கட்டிக் கொள்வான்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 033 - திருவைகுந்த விண்ணகரம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||033. திருவைகுந்த விண்ணகரம்||
||திருநாங்கூர்||
||முப்பத்தி மூன்றாவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ வைகுந்த நாதன் பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ வைகுந்தவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ வைகுந்த நாதன் பெருமாள்|| 
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர் - வைகுந்த நாதன்
  • பெருமாள் உற்சவர் - தாமரைக் கண்ணன்
  • தாயார் மூலவர் - வைகுந்தவல்லி
  • திருமுக மண்டலம் திசை - கிழக்கு 
  • திருக்கோலம் - வீற்றிருந்த 
  • புஷ்கரிணி/தீர்த்தம் - லக்ஷ்மி, உத்தரங்க, விரஜா
  • விமானம் - அநந்த ஸத்ய வர்த்தக
  • ஸ்தல விருக்ஷம் - மா 
  • ப்ரத்யக்ஷம் - உதங்க மஹரிஷி, உபரிஸரவஸு
  • ஆகமம் - வைகாநஸம்
  • ஸம்ப்ரதாயம் - தென் கலை
  • மங்களாஸாஸநம் - 1 ஆழ்வார்
  • பாசுரங்கள் - 10

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

காலம் முடிந்த பிறகு தான் பெருமாளை வைகுண்டத்தில் தரிசிக்க முடியும். ஆனால், பூலோகத்தில் நாம் வாழும் காலத்திலேயே தரிசிக்க இத்தலத்திற்கு செல்லலாம். வைகுண்டத்தில் பெருமாள் தேவர்களுக்கு காட்சி தருவது போல், இங்கும் காட்சி தருவதால் பரமபதத்திற்கு சமமான தலம்.

ராமபிரான் அவதரித்த இக்ஷ்வாகு குலத்தில் பிறந்தவன் ஸ்வேதகேது. நீதி நெறி தவறாதவன். எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொண்டவன். தெய்வ பக்தி கொண்டவன். இவனது மனைவிக்கும் இவனுக்கும் மகா விஷ்ணுவை அவர் வசிக்கும் இடமான வைகுண்டத்திற்கு சென்று தரிசிக்க வேண்டுமென்ற ஆசை நீண்ட நாளாக இருந்து வந்தது. ஸ்வேதகேது அரசனானதால் தனது ஆட்சி கடமைகளை முடித்து விட்டு மனைவி தமயந்தியுடன் தவம் செய்ய புறப்பட்டான். சுற்றிலும் தீ வளர்த்து, சூரியனைப் பார்த்தபடி தீயின் நடுவில் நின்று இருவரும் மகா விஷ்ணுவை நோக்கி கடும் தவம் இருந்தார்கள். 

நீண்ட நாள் இப்படி தவம் இருந்து தங்களது பூதவுடலை துறந்து வைகுண்டம் சென்றார்கள். ஆனால் அங்கு யாரை தரிசிக்க தவம் இருந்தார்களோ அந்த வைகுண்ட வாசனை காணவில்லை. இவர்கள் வருத்தத்துடன் இருந்த போது அங்கு வந்த நாரதரின் பாதங்களில் விழுந்து இருவரும் வணங்கினார்கள். வைகுண்டத்தில் விஷ்ணுவை தரிசிக்க இயலாமல் போனதற்கான காரணத்தை கேட்டனர். அதற்கு நாரதர், "நீங்கள் இருவரும் கடுமையாக தவம் இருந்தாலும், பூமியில் தான தர்மங்கள் செய்யவில்லை. அத்துடன் இறைவனுக்காக சாதாரண ஹோமம் கூட செய்யவில்லை. எனவே தான் வைகுண்டத்தில் விஷ்ணுவின் தரிசனம் உங்களுக்கு கிடைக்கவில்லை. இதற்கு பிராயச்சித்தமாக பூமியில் காவிரி யாற்றின் கரையில் அமைந்துள்ள ஐராவதேஸ்வரரை வணங்கி, முறையிட்டால் அவர் அனுக்கிரகத்துடன் வைகுண்ட பெருமாளின் தரிசனம் கிடைக்கும்," என்றார். 

ஸ்வேதகேதுவும் தமயந்தியும் ஐராவதேஸ்வரரை வழிபட்டு பெருமாளின் தரிசனம் கிடைக்க வேண்டினர். இவர்களது பக்திக்கு மகிழ்ந்த இறைவன் "நானும் பெருமாளின் தரிசனத்திற்கு காத்திருக்கிறேன். மூவரும் மகாவிஷ்ணுவின் தரிசனத்திற்கு தவம் இருப்போம்," என்றார். இவர்களுடன் உதங்க முனிவரும் சேர்ந்து தவம் இருந்தார். நீண்ட காலத்திற்கு பின் மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி ஸமேதராக நால்வருக்கும் காட்சி தந்தார். அப்போது ஐராவதேஸ்வரர், பெருமாளிடம், "பெருமாளே! நீங்கள் காட்சி கொடுத்த இந்த இடம் இன்று முதல் வைகுண்ட விண்ணகரம் எனவும், உங்கள் திருநாமம் வைகுண்டநாதர் எனவும் அழைக்கப்பட வேண்டும்," என வேண்டுகோள் விடுத்தார். அவ்வாறே வைகுண்டவாசனாக பூலோகத்தில் இருக்கிறார். பெருமாள் வைகுண்ட நாதன் எனவும், தாயார் வைகுந்தவல்லி எனவும் அழைக்கப்படுகின்றனர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 75

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 20

ஸ்கந்தம் 03

ஸ்வாயம்புவ மனு தன் மகள், மனைவி இருவரின் விருப்பத்தையும் அறிந்துகொண்டு, நற்குணக் கொள்கலனான கர்தம மஹரிஷிக்கு தன் மகளான தேவஹூதியை மகிழ்ச்சியோடு கன்னிகாதானம் செய்து கொடுத்தார்.

அவளுக்கு விவாஹ காலத்தில் கொடுக்க வேண்டிய அத்தனை சீர் வரிசைகளையும், ஆபரணங்களையும், குடும்பத்திற்கு வேண்டிய அனைத்து உபகரணங்களையும் மகிழ்ச்சியோடு கொடுத்தார்.


பெண்ணைத் தகுந்த வரனுக்குத் திருமணம் செய்து கொடுத்து கவலை நீங்கப் பெறினும், அவளைப் பிரிவதனால் மிகுந்த மன வருத்தம் கொண்டார். பாசத்துடன் நா தழுதழுக்க 'அம்மா, மகளே', என்று கேவிக் கலங்கி அழுதார்.

பின்னர் பலவாறு மணமக்களை ஆசீர்வதித்து விட்டு மனைவியுடனும், பரிவாரங்களுடனும் கிளம்பினார்.

கர்தமரிடம் விடைபெற்றுக் கொண்டு ஸரஸ்வதி நதியின் இரு‌ மருங்கிலும் அமைந்துள்ள முனிவர்களின் ஆசிரமங்களின் அழகை ரசித்துக் கொண்டே தன் தலைநகரான பர்ஹிஷ்மதி நகருக்குள்‌ நுழைந்தார். ப்ரும்மாவர்த்தத்தில் இருந்து தமது அரசன் திரும்பி வருவது கண்டு குடிமக்கள் மகிழ்ந்து மேள தாளங்களுடன் வரவேற்றனர்.

அனைத்துச் செல்வங்களும் நிரம்பியது மனு மன்னனின் தலைநகரமான பர்ஹிஷ்மதி நகரம். ரஸாதலத்தில் இருந்து பூமியைத் தூக்கி வந்த யக்ஞ வராஹ மூர்த்தி தன் உடலைச் சிலிர்த்துக் கொண்ட போது அவரது ரோமங்கள் இங்கு விழுந்தன. அவை பச்சை நிறம் கொண்ட தர்பைகளாகவும் நாணல்களாகவும் ஆகின. அவற்றைக் கொண்டு முனிவர்கள்‌ வேள்விகளுக்கு இடையூறு செய்யும் அரக்கர்களை விரட்டியடித்தனர்.

மனு இந்த தர்பைகளைப் பரப்பி யக்ஞ புருஷரான நாராயணனை பூஜித்தார். அந்த தர்பைகளுக்கு பர்ஹிஸ் என்று பெயர். அந்த நாணல்கள் நிரம்பிய நகரம் பர்ஹிஷ்மதி.


தன் அரண்மனைக்குள் சென்று தர்மத்துடன் கூடிய வாழ்க்கையை நடத்தினார். கந்தர்வர்கள்‌ அதிகாலையில்‌ அவர் புகழைப் பாடிய போதும், அதில் மனத்தைச் செலுத்தாமல், ஸ்ரீ ஹரியின் புகழையே மனதார நினைத்தார்.

பகவான் விஷ்ணுவின் புகழையே நினைப்பது, அவரது திருவிளையாடல் புராணங்களையே கேட்பது, அதையே நினைத்து நினைத்து உருகுவது, அதைப் பற்றியே எழுதுவது, அதை உலகெங்கும் பரப்புவது என்று இருந்ததனால், அந்த மன்வந்தரம் முழுவதும் அவரது நேரம் வீணாகவே இல்லை.

இவ்வாறு மனு தனது ஜாக்ரத் (விழிப்பு), ஸ்வப்னம் (கனவு), ஸுஷுப்தி (தூக்கம்) மூன்று நிலைகளிலும், ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களின்‌ நிலைகளிலும் பகவானிடமே பக்தி செய்தார்.

இவ்வாறே ஸ்வாயம்புவ மனு தன் 71 சதுர் யுகங்களையும்‌ கழித்தார். விதுரா, பகவான் ஸ்ரீ ஹரியைச் சரணடைவோரை உடல் பற்றிய, விதிப் பயனால் விளையக் கூடிய, மற்றும் ஜீவ ராசிகளாலும்‌  மனிதர்களாலும், உண்டாகக் கூடிய துன்பங்கள் என்ன செய்து விடும்? 

அனைத்து ஜீவராசிகளுக்கும்‌ நன்மையைச் சிந்திக்கும் ஸ்வாயம்புவ‌ மனு முனிவர்களின்‌ வேண்டுகோளுக்கிணங்க அனைத்து வர்ணசிரமங்களின்‌ நியதியை வகுத்தார். அதுவே இன்றும் மனுநீதி என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

மிகவும்‌ அற்புதமான மனுவின் சரித்ரம் புண்ணியகரமானது. தொடர்ந்து அவரது மகளான தேவஹூதியின் கதையைப் பார்ப்போம், என்றார் மைத்ரேயர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்